தேசிய கல்விக் கொள்கை அனைவருக்கும் பொதுவானது என்பதால், அதில் அரசின் தலையீடு குறைவாகவே இருக்கும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
34 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இது தொடர்பாக, மாநில ஆளுநர்கள், கல்வி அமைச்சர்கள் மற்றும் துணைவேந்தர்கள் பங்கேற்ற மாநாட்டில் மோடி பேசினார்.
நாட்டு மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதில் கல்விக் கொள்கையும், கல்வி முறையும் முக்கிய வழிமுறைகளாக இருக்கின்றன என குறிப்பிட்ட மோடி, கல்வி முறையில் மத்திய-மாநில அரசுகள், உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றுக்கு முக்கிய பங்கு உள்ளன என்றார்.
ஆனால் வெளிநாட்டு கொள்கை, ராணுவக் கொள்கை போன்று கல்விக் கொள்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது அல்ல எனவும் அது மக்களுக்கு பொதுவானது என்றும் அவர் அவர் விளக்கினார்.
கல்விக் கொள்கையில் கூடுதல் ஆசிரியர்களும், பெற்றோர்களும் இணைவதன் மூலம் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் அதில் இணைவார்கள் என்றார் மோடி.
சிறந்த சர்வதேச கல்வி நிறுவனங்கள் இந்தியாவில் தங்களது கிளைகளை திறக்க புதிய கல்விக் கொள்கை உதவும் என்ற மோடி, சாதாரண ஏழை குடும்பங்களை சேர்ந்த மாணவர்களும் அவற்றில் சேர முடியும் என கூறினார்.
புதிய கல்விக் கொள்கை நமது இளைஞர்களின் எதிர்கால தேவைக்கான அறிவையும், திறமைகளையும் வளர்த்துக்கொள்ள உதவும் எனவும் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.