Breaking

Thursday, August 19, 2021

குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1,000: யாருக்கெல்லாம் கிடைக்கும்?

Tamil News சென்னை :குடும்ப தலைவிக்கு மாதம், 1,000 ரூபாய் உரிமை தொகை வழங்குவதற்கான பயனாளிகள் பட்டியலில், குடிசை மற்றும் வீடுகளில், 100 யூனிட்டுக்கு கீழ் மின்சாரம் பயன்படுத்துவோர் இடம்பெற வாய்ப்புள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக மின் வாரியம், குடிசை வீடுகளுக்கு இலவசமாகவும்; மற்ற அனைத்து வீடுகளுக்கும், 100 யூனிட் வரை இலவசமாகவும்; 500 யூனிட் வரை மானிய விலையிலும் மின்சாரம் வழங்குகிறது. இதற்காக ஏற்படும் செலவை, தமிழக அரசு மானியமாக வழங்குகிறது.

தற்போது, 11 லட்சம் குடிசை மின் இணைப்புகள் உள்ளன. இதுதவிர, 2.12 கோடி வீட்டு இணைப்புகளில், 100 யூனிட் வரை பயன்படுத்துவோர் எண்ணிக்கை, 73 லட்சம் என்றளவில் உள்ளது.சட்டசபை தேர்தலின் போது, 'ஆட்சிக்கு வந்தால், குடும்ப தலைவிக்கு மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும்' என, தி.மு.க., தேர்தல் வாக்குறுதி அளித்தது. உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை விரைந்து செயல்படுத்தக் கோரி, எதிர்க்கட்சிகள், அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன. இதனால், அத்திட்டத்திற்கான பயனாளிகளை அடையாளம் காண்பது குறித்து, அரசு பரிசீலித்து வருகிறது.இது குறித்து, கூட்டுறவு மற்றும் உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:வசதி படைத்த பலர், அரிசி ரேஷன் கார்டு வைத்துள்ளனர். ரேஷன் கார்டை மட்டும் அடிப்படையாக வைத்து, உரிமை தொகை வழங்குவதற்கான பயனாளிகளை தேர்வு செய்ய முடியாது. பயனாளிகளை அடையாளம் காண்பதில், பல அம்சங்கள் ஆராயப்பட்டு வருகின்றன. வீடுகளில் இரு மாதங்களுக்கு ஒரு முறை மின் பயன்பாடு கணக்கெடுக்கப்படுகிறது. இதனால், இரு மாதங்களுக்கும் சேர்த்து, 100 யூனிட்டுக்கு கீழ் மின்சாரம் பயன்படுத்துவோர், அதிக வருவாய் ஈட்ட வாய்ப்பில்லை.எனவே, உரிமை தொகை வழங்குவதற்கான மொத்த பயனாளிகளில், குடிசை மற்றும், 100 யூனிட்டுக்கு கீழ், மின்சாரம் பயன்படுத்துவோர் இடம்பெற வாய்ப்பு உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog