👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
ஒரே வாரத்தில் 6,030 கலைச் சொற்களை உருவாக்கிய 2,988 கல்லூரி மாணவியருக்கு தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.
செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் மற்றும் சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரி சார்பில் அகராதியியல் விழிப்புணர்வுக் கருத்தரங்கம், கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட அமைச்சர் க.பாண்டியராஜன் பேசியது:
அகரமுதலி இயக்ககத்தில் மாதம் இரண்டு நாள்கள் நடைபெறும் தமிழ்க்கலைக் கழகம் வாயிலாக இதுவரை 12 ஆயிரம் புதிய தமிழ் கலைச் சொற்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இவை அரசின் ஆணைக்காகக் காத்திருக்கின்றன. குறிப்பாக எத்திராஜ் கல்லூரியைச் சேர்ந்த 2,988 மாணவிகள் 6,030 கலைச்சொற்களைச் சொல் உண்டியலில் சேர்த்திருக்கிறார்கள்.
இதன்மூலம் மொழியைக் காப்பதில் மாணவிகளுக்கு இருக்கும் அக்கறையை நம்மால் புரிந்து கொள்ளமுடிகிறது. அகரமுதலி இயக்ககம் சொற்குவைத் திட்டத்தை மாணவர்களிடமும் பொது மக்களிடமும் பரவலாகவும் சிறப்பாகவும் கொண்டு சேர்த்ததுடன், வெற்றியும் பெற்றிருக்கிறது. சிறந்த கலைச் சொற்களை உருவாக்கும் மாணவர்களைத் தமிழக அரசு பாராட்டுவதுடன் விருதும் வேலைவாய்ப்பும் வழங்குகிறது. சொற்குவை வலைதளத்தில் பொதுமக்கள் தங்கள் பெயர்களைப் பதிவு செய்து, எப்போதும் அகரமுதலி இயக்ககத்தோடு தொடர்பில் இருக்க வேண்டும் என்றார்.
சொற்களே பண்பாட்டை பிரதிபலிக்கும்: கருத்தரங்கில் கூடுதல் தலைமைச் செயலர் வெ. இறையன்பு பேசியது:
புதிய கலைச் சொற்களை உருவாக்க வேண்டிய கடமையும் கட்டாயமும் நமக்கு இப்போது ஏற்பட்டிருக்கிறது. இதற்காக இளைஞர்கள் மற்றும் மாணவர்களை மையப்படுத்தி எடுத்துச் செல்லப்படும் அகரமுதலித் திட்டம் நிச்சயம் வெற்றியடையும். அதனைக் கண்கூடாக என்னால் பார்க்க முடிகிறது.
மொழி என்பது சொற்களின் தொகுப்பு. சொற்களில்தான் தமிழர்களின் பண்பாடும், நாகரிகமும் பிரதிபலிக்கும். அவற்றை காலத்திற்கேற்றவாறு மேம்படுத்தும் கடமை மாணவர்களிடம் இருக்கிறது என்றார்.
தொடர்ந்து மாணவிகள் வழங்கிய 6,030 தமிழ்க் கலைச் சொற்களிலிருந்து 3 சிறந்த கலைச் சொற்கள் தேர்வு செய்யப்பட்டு, அவற்றை வழங்கிய மாணவிகளுக்கும், அகரமுதலிச் சொற்பயிற்சி பெற்ற மாணவிகளுக்கும் அமைச்சர் சான்றிதழ்களை வழங்கினார்.
நிகழ்வில், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் இயக்குநர் தங்க காமராசு, கணினி தொழில்நுட்ப வல்லுநர் சிவலிங்கம், எத்திராஜ் மகளிர் கல்லூரியின் நிர்வாகக் குழுத் தலைவர் சந்திராதேவி தணிகாசலம், கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் அரங்க மல்லிகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U