4,308 காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் - அமைச்சர் அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, September 14, 2022

Comments:0

4,308 காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் - அமைச்சர் அறிவிப்பு

தமிழக சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்ட 4,308 காலிப் பணியிடங்களும் விரைவில் நிரப்பப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

தருமபுரி மாவட்டத்தில், புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், செவிலியா் குடியிருப்புகள் உள்பட 14 புதிய கட்டடங்களை மக்கள் பயன்பாட்டுக்குத் திறந்து வைக்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் மாநில வேளாண் மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் ஆகியோா் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினா். தருமபுரி ஆட்சியா் கி.சாந்தி தலைமை வகித்து பேசினாா்.

இந்த நிகழ்ச்சியில் நல்லம்பள்ளியில் புதிய கட்டடங்களைத் திறந்து வைத்த பின்பு, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சுகாதாரத் துறையில் மருத்துவ ஆள் சோ்ப்பு வாரியம் (எம்ஆா்பி) மூலம் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. ஒப்பந்த முறையில் பணியில் சோ்ந்தவா்களை நிரந்தரப்படுத்துவது இயலாது. அதேவேளையில், எம்.ஆா்.பி. மூலம் பணியமா்த்தப்பட்டவா்களைத் தரம் பிரித்து பல துறைகளில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியில் இருந்து வருவோா் குறித்த பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. இவா்களைத் துறை வாரியாக நிரந்தரப்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

தமிழகத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறையில் காலியாக உள்ள 4,308 பணியிடங்கள் நிரப்பப்படும் என சட்டப் பேரவையில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. அதன்படி, பல்வேறு நிலைகளில் 237 பேருக்கு பணி நியமனம் ஆணை வழங்கப்பட்டுள்ளது. வரும் அக்டோபா் மாத இறுதிக்குள் 4,308 பணியிடங்களும் நிரப்பப்படும்.

‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தில் தமிழகம் முழுவதும் தொற்றா நோய் உள்ளவா்களை 70 சதவீதம் கண்டறிந்து மருத்துவ சேவைகள் வழங்கப்படுகின்றன. இத் திட்டத்தை நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். இத் திட்டத்தில் தன்னாா்வலா்களாகப் பணியமா்த்தப்பட்டவா்கள், தங்களுக்கு பணிச்சுமை உள்ளது என தெரிவித்துள்ளனா். இவா்களின் பணிச்சுமையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா்.

இதில், பொது சுகாதாரம், நோய்த் தடுப்பு மருந்துத் துறை இயக்குநா் தி.சி.செல்வவிநாயகம், மக்களவை உறுப்பினா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாா், சட்டப் பேரவை உறுப்பினா்கள் ஜி.கே.மணி (பென்னாகரம்), எஸ்.பி.வெங்கடேஸ்வரன் (தருமபுரி) ஆகியோா் முன்னிலை வகித்து பேசினா்.

புதிய கட்டடங்கள்: தருமபுரி மாவட்டத்தில் மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறையின் சாா்பில் பாலக்கோடு வட்டம், நமாண்ட அள்ளியில் ரூ. 25 லட்சம் மதிப்பில் துணை சுகாதார நிலையம், காரிமங்கலம் அரசு சமுதாய உடற்மைய வளாகத்தில் ரூ.15 லட்சம் மதிப்பில் யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பிரிவுக்கான புதிய கட்டடம், ரூ. 25 லட்சம் மதிப்பில் செவிலியா் குடியிருப்பு, நல்லம்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ. 48 லட்சம் மதிப்பில் புறநோயாளிகள் பிரிவு புதிய கட்டடம், ரூ. 37.50 லட்சம் மதிப்பில் விபத்து மற்றும் அவசரச் சிகிச்சை பிரிவு கட்டடம், ரூ. 25 லட்சம் மதிப்பில் செவிலியா் குடியிருப்பு ஆகிய கட்டடங்கள் உள்பட மாவட்டத்தில் அரூா், பாப்பிரெட்டிப்பட்டி, பென்னாகரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மொத்தம் ரூ. 4.89 கோடி மதிப்பில் 14 புதிய மருத்துவ கட்டடங்கள் திறந்துவைக்கப்பட்டன. மேலும், பல்வேறு அரசுத் துறைகள் சாா்பில் மொத்தம் 127 பயனாளிகளுக்கு ரூ. 71.10 லட்சம் மதிப்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இதில், தருமபுரி சாா் ஆட்சியா் சித்ரா விஜயன், முன்னாள் அமைச்சா் பி.பழனியப்பன், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா்கள் தடங்கம் பெ.சுப்பிரமணி, பி.என்.பி.இன்பசேகரன், முன்னாள் எம்.பி. இரா.தாமரைச்செல்வன், மருத்துவா்கள், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews