கொரோனா ஊரடங்கு தொடர்ச்சியாக நீடித்துவந்த காரணத்தால், தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்த பள்ளிக் கல்வித்துறை, 'அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெற்றவர்களாக' அறிவித்தது. அடுத்தகட்டமாக, காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் ஏற்கெனவே மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களையும், அவர்களது வருகைப் பதிவேட்டையும் கணக்கில்கொண்டு பொதுத்தேர்வு மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டன.
தமிழக பள்ளிக் கல்வித்துறை வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு, பெரும்பான்மையான மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் வாங்கியிருப்பது பலத்த சந்தேகத்தையும், விவாத அலைகளையும் எழுப்பியிருக்கிறது.
இது குறித்துப் பேசும் ஆசிரியர் சங்க நிர்வாகிகள், ''உயிர்க்கொல்லி நோயான கொரோனா தொற்றிலிருந்து மாணவர்களைப் பாதுகாப்பதற்காக 10-ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்த அரசின் முடிவு வரவேற்கத்தக்கது. ஆனால், மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மதிப்பெண்களைக் கணக்கிடுவதில்தான் அரசு கோட்டைவிட்டுவிட்டது.
அதாவது, '10-ம் வகுப்பில் ஒரு மாணவன் காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளில் பெற்றுள்ள மதிப்பெண்களின் அடிப்படையில், 80 % மதிப்பெண்களும், அந்த மாணவனின் பள்ளி வருகைப் பதிவேட்டுக் கணக்கை அடிப்படையாக வைத்து 20 % மதிப்பெண்களுமாகக் கணக்கிட்டு அந்த மாணவனின் பொதுத்தேர்வு மதிப்பெண் நிர்ணயிக்கப்படும்' என பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது.
இதையடுத்து, மாநிலம் முழுவதுமுள்ள அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளிலிருந்து 10-ம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண்கள் மற்றும் வருகைப் பதிவேட்டு விவரங்கள் மாவட்டக் கல்வி அலுவலகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டன.
இதில், தங்கள் கைவசமிருந்த உண்மையான மதிப்பெண் பட்டியல் மற்றும் வருகைப்பதிவேடு குறித்த கணக்குகளை ஒப்படைத்த பள்ளிகளும் உண்டு. மாறாக, தங்கள் பள்ளிக்குப் பெயர் கிடைக்க வேண்டும் என்ற காரணத்துக்காக, பொய்யான ஆவணங்களை உருவாக்கி, கல்வி அலுவலகத்துக்கு அனுப்பிவைத்த பள்ளிகளும் உண்டு. குறிப்பாக, சில தனியார் பள்ளிகள், தங்கள் பள்ளி கல்வியில் சிறந்து விளங்குவதாகக் காட்டிக்கொள்வதற்காக ஏற்கெனவே உள்ள காலாண்டு, அரையாண்டு மதிப்பெண்கள் பட்டியலை மறைத்துவிட்டு, புதிதாக அதிகப்படியான மதிப்பெண்கள்கொண்ட பட்டியலைத் தயார் செய்து பள்ளிக் கல்வித்துறைக்கு அனுப்பிவைத்துள்ளன.
பள்ளிக் கல்வித்துறையும்கூட இது குறித்து அதிக அக்கறை எடுத்துக்கொண்டு அலசி ஆராயாமல், பள்ளிகள் கொடுத்த புள்ளிவிவரங்களின் அடிப்படையிலேயே மதிப்பெண்களை வாரி வழங்கியிருக்கிறது. ஒவ்வொரு தனியார் பள்ளியிலும் 500 மதிப்பெண்ணுக்கு 498, 497 மதிப்பெண்கள் வாங்கிய மாணவர்களை நிறைய பார்க்கமுடிகிறது. சிலர் 500-க்கு 500 மதிப்பெண்கள் வாங்கியிருப்பதுதான் உச்சகட்ட மோசடி.
தமிழ், ஆங்கிலம் போன்ற பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண்கள் வாங்குவதெல்லாம் அரிதிலும் அரிது. அப்படியிருக்கும்போது, இவர்கள் எப்படி 500-க்கு 500 மதிப்பெண்கள் வாங்க முடியும்? அப்படியென்றால், காலாண்டுத் தேர்வில், அனைத்துப் பாடங்களிலும் தலா 100 மதிப்பெண்கள், அரையாண்டுத் தேர்விலும் அனைத்துப் பாடங்களிலும் தலா 100 மதிப்பெண்கள் வாங்கியிருந்திருக்க வேண்டும். மேலும், ஒருநாள்கூட விடுப்பு எடுக்காமல், அனைத்துப் பள்ளி நாள்களிலும் வந்திருக்க வேண்டும். இப்படியெல்லாம் நடந்திருந்தால் மட்டுமே ஒரு மாணவன், பொதுத்தேர்வில் 500-க்கு 500 மார்க் எடுத்திருக்க முடியும். இதெல்லாம் சாத்தியம்தானா?
பள்ளிகள்தான் தங்கள் சுயநலத்துக்காக இப்படி நடந்துகொள்கின்றன என்றால், இந்தத் தவறுகளை உரிய முறையில் கண்காணித்துக் களைய வேண்டிய பள்ளிக் கல்வித்துறையும் கண்களை மூடிக்கொண்டு மதிப்பெண்களை கொட்டிக் கொடுத்திருப்பதுதான் வேதனையாக இருக்கிறது. ஏனெனில், கடந்த வருடம்தான் 10-ம் வகுப்புக்குப் புதிய பாடத்திட்டம் அறிமுகமானது. சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்துக்கு இணையான அந்தப் பாடங்களை முதன்முறையாகப் படித்துப் புரிந்துகொள்வதென்பது ஆசிரியர்களுக்கே சவாலானது. இந்த நிலையில், மாணவர்கள் எப்படி அந்தப் பாடங்களை முழுமையாக உள்வாங்கிப் படித்து, 500-க்கு 500 மதிப்பெண்கள் பெற முடியும்? இதுமட்டுமல்ல... புதிய பாடத்திட்டம் என்பதால், மிகவும் தாமதமாகத்தான் பள்ளிகளுக்கு புத்தகங்கள் விநியோகம் செய்யப்பட்டன என்பதும் இங்கே கவனிக்கப்பட வேண்டியது.
தனியார் பள்ளிகள், தங்கள் தேர்ச்சி விகிதத்தை அதிகப்படுத்திக் காட்டுவதற்காக பொதுத்தேர்வுக்குரிய பாடங்களை முந்தைய கல்வி ஆண்டிலிருந்தே கற்பித்துவருகின்றன என்ற குற்றச்சாட்டுகள் ஏற்கெனவே இருந்துவருகின்றன. இந்த நிலையில், 'தங்கள் பள்ளி மாணவர்களுக்கான மதிப்பெண்களை, தாங்களே குறித்து அனுப்பலாம்' என்று தனியார் பள்ளிகளின் கைகளில் தமிழக அரசே பேனாவைக் கொடுத்துவிட்டால், அவர்கள் என்ன செய்வார்கள்..? தங்கள் இஷ்டம்போல் தங்களுக்குத் தாங்களே மதிப்பெண் கொடுத்து, கொண்டாடித் தீர்த்துவிட்டார்கள்.
சில பள்ளிகள், முந்தைய தேர்வுகளில் குறைவான மதிப்பெண் பெற்றிருந்த மாணவர்களின் பெற்றோரிடம் தகவல் தெரிவித்தும், பணம் வாங்கிக்கொண்டும், புதிதாக 'காலாண்டு - அரையாண்டுத் தேர்வுக்கான பதில்களை' எழுதி வாங்கி சேர்ப்பித்தச் சம்பவங்களும் அரங்கேறியதைச் சில மாதங்களுக்கு முன்னரே செய்திகளில் பார்த்தோம். அப்போதே இது குறித்து அரசு எச்சரிக்கையாகக் கண்காணித்து, உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
இப்போதும்கூட, காலம் கடந்துவிடவில்லை... `வருகிற திங்கட்கிழமை (17-8-2020) 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்களை இணையத்திலிருந்து டவுன்லோடு செய்துகொள்ளலாம்’ என அரசு அறிவித்திருக்கிறது. உடனடியாக இந்த முடிவை பள்ளிக் கல்வித்துறை கைவிட வேண்டும். 'அனைத்து மாணவர்களும் தேர்ச்சி' என்ற அளவில் நிறுத்திக்கொண்டு, மாணவர்களுக்கான தனிப்பட்ட மதிப்பெண் சான்றிதழ்களை வழங்காமல் நிறுத்திவைக்க வேண்டும். மேலும், மதிப்பெண் விஷயத்தில் மோசடி செய்த பள்ளிகள்மீது உரிய நடவடிக்கை எடுத்தால்தான், இனிவரும் காலத்திலாவது இது போன்ற மோசடிகள் நடைபெறாமல் தடுத்து நிறுத்த முடியும்'' என்றனர் ஆதங்கத்துடன்.
இப்போதே சில தனியார் பள்ளிகள், தங்கள் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை போஸ்டர், ஃப்ளெக்ஸ், தினசரி செய்தித்தாள்களின் வழியே பெருமையாகப் பட்டியலிட்டு விளம்பரம் செய்ய ஆரம்பித்துவிட்டன. இந்த நிலையில், 'பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும்' என்ற உந்துதலோடு மிகக் கடுமையாக உழைத்த மாணவர்களும், அவர்களுடைய பெற்றோர்களும் அரசின் இந்த முடிவால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
இது குறித்து மாணவர் - பெற்றோர் தரப்பிலிருந்து பேசுபவர்கள், ''நல்ல மதிப்பெண் பெற வேண்டும் என்று உண்மையாகவே ராப்பகலாகக் கண்விழித்துப் படித்த பிள்ளைகள், `பொதுத்தேர்வை எழுத முடியாமல் போய்விட்டதே...’ என வருத்தத்தில் இருக்கின்றனர். கொரோனா காலகட்டத்தில் தேர்வை ரத்து செய்யும் அரசின் முடிவு சரியானதுதான். அதை நாங்கள் குறை சொல்லவில்லை. ஆனால், மாணவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப்போகும் மதிப்பெண் விவகாரத்தில், அரசு கொஞ்சமாவது கவனம் செலுத்தியிருக்க வேண்டாமா?
பள்ளி நிர்வாகம் கொடுத்த காலாண்டு, அரையாண்டுத் தேர்வு புள்ளிவிவரங்களைவைத்து ஒரு மாணவனுக்கு மதிப்பெண்களைக் கொடுத்துள்ள பள்ளி கல்வித்துறை, இது குறித்து ஆய்வு ஏதும் செய்திருக்கிறதா? கொடுக்கப்பட்ட புள்ளிவிவரங்கள் உண்மையானவைதான் என்று எப்படி ஏற்றுக்கொண்டார்கள்? சாதாரணமாக ஒரு மாணவனின் மதிப்பெண் பட்டியலிலுள்ள நாள்பட்ட எழுத்துகளுக்கும், புத்தம் புதிதாகத் தயார் செய்யப்பட்ட மதிப்பெண் பட்டியலுக்கும் கூடவா வித்தியாசம் தெரியாது? ஒரு மாணவனின் கல்வித் தரத்தை நிர்ணயம் செய்ய வேண்டுமானால், குறைந்தபட்சம் அந்த மாணவனின் மூன்று ஆண்டுக்கால கல்வித்தரத்தைப் பின்னோக்கிப் பார்க்க வேண்டாமா?
9-ம் வகுப்பிலிருந்து தேர்ச்சி பெறுவதற்கே சிரமப்பட்ட ஒரு மாணவன், 10-ம் வகுப்பு காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளில் மட்டும் எப்படி அதிக அளவில் மதிப்பெண்களைப் பெற்றிருக்க முடியும்? கடந்த வருடங்களில் இல்லாத அளவுக்கு இந்த வருடம் பெரும்பான்மையான மாணவர்கள் 450 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்திருக்கிறார்கள் என்பதே பள்ளிகள் உண்மையான தகவல்களைக் கொடுத்திருக்கவில்லை என்பதற்கான சான்றுகள்தானே?
தேர்ச்சி அடைவதற்கே மிகவும் சிரமப்படும் ஒரு மாணவன், நன்றாகப் படிக்கும் மாணவனைவிடவும் அதிக மதிப்பெண்கள் பெற்றிருப்பது அந்தக் குழந்தைகள் மனதில் எந்தவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற குறைந்தபட்ச சிந்தனையைக்கூட அரசு கவனிக்கத் தவறிவிட்டதே.
பொதுத்தேர்வு மதிப்பெண்கள் மிகவும் முக்கியமானவை. பொதுத்தேர்வில் பெற்றிருக்கும் மதிப்பெண்களைப் பொறுத்துத்தான் மேற்படிப்பு மற்றும் வேலைவாய்ப்புகளும்கூட வழங்கப்படும். அப்படியிருக்கும்போது, மதிப்பெண்களைக் கணக்கிட ஓர் உறுதியான வழிமுறை இல்லாத இந்த காலகட்டத்தில், மதிப்பெண் வழங்காமல் 'அனைத்து மாணவரும் தேர்ச்சி' என அறிவிப்பதுதானே சரியான வழிமுறையாக இருக்கும். எனவே, இனியாவது அரசு, 'மதிப்பெண் சான்றிதழ்' வழங்கும் முடிவைக் கைவிட வேண்டும்'' என்கின்றனர் கோரிக்கையாக.
இந்த விவகாரத்தில், தனியார் பள்ளிகள்மீதான குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கேட்டு, 'தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக், மேல்நிலை மற்றும் சி.பி.எஸ்.சி பள்ளிகள் சங்க'த்தின் மாநில துணைப் பொதுச் செயலாளர் ஜி.ஆர்.ஶ்ரீதரிடம் பேசினோம்... "ஒட்டுமொத்தமாகத் தனியார் பள்ளிகள்மீது குறை சொல்லிவிடக் கூடாது. ஏனெனில், எவ்வளவு நியாயமாக பொதுத்தேர்வு நடத்தினாலும்கூட, விடைத்தாளை திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களில் ஒரு சிலர் தவறாகத் திருத்திவிடுவதால்தானே மறுகூட்டலுக்காக விண்ணப்பித்து, உரிய மதிப்பெண் பெறுகிற நடைமுறையே இருக்கிறது. இதற்காக ஆசிரியர்கள் அனைவருமே தவறானவர்கள் என்றோ அல்லது அந்தக் குறிப்பிட்ட விடைத்தாளை திருத்திய ஆசிரியர் தப்பானவர் என்றோ சொல்லிவிட முடியாது அல்லவா?
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.