அரசு அதிகாரிகளின் பிள்ளைகள் எத்தனை பேர்..?; அரசுப் பள்ளிகளில் தரவுகளை சேகரிக்கிறது அரசு..! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, July 28, 2021

Comments:0

அரசு அதிகாரிகளின் பிள்ளைகள் எத்தனை பேர்..?; அரசுப் பள்ளிகளில் தரவுகளை சேகரிக்கிறது அரசு..!

எத்தனை ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளின் பிள்ளைகள் அரசுப் பள்ளியில் படிக்கின்றனர் என்ற தரவுகளை அரசு சேகரித்து வருகிறது. சிறப்பு ஆசிரியர்களை நீக்குவது குறித்த மனுவை பாட்னா உயர் நீதிமன்ற நீதிபதி அனில் குமார் உபாத்யாயா விசாரித்தார். அப்போது, அதிகாரிகளின் குழந்தைகள் அரசுப் பள்ளிகளில் படிக்காத வரை கல்வி அமைப்பில் பெரிய முன்னேற்றங்கள் இருக்காது என நீதிபதி குறிப்பிட்டார். மேலும், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட எத்தனை உயர்நிலை அதிகாரிகளின் குழந்தைகள் அரசுப் பள்ளிகளில் படிக்கின்றனர் என்ற தகவல்களை சமர்பிக்குமாறு பீகார் அரசுக்கு உத்தரவிட்டார்.

இந்த இடைக்கால உத்தரவின்பேரில் தரவுகளை சேகரிக்கும் பணியில் பீகார் அரசு இறங்கியுள்ளது. பீகாரில் உள்ள 38 மாவட்டங்களிலும், ஐஏஎஸ், ஐபிஎஸ் உட்பட எத்தனை உயர்நிலை அதிகாரிகளின் குழந்தைகள் அரசுப் பள்ளிகளில் படிக்கின்றனர் என்ற தரவுகளை சமர்பிக்க வேண்டும் என ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுக்கு கல்வித் துறை கூடுதல் தலைமைச் செயலர் சஞ்சய் குமார் அறிவுறுத்தியுள்ளார். ஆகஸ்ட் 4ம் தேதிக்குள் இந்த தரவுகளை சமர்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் ஒவ்வொரு மாவட்டக் கல்வி அலுவலர்களும் உதவ வேண்டும் எனவும் கல்வித் துறை கூடுதல் தலைமைச் செயலர் வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளார்.

இதுதொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுடன் தலைமைச் செயலர் திரிபுராரி சரண் காணொலி வாயிலாக ஆகஸ்ட் 4ம் தேதி ஆலோசனை நடத்துகிறார். இது தொடர்பான தரவுகளை சேகரிப்பது நாட்டில் இதுவே முதல் முறையாக இருக்கக்கூடும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews