அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 72 லட்சமாக உயர்வு: கல்வித்துறை அதிகாரிகள் தகவல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, August 25, 2022

Comments:0

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 72 லட்சமாக உயர்வு: கல்வித்துறை அதிகாரிகள் தகவல்

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 72 லட்சமாக உயர்வு: கல்வித்துறை அதிகாரிகள் தகவல்

தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சேர்ந்துள்ள மாணவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு 72 லட்சமாக உயர்ந்துள்ளது என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அதிமுக அரசு கடந்த 10 ஆண்டுகளில் அரசுப் பள்ளிகளையும், ஆசிரியர்களையும் அரசு கையாண்ட முறையால் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்திருந்தது. இந்நிலையில், கொரோனா காலத்தில் இருந்த அச்சம் காரணமாக பெரும்பாலான மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை. அதே நேரத்தில் தனியார் பள்ளிகள் தங்கள் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை நடத்துகிறேன் என்ற போர்வையில், தொடக்கப் பள்ளி மாணவர்கள் முதல் உயர் வகுப்பில் படிக்கின்ற மாணவர்களிடம் இருந்து கறாராக கட்டணம் வசூலித்தனர்.

கொரோனா காலத்தில் ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் வெளியில் வரமுடியாத நிலை ஏற்பட்டதால், வருவாய் குறைந்த குடும்பங்களை சேர்ந்தவர்கள், தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் படிக்கவைக்க வேண்டுமா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பள்ளிகள் படிப்படியாக திறக்கப்பட்டதும், எதிர்பார்த்த அளவுக்கு மாணவ மாணவியர் பள்ளிக்கு வரவில்லை. இதையடுத்து,பாதியில் படிப்பை நிறுத்தியவர்களின் கணக்கெடுப்பை பள்ளிக் கல்வித்துறை நடத்தியது. அதில் இனம் காணப்பட்ட மாணவர்களை மீண்டும் பள்ளிகளில் சேர்க்கவும் அவர்களுக்கு வேண்டிய வசதிகள், மற்றும் இலவச பாடப்புத்தகங்கள், சீருடைகள் வழங்கி அவர்களை மீண்டும் பள்ளிகளில் சேர்த்தனர்.

அதே நேரத்தில், தனியார் பள்ளிகளில் படித்து கட்டண பாக்கி செலுத்த முடியாத நிலையில் இருந்தவர்களையும் அரசுப் பள்ளிகளில் சேர்க்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்கேற்ப பள்ளி மாணவர்களின் மாற்றுச் சான்று இல்லாவிட்டாலும் சேர்க்கை வழங்க அரசு உத்தரவிட்டது. அதனால் அதிக அளவில் மாணவர்கள் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிப்படியாக சேர்ந்தனர். கடந்த ஆண்டு வரை சுமார் 52 லட்சம் படித்து வந்த அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மாணவர் சேர்க்கை படிப்படியாக அதிகரித்து சுமார் 72 லட்சமாக தற்போது படித்து வருகின்றனர்.

மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் பாடங்களை நல்ல முறையில் நடத்தி முடிக்க வசதியாக ஆசிரியர்களின் பணிகளை குறைக்கவும் அரசு முயற்சி எடுத்து வருகிறது. அதில் ஒரு அம்சமாக 11 பதிவேடுகளை நீக்கவும், 81 பதிவேடுகளை கல்வி தகவல் மேலாண்மை முறைமை வாயிலாக இணைய வழியில் மட்டும் பராமரிக்க ஏற்பாடு செய்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews