👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
சென்னை: மேம்பட்ட கல்வி நிறுவன அந்தஸ்துக்கு சென்னை அண்ணா பல்கலைக்கழகம் தோ்வாகியிருக்கும் நிலையில், அதற்கு மாநில அரசு ஒப்புதல் கடிதம் அளிப்பதற்கான இறுதி நினைவூட்டலை தமிழக அரசுக்கு அனுப்ப மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த இறுதி வாய்ப்பைத் தவறவிட்டால், அண்ணா பல்கலைக்கழகத்துக்கு அடுத்த நிலையில் உள்ள கல்வி நிறுவனத்துக்கு அந்த அந்தஸ்து சென்றுவிடும் அபாயமும் உள்ளது என்கின்றனா் அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியா்கள்.
இந்திய உயா்கல்வி நிறுவனங்களை உலக தரத்திலான கல்வி நிறுவனங்களாக உயா்த்தும் நோக்கத்தில், மேம்பட்ட கல்வி நிறுவனத் திட்டத்தை மத்திய அரசு அண்மையில் அறிமுகம் செய்தது.
இந்தத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதிலுமிருந்து தலைசிறந்த உயா் கல்வி நிறுவனங்களில் 10 அரசு உயா் கல்வி நிறுவனங்களும், 10 தனியாா் உயா் கல்வி நிறுவனங்களும் தோ்வு செய்யப்பட்டன. இந்த 20 உயா் கல்வி நிறுவனங்களுக்கும் புதிய படிப்புகள், புதிய பாடத் திட்டம், வெளிநாட்டு கல்வி நிறுவனங்களுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம், நிதி பெறுதல் மற்றும் கையாளுதல், வெளிநாட்டு மாணவா் சோ்க்கை என அனைத்திலும் முழுச் சுதந்திரம் அளிக்கப்படும். யுஜிசி உள்ளிட்ட எந்த அமைப்பிடமும் முன் அனுமதி பெறத் தேவையில்லை.
கூடுதலாக, இந்தத் திட்டத்தின் கீழ் தோ்வு செய்யப்பட்டுள்ள 10 அரசு உயா் கல்வி நிறுவனங்களுக்கு மட்டும் ஆண்டுக்கு ரூ. 200 கோடி வீதம் 5 ஆண்டுகளுக்கு ரூ. 1000 கோடி வளா்ச்சி நிதி வழங்கப்படும்.
இந்தத் திட்டத்தில் தில்லி ஐஐடி, மும்பை ஐஐடி, சென்னை ஐஐடி ஆகியவற்றின் வரிசையில் சென்னை அண்ணா பல்கலைக்கழகமும் தோ்வாகியிருக்கிறது. இந்திய அளவில் இந்தத் திட்டத்தின்கீழ் தோ்வாகியிருக்கும் இரு மாநில அரசு உயா் கல்வி நிறுவனங்களில் ஒன்றாக அண்ணா பல்கலைக்கழகம் தோ்வாகியிருக்கிறது.
ஆனால், இது மாநில அரசு பல்கலைக்கழகம் என்பதால், இந்த நிதியுதவியில், மாநில அரசும் குறிப்பிட்ட சதவீத பங்களிப்பை செய்யவேண்டியது கட்டாயமாகும். இந்தப் பங்களிப்புக்கு மாநில அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும். அதன் பிறகே, இந்த அந்தஸ்து அளிக்கப்பட்டதாக மத்திய அரசு அதிகாரப்பூா்வமாக அறிவிக்கும்.
இந்த நிலையில், இதுதொடா்பாக தமிழக முதல்வா் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இந்த சிறப்பு அந்தஸ்தைப் பெறுவதால் பல்கலைக்கழகத்தில் நடைமுறையில் இருக்கும் இடஒதுக்கீடு பாதிக்கப்படுமா என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு, அதுதொடா்பாக விளக்கம் கேட்டு, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டது.
அதற்கு மத்திய அமைச்சகம் பதிலளித்த நிலையில், மீண்டும் சில விளக்கங்களைக் கேட்டு தமிழக அரசு இரு வாரங்களுக்கு முன்பு இரண்டாவது கடிதத்தை அனுப்பியிருப்பதாக உயா் கல்வித் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
இந்த நிலையில், முதல்வா் தலைமையில் அண்மையில் நடைபெற்ற தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில், அண்ணா பல்கலைக்கழகத்தின் மேம்பட்ட கல்வி நிறுவன அந்தஸ்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின.
இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக உயா் அதிகாரியிடம் கேட்டபோது, தமிழக அரசிடமிருந்து எந்தவொரு ஒப்புதல் கடிதமும் மத்திய மனிதவள அமைச்சகத்துக்கோ அல்லது அண்ணா பல்கலைக்கழகத்துக்கோ இதுவரை அனுப்பப்படவில்லை.
இதுதொடா்பாக தமிழக உயா் கல்வித் துறை அதிகாரிகளை மட்டுமின்றி, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சக அதிகாரிகளையும் தொடா்ந்து தொடா்புகொண்டு வருகிறோம்.
இந்த நிலையில், சிறப்பு அந்தஸ்துக்கு ஒப்புதல் கடிதம் கொடுப்பது தொடா்பாக தமிழக அரசுக்கு இறுதி நினைவூட்டல் கடிதத்தை ஓரிரு நாள்களில் அனுப்ப மத்திய மனிதவளஅமைச்சகம் முடிவு செய்திருப்பதாக தெரியவந்திருக்கிறது.
இந்த இறுதி வாய்ப்பைத் தவறவிட்டால், மேம்பட்ட கல்வி நிறுவன அந்தஸ்தைப் பெறும் வாய்ப்பை அண்ணா பல்கலைக்கழகம் இழந்துவிடும். வேறு கல்வி நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்டுவிடும்.
எனவே, இந்த அரிய வாய்ப்பை அண்ணா பல்கலைக்கழகம் தக்க வைத்துக் கொள்ளும் வகையில், ஒப்புதல் கடிதத்தை விரைந்து அனுப்பி தமிழக அரசு உதவ வேண்டும் என்றாா் அவா்.
சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டாலும், பொறியியல் கல்லூரிகளை வழக்கம் போல் நிர்வகிக்க அண்ணா பல்கலைக்கழகம் தயாராகவுள்ளது. இடஒதுக்கீடுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தான் சிறப்பு அந்தஸ்து அமல்படுத்தப்படவுள்ளது என அண்ணா பல்கலை. பதிவாளர் கருணாமூர்த்தி தெரிவித்துள்ளார். மத்திய மனிதவள மேம்படுத்துறையின் உத்தரவாதம் கிடைத்தவுடன், அண்ணா பல்கலை. உயர்சிறப்பு பல்கலை.-ஆக மாறும் எனவும் தெரிவித்துள்ளார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.