2023-2024ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட் மார்ச் 2வது வாரம் தாக்கல் - முக்கிய அறிவிப்புகள் வெளியாகும்!!!
தமிழ்நாடு அரசின் 2023-2024ம் ஆண்டுக்கான பட்ஜெட் மார்ச் 2வது வாரம் தாக்கல் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த பட்ஜெட் கூட்டத்தில் மகளிருக்கான உரிமைத்தொகை ரூ.1000 அறிவிக்கவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் வருகின்ற மார்ச் மாதம் 2வது வாரம் அதாவது 17ம் தேதி கூட்டப்படலாம் என்று கூறப்படுகிறது. அன்றைய தினம் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தமிழக அரசின் 2023-2024ம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்ட அறிக்கையை தாக்கல் செய்வார். காகிதம் இல்லாத பட்ஜெட்டாக இந்த வரவு-செலவு திட்டம் வாசிக்கப்பட இருக்கின்றது.
பட்ஜெட் தாக்கல் செய்த பிறகு, சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வு குழு கூட்டம் கூடி எத்தனை நாட்கள் வரவு-செலவு திட்டத்தின் மீது விவாதம் நடத்த வேண்டும் என்று முடிவு எடுத்து அறிவிக்கப்படும். பட்ஜெட் தாக்கல் முடிந்த அடுத்த நாள், 2023-2024ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்வார். அலுவல் ஆய்வு கூட்டத்தில், தொடர்ந்து மானிய கோரிக்கை கூட்டத்தை நடத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டு முடிவு அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு தாக்கல் செய்யப்படும் 3வது பட்ஜெட் இதுவாகும். இந்த பட்ஜெட்டில், திமுக தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட பல்வேறு புதிய அறிவிப்புகள் மற்றும் திட்டங்களை அறிவிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. குறிப்பாக, 2021ம் ஆண்டு திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி, ‘மகளிர் உரிமைத் தொகையான ரூ.1000 வழங்கப்படுவதற்கான அறிவிப்பு இந்த பட்ஜெட்டில் வெளியாகலாம்’ என்று கூறப்படுகிறது. காரணம், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் பிரசாரம் செய்தபோது, திமுக தேர்தல் வாக்குறுதியான மகளிருக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கும் திட்டம் இன்னும் 5 அல்லது 6 மாதங்களில் செயல்படுத்தப்படும் என்று கூறினார். அதன்படி, இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு, தமிழகம் முழுவதும் தகுதியான பெண்கள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டால் மட்டுமே 5 மாதங்களில் உதவித்தொகை வழங்கும் பணியை தொடங்க முடியும். இதனால், தமிழ்நாடு அரசின் 2023-2024ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்வது தமிழக மக்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.