Breaking

Tuesday, June 08, 2021

மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்களின் அறிக்கை - செய்தி வெளியீடு: 08-06-2021

செய்தி வெளியீடு:
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் உத்தரவுக்கிணங்க, கொரோனா பேரிடர் சூழலை தவறாக பயன்படுத்தும் தனியார் மருத்துவமனைகள்மீதும் - தன்னலம் கருதாமல் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள்மீதும் - நோயாளிகள் இறக்க நேரிடும்போது தாக்கப்படுவதை தடுக்கும் வகையில் தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் (முறைப்படுத்துதல்) சட்டத்தின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்
மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்களின் அறிக்கை
தமிழகம் முழுவதும் கொரோனாத் தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கத்திலிருந்து மக்களின் உயிர்களைக் காத்திட தமிழக அரசும், மருத்துவமனைகளும், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட அனைத்து மருத்துவப் பணியாளர்களும் அல்லும் பகலும் அயராது தம் உயிரைத் துச்சம் என மதித்து அரும்பணியாற்றி வருகின்றனர். அரசுத்துறையிலும், தனியார் துறையிலும் இவ்வாறு அயராது பணியாற்றிவரும் அனைவருடனும் தமிழக அரசு தோளோடு தோள்நின்று அவர்களுக்கு உறுதுணையாக இருந்து வருகிறது. இவ்வாறு களப்பணியாற்றி இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணத் தொகையையும் பணிபுரிந்து வருபவர்களை ஊக்கப்படுத்த ஊக்கத்தொகையையும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் உத்தரவுப்படி வழங்கியுள்ளது.
இந்த நிலையில் சில நோயாளிகளின் உயிர் இழக்க நேரிடும்போது மருத்துவமனைகளில் பணியாற்றிவரும் மருத்துவர்கள் மற்றும் பிற பணியாளர்களை அந்நோயாளிகளின் உறவினர்கள் தாக்கியுள்ள சம்பவங்கள் சில இடங்களில் நடந்துள்ளது.
மருத்துவமனைகளில் உயிரைக் காப்பாற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும், சில தருணங்களில் உயிர் இழப்பு தவிர்க்க இயலாததாகிறது.

இச்சூழலில் உணர்ச்சிவசப்பட்டு மருத்துவர்களிடமும், மருத்துவமனைப் பணியாளர்களிடமும் தரக்குறைவாக நடந்துகொள்வது அவர்கள் ஆற்றிவரும் சேவையை இழிவுபடுத்துவதாக அமையும். இத்தகைய செயல்களை தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது. இச்செயல்களில் ஈடுபடுபவர்கள்மீது காவல் துறை மூலமாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேற்கூறியவாறு மருத்துவர்களும், செவிலியர்களும், மருத்துவப் பணியாளர்களும் பெரும் சேவை செய்துவரும் நிலையில், ஒரு சில மருத்துவமனைகள் இப்பேரிடர் சூழலைத் தவறாகப் பயன்படுத்திக்கொண்டு நோயாளிகளிடம் அதிகக் கட்டணம் வசூலிப்பதாகவும்,காப்பீட்டுத்திட்டப் பயனாளிகளுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்காமல் அவர்களிடம் கட்டணம் கேட்பதாகவும் சில செய்திகள் வந்துள்ளன. மருத்துவமனைகளையும், மருத்துவர்களையும் பாதிக்காது அவர்களின் நற்பணி தொடர்ந்திட உறுதுணையாக இருக்கக்கூடிய அதேநேரத்தில், பொதுமக்களிடம் அதிகக் கட்டணம் கோரி இலாபம் அடைய நினைக்கும் மருத்துவமனைகள்மீதும், மருத்துவர்கள்மீதும் நடவடிக்கை எடுப்பதற்கும் தமிழக அரசு தயங்காது. தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் (முறைப்படுத்துதல்) சட்டத்தின்படி (TamilNadu Clinical Establishment Act) இந்த மருத்துவமனைகளின் உரிமம் இரத்து செய்யப்படுவதோடு சம்பந்தப்பட்டவர்கள்மீதும் சட்டபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி தெரிவித்துக்கொள்கிறேன்.
வெளியீடு : மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை, தலைமைச் செயலகம், சென்னை–600 009.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog