அடைமழைக்காலம் ஆரம்பம்.. தப்பித் தவறி பாம்புகள் நம் வீட்டுக்குள் நுழையாமல் இருக்க சில டிப்ஸ்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, October 30, 2019

Comments:0

அடைமழைக்காலம் ஆரம்பம்.. தப்பித் தவறி பாம்புகள் நம் வீட்டுக்குள் நுழையாமல் இருக்க சில டிப்ஸ்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஐப்பசியில் அடைமழைக்காலம் தொடங்கி விட்டது. இன்னும் கார்த்திகை மாதம் வரவில்லை. அதற்குள் புறநகர்ப் பகுதிகளில் அத்துவான இடங்களில் எல்லாம் பாம்புகளின் இணையாட்டம் சூடு பிடிக்கத் தொடங்கி விட்டது. கடந்த மாதத்தில் ஒரு நாள், என் வீட்டிலிருந்து கூப்பிடு தூரத்தில் இருந்த ஒரு அபார்ட்மெண்டுக்கு எதிரில் விரிந்திருந்த பச்சைப் புல் தரையில் கிட்டத்தட்ட 4 மணி நேரங்கள் பின்னிப் பிணைந்து ஆடிக் கொண்டிருந்தன இரு நாகங்கள். மனிதர்கள் தூர நின்றவாறு தங்களைப் புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள், கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற எவ்விதக் கவலையும் இன்றி மோகத்தில் மூழ்கி இருந்தன அவையிரண்டும். பார்க்க பயமாக இருந்தாலும் லயம் தப்பாமல் ஆடும் அவற்றின் ஆட்டத்தில் ஒரு நளினம் இருந்ததை மறுக்க முடியாது. இதுவே பழைய காலமாக இருந்தாலோ அல்லது நாங்களிருந்தது கிராமமாக இருந்திருந்தாலோ அல்லது அந்தப் பாம்புகள் எங்களைச் சமீபித்திருந்தாலோ நிச்சயம் அன்று அவற்றில் ஒன்றுக்கேனும் சாவு மணி அடித்து விடத்தக்க மனிதர்கள் தான் அங்கிருந்தோம். ஆயினும் என்ன காரணத்தாலோ அன்று அந்தப் பாம்புகளை தொந்திரவு செய்யத் தோன்றவில்லை. அவை தங்களுடைய வேலை முடிந்ததும் வந்த வழியே போய் விடக்கூடியவை என்று ஏதோ ஒரு நம்பிக்கையை வளர்த்துக் கொண்டு. அங்கு ஆடிக்கொண்டிருந்த நாகங்களை வெறுமே வீடியோ எடுத்துக் கொண்டும், புகைப்படம் எடுத்துக் கொண்டும் அதைக் கடந்து விட்டோம் அன்று.
ஆனால், நேற்று இரவுச் சாப்பாடு முடித்து விட்டு அக்கடாவென அமர்ந்திருந்த போது, திடீரெனப் பக்கத்து வீட்டுக்காரர் மொபைலில் அழைத்தார். என்னடாவென்று பார்த்தால், உங்க யூனிகார்னுக்கு அடியில ஒரு சாரைப்பாம்பு சுருண்டு கிடக்கு, கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க. என்றார். தூரத்தில் நாகங்கள் ஆட அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த போது வராத பீதி, வீட்டு போர்டிகோவில் டூவீலருக்கு அடியில் சுருண்டு கிடக்கிறது என்றதும் ஒரு நிமிடம் திடுக்கென அதிர்ந்தது நெஞ்சம். குடும்பமாக ஓடிப்போய் பால்கனியில் இருந்து எட்டிப் பார்த்தோம். வீட்டிற்கு முன்னால் தெருவிளக்கு என்பதால் வெளிச்சம் நன்றாகவே பாயுமிடம் தான் அது. அங்கே அசைவொன்றும் தென்படவில்லை. ஒருவேளை போர்டிகோவைத் தாண்டி கீழே லிவிங் ரூமுக்குள் நுழைந்து விடுமோ என்று பயம் பிடித்துக் கொண்டது.
அதற்குள், இரண்டாவது மாடியின் பால்கனியிலிருந்து எட்டிப்பார்த்துக் கொண்டிருந்த அதே பக்கத்து வீட்டுக்காரர், அங்கிருந்தவாறே குரல் கொடுத்தார். ‘சார், உங்க வண்டிக்கு அடியில இருந்து, நகர்ந்து அந்தப்பக்கமா நிறுத்தியிருக்கிற எதிர்வீட்டு ஹூண்டாய் வெர்னாவுக்கு அடியில போயிடுச்சு பாருங்க’ என்றார். உடனே அந்த வீட்டுக்காரர்கள் யாராவது தென்படுகிறார்களா என்று தேடினோம். எச்சிலிட வெளியில் வந்த எதிர்வீட்டுப் பெண்ணிடம் இதைச் சொன்னதும் அவர் அலறி அடித்துக் கொண்டு கணவரைக் கூப்பிட உள்ளே ஓடினார். கணவர் வெளியில் வந்து பாம்பைத் தேடும் முன் மாமியார் கையில் உப்பு டப்பியோடு ஓடி வந்தார். ‘சும்மா இரும்மா, எதுக்குப் பதற்றே... இந்தா இதைத் தூவினா... எதுவும் வீட்டுக்குள்ள நுழையாது, அது வேற யாரு, நம்ம நாராயணன் தானே, கன்னத்துல போட்டுக்கோ’ என்றவாறு கையிலிருந்து உப்பைப் பிடிபிடியாக வாசல் கேட்டை ஒட்டித் தூவி விட்டுச் சென்றார்.
பாம்பு உப்புக்குக் கட்டுப்படுமா என்று எனக்கு சந்தேகமாக இருந்தது. ஆனாலும், அந்தம்மாளிடம் அதைக் கேட்கவில்லை. அவரது நம்பிக்கையைக் கெடுப்பானேன்! அப்புறம் அந்தம்மாவே அந்தப்பக்கத்திலிருந்து கத்திச் சொன்னார்; அது இன்னைக்குப் புதுசாவா வருது, தெனைக்கும் தான் வருது. நான் தான் அடிக்கடி பார்க்கறேனே, அதும்பாட்டுக்கு அந்தால போய்டும், இங்கன தவளை, எலின்னு என்னத்தையாவது பார்த்துருக்கும், புடிக்கத்தான் வந்துருக்கு. மழைக்காலமில்லியா, தானா போய்டும். பயப்படாதீங்க’ என்று சொல்லி விட்டு உள்ளே போய் விட்டார். கதவைச் சாத்திக் கொண்டு படுக்கச் செல்லும் முன் என் அத்தை சொன்னார். கற்பூரத்தை நுணுக்கி வாசல்ல தூவினா வராதுன்னு சொல்வாங்க, இரு நான் தூவிட்டு வந்துடறேன் என்று கீழே இறங்கிச் சென்றார்.
அப்புறமாய் மேலே வந்து சொன்னார். அந்தக் கோடிவீட்டு அம்மா சொல்வாங்க. அவங்க வீட்ல சிசிடிவி கேமரா மாட்டிருக்காங்க இல்ல.. அதுல தினமும் இந்தப்பக்கம் பாம்பு நடமாட்டம் இருக்கறது பதிவாகுதுன்னு. ராவுல எர தேட வந்துருக்கும்... போன வாரத்துல ஒருநாள் காலைல காரை எடுக்கும் போது பார்த்தாக்க அடியில கை நீளத்துல ஒரு பாம்பு செத்துக் கிடந்துச்சாம். எப்படிச் செத்ததுன்னு தெரியலன்னாங்க. ஆள் வச்சு தூக்கிப் போட்டோம்னாங்க. இங்க நிறைய பேர் அடிக்கடி பார்த்துக்கிட்டே தான் இருக்காங்க. கவனமா இருந்துக்கிடனும், அவ்வளவு தான்! என்றவாறு கட்டையைச் சாய்த்தார். நானும் யோசனையுடன் அவர் சொன்னதைக் கேட்டவாறு கூகுளைத் திறந்து பாம்புகள் வீட்டுக்குள் நுழையாமல் தடுப்பது எப்படி? என்று தேடத் துவங்கினேன்.
வீட்டுக்குப் பக்கத்தில் காமாசோமாவென குப்பைகளைப் போட்டு வைக்காதீர்கள்!
குப்பை என்றால் கழிவுகளை மட்டும் சொல்லவில்லை, வைக்கோல் போர், மரக்கட்டைகளை அடுக்கி வைப்பது, மரத்தூள்களைப் போட்டு வைப்பது, இப்படி நெருக்கமாகப் பலவிதமான பொருட்களை காற்றுக்கூட புகமுடியாத அளவுக்கு அடைசலாகப் போட்டு வைக்காதீர்கள். ஏனெனில், பாம்புகள் தங்களை இரையை மறைந்திருந்து திடீரென லபக்குவதில் வல்லவை. இருளான பிரதேசங்களில் மேற்கண்ட குப்பைக் கூளங்கள் இருந்து நம் கெட்ட நேரத்திற்கு நாம் அங்கு செல்ல நேர்ந்து இருளில் தனது இரையென எண்ணி நாகங்கள் நம்மைப் பதம் பார்த்து விட வாய்ப்பு உண்டு. எனவே வீட்டைச் சுற்றியும் சரி, வீட்டுக்குள்ளும் சரி அடைசலாக எந்தப் பொருட்களையும் சேர்த்து விடாதீர்கள்.
குட்டைத் தாவரங்களை வளர்ப்பதைத் தவிருங்கள்!
பாம்புகளுக்குப் புதர்கள் என்றால் இஷ்டம். அதே போல அடர்த்தியாகப் புற்கள் நீள நீளமாக வளர்ந்திருந்தாலும் பாம்புகள் மறைந்து வாழ தோதான இடமாக அவை அமைந்து விடும். எனவே வீட்டைச் சுற்றிப் புல்தரை மற்றும் புதர்ச் செடிகள் வளர்க்க விரும்புகிறவர்கள் அடிக்கடி அவற்றை கன்னாபின்னாவென வளர விட்டுவிடாமல் அவ்வப்போது சீரான மட்டத்தில் இடைவெளி விட்டு புல்தரையை சமப்படுத்துங்கள், அழகுக்காகவே வளர்த்தாலும் சரி புதர்ச்செடிகளை சிறு குழந்தைகள் இருக்கும் வீடுகளில் மட்டுமேனும் தவிர்த்து விடுவது நல்லது.
வீட்டைச் சுற்றி பாம்புகளுக்கான இரைகளிருப்பின் அதை முதலில் அப்புறப்படுத்துங்கள்!
பாம்புகள் விரும்பி உண்பது சிறு சிறு பூச்சி வகைகளையும், தவளைகளையும், எலிகளையும் தான். அப்படியான ஜீவராசிகள் உங்களது சுற்றுப்புறத்தில் இல்லையில்லை குறைந்த பட்சம் உங்கள் வீட்டைச் சுற்றிலுமாகவேனும் இல்லாமலிருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். சுருங்கச் சொல்வதென்றால் உங்கள் வீட்டு வாண்டுகள் விளையாடிக் களிக்கும் இடங்களிலாவது இத்தகைய ஜீவராசிகளை அப்புறப்படுத்துங்கள்.
அப்புறம் நான்காவதாக ஒரு முக்கியமான விஷயம், வீட்டைச் சுற்றி இண்டு இடுக்குகளில் ஏதேனும் துவாரங்கள் இருந்தால் உடனடியாக அதை சிமெண்டு கொண்டு அடையுங்கள். பாம்புகள், ராட்சதப் பல்லிகள், விஷ ஜந்துக்களின் மிக விருப்பமான உறைவிடங்கள் இந்த இண்டு இடுக்குகள் தான். அப்படியான துவாரங்கள் ஏதேனும் வீட்டைச் சுற்றியோ அல்லது வீட்டுக்குள்ளோ இருந்தால் உடனடியாக அதை இல்லாமலாக்கி விடுங்கள்.
பாம்புத் தடுப்பு வேலிகள் அமைக்கலாம்...
இவ்வளவும் செய்த பிறகும் கூட உங்களுக்குப் பயம் போகவில்லை என்றால் வீட்டைச் சுற்றி பாம்புகளின் நடமாட்டம் இல்லாமல் தடுக்க ஸ்னேக் பென்ஸிங் செய்து கொள்ளலாம். அதாவது பாம்பு தடுப்பு வேலிகள். இந்த வேலிகளில் மூன்று வகைகள் இருக்கின்றன.
பிளாஸ்டிக் ஷீட்டிங் மெத்தட், ஸ்டீல் மெஸ் டைப், கேட்ச் நெட் ஃபென்ஸிங். என்று மூன்று வகைகளில் பாம்புத் தடுப்பு வேலிகள் அமைத்துக் கொள்ளலாம். இந்த வேலிகள் பாம்புகள் ஊர்ந்து வேலி தாண்ட அனுமதிப்பதில்லை என்பதோடு வேலியின் மீதும் படர்ந்து ஏற முடியாதவாறு தடுக்கின்றன. இந்த வகை வேலிகளை நம் வீட்டின் வெளிப்பகுதி முழுதும் இடவேண்டுமென்பதில்லை. குறைந்தபட்சம் குழந்தைகள் மற்றும் வளர்ப்பு மிருகங்கள் விளையாடும் இடங்களில் மட்டுமேனும் இத்தகைய வேலிகளை அமைத்துக் கொள்ளலாம்.
அதிர்வுகளை உருவாக்குங்கள்..
வீட்டைச் சுற்றித் தோட்டம் வைத்திருக்கிறீர்கள், ஆனால், அங்கு இந்த மழைக்காலம் அதுவுமாய் எந்த வேலையையும் பயமின்றிச் செய்ய முடியவில்லை.. அடிக்கடி பாம்பு வருமோ என்ற பயத்துடனே அங்கே வேலைகளைச் செய்யவேண்டியிருக்கிறது என்றால், முதலில் அந்தப் பகுதியைச் சுற்றி அதிர்வுகளைப் பரப்புங்கள். எப்படியென்றால்? கார்டனிங்கில் இலைகளைக் கொய்ய பயன்படுத்துகிறோமே அப்படியொரு மெஷினை வைத்து அதிர்வுகளை எழுப்பி விட்டுப் பிறகு தோட்ட வேலைகளைப் பார்க்கலாம். குறைந்தபட்சம் சற்று நேரமாவது பாம்புகள் நடமாட்டத்தைக் குறைக்கலாம்.
எல்லாம் சரி தான், ஆனால் எக்காரணத்தைக் கொண்டும் பாம்புகளைக் கொன்று தூக்கி வீசி விட நினைக்காதீர்கள். அவை நமது சுற்றுப்புறச் சூழல் சமநிலைக்கு மிக மிக இன்றியமையாதவை. ஒருவேளை உங்களுக்கு பயம் நிறைய இருந்தால் பாம்புகளைப் பிடிக்க வனத்துறையினருக்கோ அல்லத் சம்மந்தப்பட்ட கார்ப்பரேஷன் அதிகாரிகளுக்கோ தகவல் சொல்லி வையுங்கள்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews