கோவை வேளாண் பல்கலை! தலைமை பதவிகளை அலங்கரிக்கும் முன்னாள் மாணவர்கள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, July 07, 2021

Comments:0

கோவை வேளாண் பல்கலை! தலைமை பதவிகளை அலங்கரிக்கும் முன்னாள் மாணவர்கள்

தமிழ்நாடு வேளாண் பல்கலையின் முன்னாள் மாணவர்கள், தலைமைச் செயலாளர், டி.ஜி.பி.,உள்ளிட்ட தமிழக அரசின் முக்கியப் பொறுப்புகளில் ஒரே நேரத்தில் இருப்பது, பல்கலையின் பெருமையை உலகமறியச் செய்துள்ளது.

கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலையில் பயின்ற மாணவர்கள் பலரும், சிவில் சர்வீசஸ் தேர்வுகளில் வென்று மாநில அளவிலும், தேசிய அளவிலும் மிகச்சிறந்த பொறுப்புகளை வகித்துள்ளனர்.தற்போது, கோவை வேளாண் பல்கலையின் முன்னாள் மாணவர்கள் பலரும் ஒரே நேரத்தில் தமிழகத்தின் முக்கியமான தலைமைப் பதவிகளை வகித்து பல்கலைக்கு பெருமை சேர்த்துள்ளனர். தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு, காவல்துறை தலைவர் (டி.ஜி.பி.,) சைலேந்திரபாபு, பெரியார் பல்கலை துணைவேந்தர் ஜெகநாதன், என, தமிழக அரசின் முக்கியப் பொறுப்புகளை, வேளாண் பல்கலை முன்னாள் மாணவர்கள் பலர் அலங்கரிக்கின்றனர். இவர்களில் ஜெகநாதன், இங்கு பேராசிரியராகவும் இருந்தவர். இதற்கு முன்பிருந்த, தலைமைச் செயலாளர் சண்முகமும், முன்னாள் மாணவர். வனத்துறை தலைவராக இருந்த துரைராசு, முன்னாள் சுகாதாரத்துறை செயலர் சுப்புராஜ், தமிழ்நாடு தேர்வாணையத்தலைவராக இருந்த அருண்மொழி ஆகியோரும் இங்கு படித்தவர்களே.

பசுமைப்புரட்சிக்கு வித்திட்ட எம்.எஸ்.சுவாமிநாதன், ஐ.ஆர்.எஸ்., முடித்து கஸ்டம்ஸ் கமிஷனராக இருந்த சங்கரவடிவேல், தபால் துறையில் தேசிய அளவில் தலைமைப் பொறுப்பில் உள்ள மெர்லின், தமிழக வனத்துறை தலைமை வனப்பாதுகாவலராக உள்ள அன்வர்தீன், தமிழக முதல்வரின் தனிச் செயலராக இருந்த செந்தில்குமார் உள்ளிட்ட பல்வேறு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், ஐ.ஜி., பெரியய்யா என வேளாண் பல்கலைமுன்னாள் மாணவர்களின் சாதனைப் பட்டியல் நீள்கிறது. வேளாண் பல்கலையின் முன்னாள் மாணவர்கள் தலைமைப் பொறுப்புகளில் இருக்கும்போது, தமிழகத்தில் விவசாயமும், விவசாயியும் தலை நிமிர வேண்டும் என்பதே தமிழக மக்களின் எதிர்பார்ப்பு.

'பல்கலைக்கு பெருமை'

தமிழ்நாடு வேளாண் பல்கலை துணைவேந்தர் குமார் கூறியதாவது:இங்கு மருத்துவத்தைத் தவிர, 60 வகையான படிப்புகள் கற்றுத்தரபடுகின்றன. கால்நடை பராமரிப்பு, பொருளாதாரம், சமூகவியல், உளவியல், கணிதம் என இங்கு எல்லாவற்றையும் கற்றுக் கொள்ளலாம். இங்கிருக்கும் நுாலகம், மாணவர்களுக்கு பெரும் பொக்கிஷம் எனலாம். மொழித்திறனை மேம்படுத்த மொழியியல் ஆய்வகம் உள்ளது. கடுமையாக உழைத்துப் படிக்கும் மாணவர்கள், சிவில் சர்வீசஸ் தேர்வுகளில் எளிதில் வெல்லலாம். எங்கள் பல்கலையின் முன்னாள் மாணவர்கள் பலரும், ஒரே நேரத்தில் முக்கியப் பதவிகளில் இருப்பது, பல்கலைக்குப் பெருமை. இறையன்பு, என்னுடைய மாணவர். சைலேந்திரபாபு, இங்கு படிக்கும் போதே, தனித்துவமாகத் தெரிந்தவர். நல்ல விளையாட்டு வீரர். அற்புதமான பேச்சாளர். எங்கள் பல்கலைக்கு பலமுறை வந்து, மாணவர்களுக்கு நல்ல அறிவுரைகளை வழங்கியுள்ளார். முன்னாள் மாணவர்கள், முக்கியப் பதவிகளில் இருப்பது, வேளாண் பல்கலை மாணவர்களிடம் இதற்கானஆர்வத்தை அதிகரிக்கச் செய்யும் என்று நம்புகிறோம். இவ்வாறு, துணைவேந்தர் குமார் கூறினார்.

-நமது சிறப்பு நிருபர்-

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews