திடீர் தீர்மானங்களால் திக்குமுக்காடும் மாணவர்களின் எதிர்காலம்! - உயர்கல்வித்துறை சொல்வது என்ன? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, June 01, 2019

திடீர் தீர்மானங்களால் திக்குமுக்காடும் மாணவர்களின் எதிர்காலம்! - உயர்கல்வித்துறை சொல்வது என்ன?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here
`காலணா சம்பளமாக இருந்தாலும் கவர்ன்மென்ட் சம்பளமாக இருக்க வேண்டும்' என்பதே இன்றைய சூழலில் பல மாணவர்களின் குறிக்கோளாக மாறிவரும் நிலையில், தெருவுக்குத் தெரு பல பயிற்சி மையங்கள் முளைத்து வருகின்றன. ``நீங்களும் அரசாங்க அதிகாரி ஆகலாம்" என்று கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மூலம் மக்களிடையே ஆசை வலையை விரித்து வருகிறார்கள். ஆனால், தமிழக அரசால் நிறைவேற்றப்படும் திடீர் தீர்மானங்களால் ஆயிரக்கணக்கான மாணவர்களின் அரசு வேலை குறித்த கனவுகள் தவிடுபொடியாகும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி, கடந்த பிப்ரவரி 11-ம் தேதியன்று, 60-வது சமநிலைக் குழு கூட்டம் நடத்தியது. தேர்வாணைய உறுப்பினர்கள், செயலாளர்கள் மற்றும் சமநிலைக் குழு நிர்வாகிகள் பங்கேற்ற இக்கூட்டத்தில் `சில பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் வழங்கிவரும் சில புதிய பட்டப் படிப்புகள், அரசு வேலை பெறுவதற்குரிய பட்டப்படிப்புகளுக்குச் சமமானதாக அங்கீகரிக்கப்படாது' என்று முடிவு செய்யப்பட்டது.
சமநிலைக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை அரசாணையாக வெளியிடும்படி, அரசுக்குத் தேர்வாணையம் பரிந்துரை செய்தது. அதன் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள சுமார் 10 பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன் கட்டுப்பாட்டில் இயங்குகின்ற கல்லூரிகளில் இதுவரை நடத்தப்பட்டு வரும் 53 இளங்கலை பட்டப்படிப்புகளும் இதர பட்ட மேற்படிப்புகளும் அரசு வேலை பெறுவதற்குத் தகுதியானவை இல்லை என்று தனது 66-வது அரசாணையில் வெளியிட்டுள்ளது, தமிழக அரசு. கடந்த 2018 டிசம்பரிலும் அரசு வேலைகளுக்குத் தகுதியில்லாத 33 பட்டப்படிப்புகளின் பட்டியலைத் தமிழக அரசு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. தமிழக உயர் கல்வித்துறை, கல்லூரி மாணவர்களின் நலனைக் கருத்தில் கொள்ளாமல் வெளியிடும் இதுபோன்ற திடீர் முடிவுகள், பெற்றோர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. `தகுதியில்லாத படிப்புகளுக்கு ஏன் அனுமதி கொடுக்க வேண்டும்?', `இந்தப் பட்டப்படிப்புகளுக்கு அனுமதி கொடுத்தது யார்?' எனப் பல கேள்விகள், பாதிக்கப்படும் மாணவர்களிடமிருந்து பூகம்பமாய்க் கிளம்பிவருகிறது.
மதுரையில் உள்ள டோக் பெருமாட்டி பெண்கள் கல்லூரியில் படித்த மாணவிகளின் பெற்றோர் சிலரிடம் பேசியபோது, ``எங்க பிள்ளைகளை பி.சி.ஏ மாதிரியான படிப்புகளில் சேர்த்துவிட்டா, தனியார் மற்றும் அரசு வேலை இரண்டுமே சுலபமா கிடைச்சுடும்னுதான் அவுங்க விருப்பப்படி படிக்க வெச்சோம். இப்போ திடீர்னு இந்தப் படிப்பெல்லாம் செல்லாதுன்னு அரசாங்கம் பட்டியல் வெளியிடுறாங்க. தகுதி இல்லாத படிப்பை எதுக்கு பல்கலைக்கழகங்கள் அனுமதிக்கிறாங்க? இப்போ எங்க பிள்ளைகளை திருப்பிப் படிக்கவைக்க முடியுமா? இரண்டு வாரங்களுக்கு முன்னாடிதான் இந்த அறிவிப்பு வெளியே தெரியவருகிறது. பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஏப்ரலில் வந்தவுடனேயே எல்லா கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை ஆரம்பிச்சிட்டாங்க. அரசாணை பற்றிய விழிப்புணர்வு இல்லாததால, நடப்பாண்டிலும் அரசு வேலைக்குத் தகுதியில்லாத அதே படிப்புகளை பல மாணவர்கள் தேர்ந்தெடுத்து இருக்காங்க. சேர்க்கை விகிதம் குறைஞ்சு, அவுங்களோட கல்வி வியாபாரம் பாதிக்கும் அபாயம் இருப்பதால், எந்தவித முன்னறிவிப்பையும் கல்லூரி நிர்வாகமும் கொடுக்கவில்லை.
மாணவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு, அரசு வேலைக்குத் தகுதியில்லை என்று இப்போது குறிப்பிட்டிருக்கும் பட்டப்படிப்புகளை ஏற்கெனவே படித்து முடித்தவர்களுக்கும், படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கும் இந்த அரசாணை செல்லாது என்று மறுபரிசீலனை செய்து தமிழக உயர் கல்வித்துறை உத்தரவிட வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தனர். தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்தின் செயலாளர் நந்தகுமாரிடம் இதுகுறித்துக் கேட்டோம். ``கல்வியாளர்களும் துறை நிபுணர்களும் சேர்ந்து தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்தின் பரிந்துரையின்படிதான், இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அரசாங்க போட்டித் தேர்வுகள் எதையுமே எழுத முடியாது என்று தேர்வாணையம் குறிப்பிடவில்லை. டி.என்.பி.எஸ்.சி. பொதுத் தேர்வுகளுக்கு மட்டும்தான் அந்த அரசாணை செல்லுபடியாகும். உதாரணத்திற்கு ஒரு பல்கலைக்கழகத்தில் B.Sc. Applied Chemistry படித்த மாணவரின் பாடத்திட்டங்கள் B.Sc. Chemistry இளங்கலைப் படிப்பின் பாடத்திட்டத்திற்குச் சமமாக இல்லையென்றால், அவர் B.Sc. Chemistry படிப்பிற்கு உண்டான அரசாங்கப் பணிக்குத் தேர்வு எழுதமுடியாது. மற்றபடி எந்தப் பட்டதாரியும் தேர்வு எழுதக்கூடிய தகுதி வரம்பில்லாத அரசாங்கப் பணிகளுக்கு அவர்கள் விண்ணப்பிக்கலாம்" என்றார். தமிழ்நாடு உயர் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் மங்கத் ராம் ஷர்மாவிடம் இது தொடர்பாக சில கேள்விளை முன்வைத்துப் பேசினோம்..
மாணவர்களின் அரசு வேலை கனவு களவு போகுமா? ``அனைத்துப் பல்கலைக்கழகங்களில் இருந்தும், கல்வியாளர்களை வரவழைத்து ஆய்வு திட்டக்குழு நடத்தப்பட்டது. பல்வேறு புதிய படிப்புகளின் பாடத்திட்டங்களை பழைய பட்டப்படிப்புகளுடன் ஒப்பீடு செய்து 75 சதவிகிதத்திற்கும் கீழ் இருக்கும் படிப்புகள் அரசுப் பணிகளுக்குத் தகுதியில்லாதவையாக முடிவு செய்யப்பட்டுள்ளன. ஐந்து சதவிகித மாணவர்கள் மட்டுமே அரசு வேலைகளுக்கு விண்ணப்பிக்கின்றனர். மீதமுள்ள 95 சதவிகித மாணவர்கள் தனியார் வேலைகளுக்கே செல்கின்றனர். இருந்தாலும் அரசின் திடீர் முடிவுகளால் பாதிக்கப்படப்போவது, அந்தப் படிப்புகளை முடித்துவிட்டு அரசு வேலைக்காகக் காத்திருக்கும் மாணவர்கள்தான். மாணவர்களிடையே இனியாவது விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். பட்டப்படிப்பிற்கு விண்ணப்பிக்கும் முன் சமநிலைக்குழுவின் முந்தைய தீர்மானங்களை அறிந்திருக்க வேண்டும்".
கல்லூரிகளில் 2019-ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை அரசாணை வருமுன்னரே தொடங்கி விட்டதே? ``கடந்த பிப்ரவரி மாதத்திலேயே இதுபோன்ற அங்கீகாரமில்லாத பட்டப்படிப்புகளின் பட்டியலை முடிவு செய்துவிட்டோம். அதனால் பல்கலைக்கழங்களுக்கும், கல்லூரிகளுக்கும் முன்கூட்டியே இந்த அரசாணை பற்றிய விழிப்புணர்வு உண்டு. கணினி சார்ந்த படிப்புகளுக்கு கல்விச் சந்தைகளில் நல்ல வரவேற்பு கிடைப்பதால், துறைசார்ந்த அரசு வேலை வாய்ப்புகளுக்குத் தகுதியில்லை என்பதைத் தெரிந்தேதான் பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளுக்குக் கல்லூரிகளில் சீட் வாங்குவதாகப் பல்கலைக்கழகங்கள் தெரிவிக்கின்றன".
டி.என்.பி.எஸ்.சி தேர்வு எழுதுவதில் சிக்கலா? ``ஆம். இருப்பினும் குரூப் 1, குரூப் 2 போன்ற சில பொதுத்தேர்வுகளுக்கு முதுகலைப்பட்டம் தேவையில்லை. குறைந்தபட்சம் ஒரு தகுதியான பட்டப்படிப்பை மேற்கொண்டிருந்தால் போதுமானது". மங்கத் ராம் ஷர்மா குறிப்பிடுவதுபோல் பாதிக்கப்படுவது ஐந்து சதவிகித மாணவர்கள்தான் என்றாலும், புதிய பட்டப்படிப்புகளை அறிமுகம் செய்வதும் மீண்டும் அதை அரசுத் தேர்வுகளுக்கு தகுதியில்லாதனவாக அறிவிப்பதும், தமிழக உயர் கல்வித்துறை தகுந்த திட்டமிடலின்றி செயல்படுவதையே உணர்த்துகிறது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews