நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆஜராகாத இரு பள்ளிக்கல்வித்துறை ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பிடிவாரண்ட்: உயர் நீதிமன்றம் உத்தரவு
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆஜராகாத பள்ளிக் கல்வி செயலாளர் காகர்லா உஷா, இயக்குனர் நந்தகுமார் ஆகியோருக்கு எதிராக ஜாமீனில் வெளிவரக்கூடிய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலைச் சேர்ந்தவர் சின்னத்தாய். கரிவலம்வந்தநல்லூர் அரசு மேனிலைப்பள்ளியில் தொகுப்பூதிய அடிப்படையில் தூய்மைப் பணியாளராக கடந்த 1988ல் நியமிக்கப்பட்டார். தன்னை பணி நிரந்தரம் செய்யக்கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இதனை விசாரித்த உயர் நீதிமன்றம், மனுதாரரை பணி நிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம் மற்றும் அனைத்து பணப்பலன்களையும் வழங்க உத்தரவிட்டது. இந்த உத்தரவு நிறைவேற்றப்படவில்லை. இதனிடையே சின்னத்தாய் உயிரிழந்ததால், அவரது மகன் பரமன் தரப்பில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, பள்ளிக் கல்வித்துறை செயலர் காகர்லா உஷா, பள்ளி கல்வித்துறை இயக்குநர் நந்தகுமார், நெல்லை மாவட்ட கல்வி அலுவலர் வசந்தா ஆகியோர் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டது.
இந்த மனு நீதிபதி பட்டு தேவானந்த் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மாவட்ட கல்வி அலுவலர் வசந்தா நேரில் ஆஜரானார். ஆனால், ஐஏஎஸ் அதிகாரிகள் காகர்லா உஷா மற்றும் நந்தகுமார் ஆகியோர் சார்பில் நேரில் ஆஜராக விலக்கு கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கூட்டம் இருப்பதால் ஆஜராக முடியவில்லை. இதனால் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை ஏற்க மறுத்து, "காகர்லா உஷா, நந்தகுமார் ஆகியோருக்கு எதிராக ஜாமீனில் வெளிவரக்கூடிய பிடியாணை பிறப்பிக்கப்படுகிறது. இருவரையும் சென்னை மாநகர் காவல் ஆணையர் செப். 11-ல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும்" என நீதிபதி உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.