ஆசிரியர் பணிக்கான வயது வரம்பு 5 ஆண்டு உயர்வு: முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வெழுத 2 லட்சம் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, October 20, 2021

Comments:0

ஆசிரியர் பணிக்கான வயது வரம்பு 5 ஆண்டு உயர்வு: முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வெழுத 2 லட்சம் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

ஆசிரியர் பணிக்கான வயது வரம்பு 5 ஆண்டுகள் உயர்த்தப்பட்டுள்ளதால், டிஆர்பி நடத்த உள்ள முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்க சுமார் 2 லட்சம் பி.எட். பட்டதாரிகளுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

அண்மையில் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்த, முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு முதல்முறையாக வயது வரம்பு கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டது. இதன்படி பொதுப்பிரிவினருக்கு 40, இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 45 என வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டது.

இதனால் அதிர்ச்சியடைந்த, 40 வயதைக் கடந்த பி.எட். பட்டதாரிகள் வயது வரம்பை தளர்த்தக் கோரி போராட்டங்களில் ஈடுபட்டதுடன், முதல்வர், அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.

இந்நிலையில், ஆசிரியர் பணிக்கான வயது வரம்பை 5 ஆண்டுகள் உயர்த்திபள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர் காகர்லா உஷா நேற்று முன்தினம் இரவு அரசாணை வெளியிட்டார்.

அதில் கூறியிருப்பதாவது:

ஆசிரியர் நேரடி நியமனம் தொடர்பான வயது உச்சவரம்பு பொதுப்பிரிவினருக்கு 40-ல் இருந்து 45 ஆக வும், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 45-ல் இருந்து 50 ஆகவும் உயர்த்தப்படுகிறது. ஆசிரியர் தேர்வு வாரியத் தால் கடந்த செப்.9-ம் தேதி வெளியிட்ட,முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு அறிவிப்புக்கு இது பொருந்தும்.

2022-ம் ஆண்டு வரை

இவ்வாறு உயர்த்தப்படும் உச்ச வரம்பு 31.12.2022 வரை சிறப்பு நிகழ்வாக ஒருமுறை மட்டுமே நிர்ணயிக்கப்படுகிறது. அதுவரை வெளியிடப்படும் ஆசிரியர் பணி நியமனம் தொடர்பான அறிவிக்கைகளுக்கு இது பொருந்தும்.

மேலும், மனிதவள மேலாண்மைத் துறை கடந்த செப்.13-ம் தேதி வெளியிட்ட அரசாணையின்படி, நேரடி நியமனத்துக்கான உச்ச வயது வரம்பு 1.1.2023 முதல் பொதுப்பிரிவினருக்கு 42 ஆகவும், இதரப் பிரிவினருக்கு 47 ஆகவும் நிர்ணயிக்கப்படுகிறது.

இவ்வாறு அரசாணையில் தெரிவிக் கப்பட்டுள்ளது.

ஆசிரியர் பணிக்கான வயது வரம்பு 5 ஆண்டுகள் உயர்த்தப்பட்டுள்ளதால், சுமார் 2 லட்சம் பி.எட். பட்டதாரிகளுக்கு, முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்த தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் அக். 31-ம்தேதியாகும். தற்போது வயதுவரம்பு உயர்த்தப்பட்டுள்ளதால், விண்ணப்ப காலஅவகாசம் நீட்டிக்கப்படும். அதேபோல, இணையவழி தேர்வு தேதியும் தள்ளிப்போகும் சூழல் உருவாகும்.

முதல்வருக்கு நன்றி

தங்கள் கோரிக்கையை ஏற்று, வயதுவரம்பை உயர்த்த ஆணையிட்டமைக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின், பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, துறையின் முதன்மைச் செயலர் காகர்லா உஷா,பள்ளிக்கல்வி ஆணையர் கே.நந்தகுமார் ஆகியோருக்கு, தமிழ்நாடு ஆசிரியர் சங்கத் தலைவர் பி.கே.இளமாறன் மற்றும் 40 வயதைக் கடந்த பி.எட். பட்டதாரிகள் நன்றி தெரிவித்துள்ளனர்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews