40 லட்சம் சிறுவர்கள் பள்ளி நிறுத்தம்: யுனிசெப் வேதனை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, August 30, 2021

Comments:0

40 லட்சம் சிறுவர்கள் பள்ளி நிறுத்தம்: யுனிசெப் வேதனை

ஆபத்தில் ஆப்கன் குழந்தைகள்; 40 லட்சம் சிறுவர்கள் பள்ளி நிறுத்தம்: யுனிசெப் வேதனை

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி உள்ளனர். அவர்கள், மனம் மாறிவிட்டதாகவும் அடக்குமுறையைக் கையாள மாட்டோம் என்றும் கூறி வருகின்றனர். ஆனால் தலிபான்களின் வார்த்தைகளில் நம்பிக்கை வைக்காத அந்நாட்டு மக்கள், உயிர் பிழைத்தால் போதும் என, அண்டை நாடுகளுக்கு தப்பியோடுகின்றனர்.

ஆப்கனில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பின்மையால் பெரியவர்களே அல்லாடி கொண்டிருக்கும் வேளையில் சிறுவர், சிறுமியர்களின் நிலை மிகவும் கவலையளிக்கும் விதமாக மாறியுள்ளது. அவர்களின் எதிர்காலம் என்னவாகுமோ என்ற வருத்தம் ஐ.நா., சபையை தொற்றிக் கொண்டுள்ளது. இந்நிலையில் ஆப்கனில் ஆய்வு செய்த, ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர்கள் நிதியமான யுனிசெப் தெரிவித்து உள்ளதாவது:

ஆப்கானிஸ்தானில் பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் உள்நாட்டு போரால் வறட்சி ஏற்பட்டுள்ளது. தற்போதைய மோதலும் பாதுகாப்பின்மையும் வறட்சியை மேலும் அதிகரித்திருக்கிறது. விலைவாசி கடுமையாக ஏறிக் கொண்டிருக்கிறது. ஏழை மக்கள் அன்றாட வாழ்வை கழிப்பதே பெரும்பாடாக இருக்கிறது. இதனால் குழந்தைகளுக்கு முறையான ஊட்டச்சத்துமிக்க உணவுகள் கிடைப்பதில்லை. பாதுகாப்பு நெருக்கடி, உணவுப் பொருட்கள் விலை உயர்வு, கடுமையான வறட்சி, கோவிட் பரவல், எதிர்வரும் கடுமையான குளிர்காலம் என, குழந்தைகள் முன்னெப்போதையும் விட அதிக ஆபத்தில் உள்ளனர். அனைத்து குழந்தைகளும் மிகுந்த அச்ச உணர்வுடன் இருக்கிறார்கள். அவர்களுக்கு மன ரீதியான ஆதரவு தேவை.

'கைவிடக் கூடாது'

குழந்தைகளுக்கு சுகாதார உதவிகளும் கிடைக்காமல் போவதால் டெங்கு, போலியோ உள்ளிட்ட நோய்களால் தாக்கப்படும் ஆபத்து உள்ளது. 40 லட்சம் சிறுவர்கள் கட்டாயப்படுத்தி பள்ளியிலிருந்து நிறுத்தப்பட்டு உள்ளார்கள். இத்தகைய இக்கட்டான சூழலில் சிறுவர்களின் நலனுக்காக நிதி அனுப்பும் அமைப்புகள் நிதியை நிறுத்துகின்றன. உலக நாடுகள் ஒருபோதும் ஆப்கன் சிறுவர்களைக் கைவிடக் கூடாது. இவ்வாறு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews