தமிழகத்தில் அரசு ஊழியர் ஓய்வு வயது மீண்டும் 58 ஆக குறைப்பு?- பணப் பயன்களுக்கு பதிலாக பத்திரம் தருவதற்கு எதிர்ப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, August 01, 2021

Comments:0

தமிழகத்தில் அரசு ஊழியர் ஓய்வு வயது மீண்டும் 58 ஆக குறைப்பு?- பணப் பயன்களுக்கு பதிலாக பத்திரம் தருவதற்கு எதிர்ப்பு

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான ஓய்வு பெறும் வயதை மீண்டும் 58 ஆக குறைப்பது, பணப்பயன்களை பத்திரமாக தற்போதுவழங்குவது என அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக அரசில் 12 லட்சத்துக்கும் அதிகமான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அரசு சார்ந்த பொதுத்துறை ஊழியர்கள், அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களின் ஊழியர்கள் உள்ளனர். இவர்களுக்கான ஓய்வு பெறும் வயது 58 ஆக இருந்தது.

கடந்த ஆண்டு கரோனா பாதிப்பால் நிதிச் சிக்கல்களை சந்தித்து வந்த நிலையில், அப்போதைய முதல்வர் பழனிசாமி, அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 59 ஆக உயர்த்தி அறிவித்தார். இதுகுறித்த அரசாணையில், 2020 மே 31-ம் தேதி பணி ஓய்வு பெறும் அனைவருக்கும் இது பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டது. இதன்மூலம் 2020-ல் ஓய்வு பெறுபவர்களுக்கு ஓய்வுக்கால பணப் பயன்களை வழங்குவதை தவிர்த்தது. கடந்த பிப்ரவரியில் கரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்தது. அப்போது, முதல்வராக இருந்தபழனிசாமி, அரசுப் பணியாளர்களின் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தப்படும். 2021 மே 31-ம் தேதி பணியில் இருந்து ஓய்வு பெறும் பணியாளர்களுக்கும் பொருந்தும் என்று சட்டப்பேரவையில் 110-வது விதியின்கீழ் அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களிடையே ஆதரவும், எதிர்ப்பும் எழுந்தது. ஓய்வு வயது நீட்டிப்புக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.

தற்போது திமுக அரசு பொறுப்பேற்ற நிலையில், முதல்வர் தனிப்பிரிவுக்கு வந்த மனு அடிப்படையில், அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயதைமீண்டும் 58 ஆக குறைக்க முடிவு எடுத்திருப்பதாகவும், அதற்கான கோப்பு தயாரிக்கப்பட்டு முதல்வர் ஒப்புதலுக்காக காத்திருப்பதாகவும் தகவல் வெளியானது. இதன்மூலம், உடனடியாக 40 ஆயிரம் பேருக்குமேல் ஓய்வு பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.

தற்போதைய நிதி நெருக்கடி சூழலில் ஓய்வு பெறுவோருக்கு உடனடியாக பணப்பயன்கள் வழங்கப்படாது என்றும் அதற்கு பதில் ‘அரசு பத்திரம்’ வழங்கப்பட்டு, குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு அதை செலுத்தி பணம் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தலாம் என அரசு முடிவுஎடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து இத்துறையினர் கூறியதாவது: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க தலைவர் மு.அன்பரசு: கடந்த ஆட்சியில் ஓய்வு வயதை உயர்த்தியபோதே எதிர்த்தோம். தற்போதுஓய்வு வயதை குறைப்பது வரவேற்கத்தக்கதுதான். ஆனால், ஓய்வூதிய பணப் பயன்களை அரசுபத்திரமாக தருவது ஏற்கக்கூடியதுஅல்ல. பல ஆண்டுகளாக இந்தபணப் பயன்களை நம்பி குழந்தைகளின் படிப்பு, திருமணம்போன்றவற்றை நடத்த காத்திருப்போருக்கு அதிர்ச்சியாக உள்ளது.

தலைமைச் செயலக சங்கமுன்னாள் செயலாளர் கு.வெங்கடேசன்: ஜாக்டோ ஜியோ சார்பில்,ஓய்வு வயது உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தோம். தற்போது ஓய்வு பெறும் வயதுகுறைப்பு வரவேற்கத்தக்கது என்றாலும், பணப் பயன்களை பத்திரமாக வழங்குவதை ஏற்க முடியாது.

அரசு அலுவலர்கள் ஒன்றியத்தின் தலைவர் ஆர்.சண்முக ராஜ்: ஓய்வு வயதைக் குறைப்பதற்குத் அரசுக்கு திட்டம் எதுவுமிருந்தால், அதை கைவிட வேண்டும். இதனால், பணி நீட்டிப்பு பெற்ற ஏராளமான அரசு ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள். மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக மாநில அரசுஊழியர்களுக்கு சலுகை வழங்கப்படும் என்று 1989-ல் அப்போதைய முதல்வர் கருணாநிதி அறிவித்தார். அவரின் வழி வந்த ஆட்சி அரசு ஊழியர்களை வஞ்சிக்காது என்று நம்புகிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews