Breaking

Thursday, February 04, 2021

அண்ணா பல்கலை.யில் 69% இட ஒதுக்கீடு: அமைச்சர் கே.பி.அன்பழகன் பேட்டி

அண்ணா பல்கலைக்கழகத்தில் 69% இட ஒதுக்கீட்டை வலியுறுத்துவோம் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.இ., எம்.டெக்., எம்.பிளான்., எம்.ஆர்க், எம்.எஸ்சி, எம்பிஏ உள்ளிட்ட முதுகலைப் பட்டப்படிப்புகள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. இதில் எம்.டெக். பிரிவில் 17 வகையான துறைகளில் பாடங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் மத்திய அரசின் நிதி உதவியுடன் எம்.டெக். உயிரித் தொழில்நுட்பவியல் (bio technology) மற்றும் கணக்கீட்டு உயிரியல் (computational biology) துறைகள் நடத்தப்பட்டு வந்தன. இதனால் 50 சதவீத இடங்கள் மத்திய அரசுக்கு வழங்கப்பட்டு வந்தன. இந்நிலையில் மத்திய அரசுக்கு 50% இடங்களை வழங்க முடியாது எனத் தமிழக அரசு அறிவித்து, வழக்கமான 69 சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடக்கும் எனத் தெரிவித்தது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, எம்.டெக். உயிரித் தொழில்நுட்பவியல் மற்றும் கணக்கீட்டு உயிரியல் ஆகிய இரண்டு முதுகலைப் பட்டப் படிப்புகளுக்கான நடப்பு ஆண்டு (2020- 2021) மாணவர் சேர்க்கை நிறுத்தப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது. இது தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கில், எம்.டெக். படிப்பில் இரு பாடப்பிரிவுகளை ரத்து செய்தது அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அழகல்ல என்று சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் தொடர்ச்சியாக 69% இட ஒதுக்கீட்டை மேற்கொள்ளுமாறு மத்திய அரசை வலியுறுத்துவோம் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த அவர், இத்தகவலைத் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தவர்கள் உள்ளிட்ட பிரிவினர்களுக்கு மொத்தம் 69 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog