👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பொலவக்காளிபாளையம் கோபிச்செட்டிப்பாளையத்திற்கு அருகில் உள்ள ஒரு கிராமம். தற்போது இங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியானது கோபி சுற்றுவட்டாரப் பகுதிவாழ் மக்களின் வரவேற்பை பெற்ற அரசுப் பள்ளியாக விளங்கிவருகிறது. இதற்கான காரணத்தை அறிந்து இப்பள்ளியின் தலைமை ஆசிரியராகப் பணியாற்றிவரும் கே.எஸ்.புருஷோத்தமனைத் தொடர்புகொண்டபோது அவர் நம்மிடம் பகிர்ந்த விவரங்களைப் பார்ப்போம்...
“1996ஆம் ஆண்டில் முதுகலை வேதியியல் ஆசிரியராக தர்மபுரி மாவட்டம் அரசு மேல்நிலைப்பள்ளி, நெருப்பூரில் என் ஆசிரியப் பணியைத் தொடங்கினேன். பின்னர் பணி மாறுதலில் அரசு மேல்நிலைப்பள்ளி, பென்னாகரம் ஊரில் நான்கு வருட காலம் பணியாற்றினேன். இக்காலகட்டத்தில், கல்வியில் பின்தங்கிய பகுதியிலிருந்த அந்தப் பள்ளியில் பயிலும் குழந்தைகள் வறுமையான சூழலில் காலுக்குச் செருப்புகூட இல்லாமல் பல மைல் தொலைவிலிருந்து ஆர்வமாகக் கல்வி கற்க வந்தனர்.
அவர்களுக்குக் கற்பித்த அனுபவம் என்னை ஆசிரியப் பணியில் மேலும் செம்மைப்படுத்தியது. நான் அப்பள்ளியில் ஆசிரியப் பணியில் சேரும்போது பள்ளியின் தேர்ச்சி சதவீதம் 8% முதல் 10% என இருந்தது. முதுகலை ஆசிரியராக வேதியியல் பாடம் கற்பித்தலோடு நில்லாமல், 10 ஆம் வகுப்பிற்கு கணக்கு மற்றும் அறிவியல் பாடங்களைக் கற்பித்து தேர்ச்சி சதவீதத்தை 75% என்ற நிலைக்கு உயர்த்த முழு முச்சுடன் செயல்பட்டேன்.
அதன் பிறகு 2001-05 வரை கோபிச்செட்டிப்பாளையம் நகரவை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் எனது கற்பித்தல் பணியினைத் தொடர்ந்தபோதும் நல்ல தேர்ச்சி விழுக்காடு தந்திருக்கிறேன் 2005 - 14 வரை கவுந்தப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றிய காலத்தில் நூறு சதவீத தேர்ச்சி விழுக்காடு வேதியியல் பாடத்தில் பெற்றுத் தந்தேன்.
அதற்காக மாவட்ட ஆட்சியர் பாராட்டுப் பத்திரமும் வழங்கி பாராட்டினார்’’ என்று மகிழ்ச்சியோடு தெரிவித்தார் புருஷோத்தமன். ‘‘கற்பித்தல் நேரத்தில் வகுப்பறையில் நாற்காலியில் அமராமல் நின்றுகொண்டே தான் எப்போதும் கற்பிப்பது வழக்கம். அப்போதுதான் மாணவர் கவனம் முழுவதும் நம் வசம் இருக்கும் என்பதே எனது தீர்க்கமான அனுபவம்.
பிறகு 2015 ஆம் ஆண்டில் 1400 கிராமப்புற ஏழை மாணவர்கள் கல்வி பயின்று வந்த அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்குத் தலைமையாசிரியராகப் பதவி உயர்வு பெற்றுச் சென்றேன். அங்கு மாணவர்களின் தேர்ச்சி விழுக்காடு 90% பெற்றபோது கிடைத்த பணி அனுபவம் என்னை ஆசிரியர்என்ற நிலையிலிருந்து அடுத்தகட்ட நிலைக்கு, அதாவது தலைமை ஆசிரியர் என்ற மாபெரும் பொறுப்பு மிக்க நிலைக்கு அழைத்துச் சென்றதை உணர்ந்தேன். பிறகு அங்கிருந்து பொலவக்காளிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு மாறுதல் பெற்று வந்தேன்.
நான் பொறுப்பேற்று வந்த காலகட்டத்தில் பள்ளியில் குடிப்பதற்கே குடிநீர் இல்லாமலும், போதிய கழிப்பறை வசதியில்லாமலும் இருந்தது. பள்ளியின் வளாகத்தையொட்டியே குளம் அமைந்திருந்ததால் மழைக் காலங்களில் பள்ளி வளாகம் சகதியாகி கால்பதித்து நடக்க முடியாத சூழலால் ஆசிரியர்களும் மாணவர்களும் அவதியுற்று வந்தனர். பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களின் நிதி உதவியோடு சமூகநல அமைப்பினரை அணுகி உரிய உதவிகள் பெற்று, குடிநீர்ப் பிரச்னையைத் தீர்க்கவும், பள்ளி வளாகத்தைப் புதுப்பிக்கவும் நடவடிக்கை மேற்கொண்டோம்.
போதிய கழிப்பறை வசதிகள் புதிதாக ஏற்படுத்தப்பட்டதோடு வளாகம் முழுவதும் பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்டன. பசுமையைப் பேணிக்காக்க நிழல் தரும் மரங்களையும் பசுமைப்படை அமைப்பின் மூலம் நட்டு இனிய கற்றல் கற்பித்தல் சூழலுக்குப் புத்துயிர் அளிக்கப்பட்டது.’’ என்று சீர்திருத்தப் பணிகளைப் பட்டியலிட்ட தலைமை ஆசிரியர் புருஷோத்தமன் பள்ளியின் மேம்பாட்டுக்கு உதவிக்கரம் நீட்டியவர்களின் தன்னலமற்ற சேவையையும் பெருமிதத்தோடு தெரிவித்தார்.
‘‘பல்வேறு சீர்திருத்தப் பணிகளைத் தொடர்ந்து 590 மாணவர்கள் பயின்றுவந்த இப்பள்ளியில் தற்போது 785 மாணவர்கள் பயின்றுவருகின்றனர். மேலும் பள்ளியில் 10,11,12 ஆம் வகுப்பில் பயிலும் அனைத்து மாணவர்களும் தொடர்ச்சியாக பல ஆண்டுகளாக நூறு சதவீதம் தேர்ச்சிபெற்று வருகின்றனர். ஆண்டிற்கு நான்கைந்து முறை பெற்றோர் - ஆசிரியர்- மாணவர்கள் சந்திப்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டு குறைகளைக் கண்டறிந்து அவற்றைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.
அர்ப்பணிப்புடன் காலநேரம் கருதாமல் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி முன்னேற்றத்திற்கு எப்போதும் ஒத்துழைப்பு நல்கும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் துணையோடு இப்பள்ளி வெற்றிநடை போட்டுவருகிறது. இதன் விளைவாக ‘மாவட்டத்திலேயே சிறந்த அரசுப் பள்ளி’ என்ற விருதையும் பெற்றுள்ளோம். வகுப்பறைகள் பற்றாக்குறையைப் போக்க, நபார்டு திட்டத்தின் மூலமாக கம்பீரமான மூன்றடுக்கு கட்டடங்களும், புதிய ஆய்வுக்கூடங்களும் நிறுவப்பட்டுள்ளன.
தனியார் அறக்கட்டளை, சமூகத் தொண்டு நிறுவனங்களை அணுகி பள்ளிக்குப் புதிதாகச் சுற்றுச்சுவர் மற்றும் அலங்கார வளைவு புதிதாக நிறுவப்பட்டுள்ளது. மாணவர்களின் விடு முறைக் காலங்களைப் பயனுள்ள வகையில் கழிக்கும் பொருட்டு அவர்களுக்கு விதைப்பந்து தயாரிக்கும் பயிற்சி வழங்கப்படுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் 25,000 விதைப்பந்துகள் தயாரித்து அருகிலுள்ள கல்லூரிகள் முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை இலவசமாக வழங்கி இயற்கையைப் பேணிக்காக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளோம்.
மொத்தத்தில் அனைவருக்கும் பிடித்த அரசுப் பள்ளியாக எங்கள் பள்ளி திகழ ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் உறுதுணையோடு நடவடிக்கை எடுத்துவருகிறோம். இதற்கு கடந்த மூன்றாண்டுகளில் மளமளவென உயர்ந்த பள்ளியின் மாணவர் சேர்க்கையே சாட்சி’’ என்கிறார் தலைமை ஆசிரியர் புருஷோத்தமன்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U