அரசு உத்தரவையும் மீறி டியூசனு எடுக்கும் ஆசிரியர்கள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, July 01, 2018

Comments:0

அரசு உத்தரவையும் மீறி டியூசனு எடுக்கும் ஆசிரியர்கள்


தமிழகத்தை பொறுத்தவரை சுமார் 5030 அரசு மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. குமரி மாவட்டத்தில் 54 அரசு மேல்நிலை பள்ளிகள், 64 அரசு உதவிபெறும் மேல்நிலை பள்ளிகள், 22 சுயநிதி மேல்நிலை பள்ளிகள், 96 மெட்ரிக் மேல்நிலை பள்ளிகள் உள்ளன. இதில் பெரும்பாலான பள்ளிகளில் பிளஸ் 2 படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு வகுப்புகள் நடத்தும் ஆசிரியர்கள் தனியாக டியூசன் சென்டர் நடத்தி வருகின்றனர்.

அந்த சென்டரில் கட்டாயமாக மாணவ, மாணவிகளை படிக்க அழைக்கின்றனர். இப்படி டியூசன் எடுக்கும் ஆசிரியர்கள் வகுப்புகளில் சரியாக பாடங்களை நடத்துவது இல்லை என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. ஆனால் டியூசன் சென்டர்களில் வகுப்புகளை தெளிவாக மாணவ, மாணவிகளுக்கு புரியும் வகையில் நடத்துகின்றனர். இதனால் கணிதம், வேதியியல், இயற்பியல் பாடங்களை எடுத்து படிக்கும் மாணவ, மாணவிகள் கட்டாயம் இந்த டியூசனுக்கு செல்லவேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

இதனை சாதகமாக்கி ஆசிரியர்கள் ஒரு பாடத்திற்கு 7500 கட்டணம் வசூலிக்கின்றனர். இங்கு மாணவ, மாணவிகளை ஒரே இடத்தில் வைத்து ஒலிபெருக்கி மூலம் பாடங்கள் நடத்துகின்றனர். இதற்காக பல ஆசிரியர்கள் சேர்ந்து மண்டபங்கள் வாடகைக்கும், விலைக்கும் வாங்கியுள்ளனர்.

கடந்த வருடம் மத்திய அரசு எம்பிபிஎஸ் மற்றும் பல மருத்துவப்படிப்புகளுக்கு மாணவர்கள் சேர்ப்புக்கு நீட் என்னும் தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வு கட்டாயம் என அறிவித்தது. அதன்படி மாணவர்கள் நீட் தேர்வை எழுதி வருகின்றனர். மருத்துவ படிப்புக்கு செல்லும் மாணவர்கள் கண்டிப்பாக நீட் தேர்வு எழுத வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளதால், டியூசன் சென்டர்களில் நீட் தேர்வுக்கு என்று தனியாக பாடம் நடத்தப்படுகிறது.

இதற்காக ஒரு மாணவருக்கு 20 ஆயிரம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. குமரி மாவட்டத்தில் பல இடங்களில் ஆசிரியர்கள் ஒருங்கிணைந்து வகுப்புகளை நடத்தி பல லட்சம் பணம் சம்பாதித்து வருகின்றனர்.

இதுபோல் தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் டியூசன் சென்டர்களை நடத்தி வருகின்றனர். தமிழக அரசு பள்ளிகளில் வேலைபார்க்கும் ஆசிரியர்கள் டியூசன் நடத்தக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த உத்தரவை மதிக்காமல் அவர்கள் குழுவாக சேர்ந்து பணம் பார்க்கும் வேலைகளை செய்து வருகின்றனர்.


இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘குமரி மாவட்டத்தில் ஆசிரியர்கள் ஒன்றிணைந்து நடத்தும் டியூசன் சென்டர்களில் குறைந்தது 50 முதல் 100 மாணவ, மாணவிகள் இருப்பார்கள். மெட்ரிக் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளும் இந்த டியூசன்களில் படிக்க செல்கின்றனர். டியூசனில் வகுப்புகளை எடுக்கும் அக்கறையை பள்ளியில் ஆசிரியர்கள் காண்பிக்க வேண்டும். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க மாவட்ட கல்வித்துறையும், தமிழக அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

👍Join Our WhatsApp Group👇Click Here


No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews