மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியில் ஆசிரியர்கள் - அரசு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் பாதிக்கும் அபாயம் Teachers involved in census work – Risk of impact on students appearing for government public exams.
10-ம் வகுப்பு பிளஸ் 2, மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் பட்டதாரி, பட்டமேற்படிப்பு ஆசிரியர்கள் மக்கள்தொகை கணக்கெடுப்பில் ஈடுபடுத்தப்படுவதால் காலை, மாலை சிறப்பு வகுப்புகள், பள்ளி நேர வகுப்புகளை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், நடப்பாண்டில் அரசுப் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் பாதிக்கும் அபாயம் உருவாகியுள்ளது.
வீடு வீடாகச் சென்று மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி ஆக.1-ம் தேதி தொடங்கி அந்த மாதம் முழுவதும் நடைபெறுகிறது. இந்தக் கணக்கெடுப்பில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு அதற்கான வீட்டுப் பட்டியல் மற்றும் பயிற்சி முகாம் நடந்தது.
இந்தக் கணக்கெடுப்பில் ஈடுபடுவோருக்கு 150 முதல் 250 வீடுகள் வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது. கணக்கெடுப்புப் பணியின்போது சொந்த வீடா, வாடகை வீடா, ஓட்டு வீடா, கூரை, ப்ரிட்ஜ், நெட் வசதி, கார் உள்ளிட்ட 34 வகை சொத்துப்பட்டியல் விவரங்களை பதிவுசெய்ய வேண்டும்.
தற்போது பொதுமக்கள் தங்களின் சுயவிவரங்களை ‘மக்கள்தொகை சுய கணக்கெடுப்பு’ மூலம் வீட்டில் இருந்தபடியே அதிகாரப்பூர்வ வலைதளம் வாயிலாக எளிதாகப் பதிவு செய்து கொள்ளலாம். அவற்றையும் கணக்கெடுப்பார்கள், வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்வார்கள்.
இந்நிலையில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு ஆசிரியர்கள் இந்த கணக்கெடுப்பு பணிக்கு ஆக.1 முதல் செல்ல உள்ளதால் காலை, மாலை நேரங்களில் அவர்கள் மாணவர்களுக்கு எடுக்கும் சிறப்பு வகுப்புகள் பாதிக்கப்பட உள்ளன. இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது: 10-வது, பிளஸ் 2 வகுப்புகளில் சிறப்பாகப் படிக்கும் மாணவர்களை கூடுதல் மதிப்பெண் எடுக்கவைக்கவும், கற்கும் திறன் குறைந்த மாணவர்களைத் தேர்ச்சிபெற வைக்கவும் தற்போது அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை 8.30 முதல் 9 மணி வரையும் மாலை 4.30 முதல் 5.30 மணி வரையும் தினமும் சிறப்புப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
தற்போது ஆசிரியர்களை மக்கள்தொகை கணக்கெடுப்பில் ஈடுபடுத்த உள்ளதால் அவர்கள் சிறப்புப் பயிற்சி வகுப்புகளுக்குச் செல்ல வாய்ப்பில்லை. இந்த சிறப்புப் பயிற்சி வகுப்புகள்தான் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு உதவியாக இருந்து வருகிறது.
மக்கள்தொகை கணக்கெடுப்பில் ஆசிரியர்களை ஈடுபடுத்துவது கூடுதல் பணிச்சுமையைத் தருவதாகவும், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் கல்வி பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் ஆசிரியர் சங்கங்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன.
ஆனால், அவர்களின் கருத்துகளை மாவட்ட நிர்வாகம் அரசின் கவனத்துக்குக்கொண்டு செல்லவில்லை. ஆசிரியர்களுக்குப் பதிலாக படித்த இளைஞர்கள், தன்னார்வலர்களை இப்பணிகளுக்குப் பயன்படுத்த அரசு முன்வர வேண்டும் என்று கூறினர்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.