ஆசிரியர் இல்லா ஊர் நன்மை பயக்காது - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, September 05, 2022

Comments:0

ஆசிரியர் இல்லா ஊர் நன்மை பயக்காது

சுக்கு, மிளகு, திப்பிலி மூன்றாலாகிய கடுகம் உடல்நோயைப் போக்கி நலம் நல்கும். அதுபோல் நான்கடியாலான திரிகடுகம் முதல் மூன்றடிகளில் அறியாமையைப் போக்குகிறது. எண்ணற்ற நன்னெறிகளைக் கூறும் நல்லாதனார் கல்வியின் அவசியம், எத்தகைய கல்வி நலம் பயக்கும், ஆசிரியரின் பெருமை எனக் கல்வியின் சிறப்புகளைப் பட்டியலிட்டுக்காட்டுகிறார்.

இன்றைய நாளில் ஆசிரியர் இல்லாமலேயே மாணவர் கற்கும் நிலையும் காண்கிறோம். ஆனாலும் மாணவர்களின் தனிமனித ஒழுக்கத்திற்கும் சமூக மேம்பாட்டிற்கும் உற்ற துணையாய் நிற்கும் ஆசிரியச் சமூகத்தின் இடத்தை, இட்டு நிரப்ப யாரால் முடியும்?

திரிகடுகம் வாழ்வில் நன்மை பயக்காதவை என்று சிலவற்றைக் குறிப்பிடுகிறது.

கணக்காயர் இல்லாத ஊரும் பிணக்கு அறுக்கும்

மூத்தோரை இல்லாஅவைக் களனும் பாத்து உண்ணாத்

தன்மையிலாளர் அயல் இருப்பும் இம்மூன்றும்

நன்மை பயத்தல் இல். (பாடல் - 10)

கணக்காயர் என்ற சொல் நெடுங்கணக்கு முதலியவற்றைக் கற்பிக்கும் ஆசிரியரைக் குறிக்கிறது. நல்ல கல்வி கற்பிக்க தக்கவர் இல்லாத ஊரிலிருப்பது பயனற்றது என்பதே இதன் பொருள்.

கணக்காயர் என்ற தமிழ்ச்சொல்லைக் "கற்றதூஉமின்றிக் கணக்காயர் பாடத்தாற் பெற்றதாம் பேதையோர் சூத்திரம்' என நாலடி கூறுகிறது. கற்கும் கல்வி நலம் விளைவிப்பதாக இருக்க வேண்டும். கற்க வேண்டும் என்பதற்காக கண்டதையும் கற்கக் கூடாது. எதைக் கற்க வேண்டும் என வழிகாட்ட ஆசிரியர் தேவை. கற்க வேண்டியதைக் கண்டு தெளிந்து கற்பவன் பண்டிதன் ஆவான் என்பதே கண்டதைக் கற்க பண்டிதன் ஆவான் என்ற முதுமொழி.

பலவற்றை வாசித்து ஆராய்ந்து தெளிந்து கற்பதே பெருமைபெற்ற நல்லவர்களது கொள்கை ஆகும்.

வருவாயுட் கால் வழங்கி வாழ்தல் செருவாய்ப்பச்

செய்தவை நாடாச் சிறப்புடைமை-எய்தப்

பலநாடி நல்லவை கற்றல் இம்மூன்றும்

நலமாட்சி நல்லவர் கோள். (பாடல்.21)

கல்வி அனைத்திலும் தலைசிறந்தது. அதனால்தான் நல்லாதனார் பல்லவையுள் நல்லவை கற்றலும் என அழுத்தம் கொடுக்கிறார்.

நுண்மொழி நோக்கிப் பொருள்கொளலும், நூற்குஏலா

வெண்மொழி வேண்டினும் சொல்லாமை, நல்மொழியைச்

சிற்றினம் அல்லார்கண் சொல்லலும் இம்மூன்றும்

கற்றறிந்தார் பூண்ட கடன். (பாடல்.32)

நூல்களில் உள்ள சொற்களை ஆராய்ந்து நுட்பமாகப் பொருள் அறிதலும், நூல்களுக்குத் தகாப் பயனற்ற சொற்களை மற்றவர் விரும்பினாலும் கூறாது இருத்தலும், உயிர்க்கு உறுதிபயக்கும் சொற்களைப் பண்பில்லாதவரிடத்துச் சொல்லுதலும் என இவற்றைக் கற்றறிந்தவர் மேற்கொள்ள வேண்டிய கடமையாகக் கூறுகிறார்.

கற்பிப்பவர் முக மலர்ச்சியுடன் கற்றுத் தந்தால் கற்போர் நெஞ்சில் கல்வி கல்மேல் எழுத்துபோல் பதியும்.

கால் தூய்மை இல்லாக் கலிமாவும் (பாடல்.46) எனத் தொடங்கும் பாடலில் சீறிக் கறுவி வெகுண்டுரைப்பான் பள்ளி இம்மூன்றும் என்ற அடிகளில் மாணவர் மேல் சீற்றம் கொண்டு சினந்து பாடம் சொல்லிக் கொடுப்போர் உள்ள கல்விச் சாலை இவற்றை அறிவுடையோர் விரும்புவதில்லை என்கிறது திரிகடுகம். மேலும் மனிதர்களில் மிக உயர்ந்தவர்கள் எனக் குறிப்பிடும்போது வல்லிதின் சீலம் இனிது உடைய ஆகாறும் (பாடல்.26) என்கிறது.

ஒழுக்கத்தில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களே தலைசிறந்தவர்கள் என்பது புலனாகிறது. மேலும் திரிகடுகத்தில் யாருக்கு நல்லுலகு இல்லை எனும்போது கற்றாரைக் கைவிட்டு வாழ்ந்தவனுக்கு என்கிறது.

நாம் இவ்வுலகில் நெறிதவறாத வாழ்க்கை வாழ கல்வி சிறந்த அணியாக விளங்குகிறது. கற்றவர் சொல்லுக்கும் செயலுக்கும் என்றும் தனி மதிப்புண்டு. வாழ்க்கைக்கு நன்மைகளைச் சொல்லும் நூல்களைக் கற்பதுபோல் இனிதான செயல் வேறு ஒன்றும் இல்லை.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews