தொழில், வியாபார நிறுவனங்களின் வளர்ச்சியில் ஆடிட்டிங் துறைக்கும் முக்கியப் பங்கு உண்டு.
இன்றைய சூழலில் ஆடிட்டர்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகளும் உள்ளன. தனியாக ஆடிட்டிங் தொழில் செய்தும் உயர்ந்த நிலையை அடையலாம். அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள்கூட ஆடிட்டிங் துறையில் சாதிக்கலாம். கடின உழைப்பும், விடாமுயற்சியும் இருந்தால் சி.ஏ. தேர்வில் தேர்ச்சி பெறுவது எளிது' என்கிறார் தென்னிந்திய பட்டய கணக்காளர் அமைப்பின் செயலருமான கே.ஜலபதி.
மருத்துவம், இன்ஜினீயரிங் என தொழிற்கல்வி படித்தால் மட்டுமே நல்ல நிலையை அடைய முடியும் என்ற நிலை தற்போது மாறிவிட்டது.
ஏராளமான வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கும் சி.ஏபட்டய கணக்கர்) படிப்பதன் மூலம், பல லட்சம் வருவாய் ஈட்டும் `ஆடிட்டிங்' தொழில் மேற்கொள்ளலாம் அல்லது பெரிய நிறுவனங்களில் ஆடிட்டராகி, அதிக அளவில் சம்பளம் பெற முடியும். எனினும், சி.ஏ. படிப்பது மிகவும் கடினம் என்ற கருத்து உலவிக் கொண்டிருந்தது.
இதைத் தகர்த்து, அரசுப் பள்ளி மாணவர்கள்கூட சி.ஏ. படித்து, வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய இந்திய ஆடிட்டர்கள் சங்கம் (ஐ.சி.ஏ.ஐ.) உதவி வருகிறது.
அரசுப் பள்ளியில் படித்து, தற்போது ஐசிஏஐ எனப்படும் இந்திய ஆடிட்டர்கள் சங்கத்தில் உயர்ந்த பதவி வகிக்கும் ஜலபதி, அரசுப் பள்ளி மாணவர்கள் மீது அக்கறை கொண்டு, அவர்கள் மத்தியில் சி.ஏ. படிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
தென்னிந்திய பட்டயக் கணக்காளர்கள் அமைப்பு சார்பில் அமைக்கப்பட்டுள்ள கல்வி வழிகாட்டுதல் குழுவின் தலைவராகவும் இவர் பொறுப்பு வகிக்கிறார். கோவை சாய்பாபா காலனியில் உள்ள அவரது அலுவலகத்தில் ஜலபதியை சந்தித்தோம்.
ரூ.60 தினக்கூலி வேலை...
'சொந்த ஊர் சேலம் மாவட்டம் மேட்டூர் அருகேயுள்ள கொளத்தூர்.
பெற்றோர் ஏ.குமரன், கே.ராஜம்மாள். விவசாயக் குடும்பம். படிப்பறிவு இல்லாத பெற்றோர், வறுமையான சூழல். சானார்பட்டி அரசு தொடக்கப் பள்ளியில் 5-ம் வகுப்பு வரையும், கொளத்தூர் நிர்மலா பள்ளியில் 8-ம் வகுப்பு வரையும், மேட்டுர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு வரையும் படித்தேன்.
குடும்பச் சூழல் காரணமாக மேட்டூரில் உள்ள எல்ஐசி அலுவலகத்தில் தினம் ரூ.60 கூலி அடிப்படையில் வேலைக்கு சேர்ந்தேன். காலாவதியான ஆவணங்களை கிழித்துப் போடுவது, டீ, காபி வாங்கிக் கொடுப்பது என 7, 8 மாதம் வாழ்க்கை நகர்ந்தது. இப்படியே போனால், வாழ்க்கையில் கொஞ்சமும் முன்னேற முடியாது என்று தோன்றியது
அக்கா ராஜாத்தி, மாமா வெங்கடாசலம் ஆகியோர், மேல்படிப்பு படிக்க உதவினர். மீண்டும் பள்ளியில் சேர்ந்து, 11-ம் வகுப்பில் வணிகவியல் பாடப் பிரிவில் சேர்ந்து படித்தேன். அக்கவுன்டன்சி ஆசிரியர் பரசுராமன் பெரிதும் ஊக்குவித்தார்.
பிளஸ் 2 முடித்துவிட்டு, திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை செய்து, குடும்ப சுமையைப் பகிர்ந்து கொள்ளலாம் என முடிவு செய்திருந்தேன்.
அந்த சமயத்தில், எனது நண்பர் கணேஷ், அவரது தந்தை ஆகியோர் சி.ஏ. படிப்பு குறித்தும், அதில் தேர்ச்சி பெற்றால் வாழ்வில் உயர்ந்த நிலையை அடையலாம் என்றும் அறிவுறுத்தினார். பின்னர், கோபி கலைக் கல்லூரியில் பி.காம் முடித்துவிட்டு, 1998-ல் கோவை சாய்பாபா காலனியில் ஆடிட்டர் ஜி.கார்த்திகேயனிடம் சேர்ந்து, ஆடிட்டிங் பழகினேன்.
1999 முதல் சி.ஏ. தேர்வுக்குத் தயாரானேன். சென்னைக்குச் சென்று, சி.ஏ. படிப்புக்கு தயார் செய்தேன்.
2004-ல் சி.ஏ. தேர்ச்சி பெற்றேன். அதே ஆண்டு, கோவையில் எஸ்.அன்பரசுவுடன் சேர்ந்து, ஆடிட்டங் தொழிலைத் தொடங்கினேன்.
பட்டய கணக்கர் சங்கத்தில்...
2006-ல் இந்திய பட்டய கணக்காளர் சங்கத்தின் சேவைப் பிரிவு செயலராக தேர்ந்தெடுக்கப்பட்டேன்.
தொடர்ந்து, இணைச் செயலர், பொருளாளர், 2012-ல் கோவை கிளைத் தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்தேன். 2015-ல் தென்னிந்திய பட்டய கணக்கர் சங்கத்தின் பொருளாளர் பதவிக்குப் போட்டியிட்டு, வென்றேன். 2018-ல் மாணவர் வழிகாட்டுதல் குழுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டேன். 2019-ல் தென்னிந்திய பட்டய கணக்கர் சங்கத்தின் செயலர் பதவிக்குப் போட்டியிட்டேன்.
இந்த அமைப்பில் 55 ஆயிரம் ஆடிட்டர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். அதிக வாக்குகள் வித்தியாசத்தில் செயலர் பதவிக்குத் தேர்வு செய்யப்பட்டேன். நான் சமூகப் பணிகளில் ஈடுபட ஐ.சி.ஏ.ஐ. தேசிய முன்னாள் தலைவர் ஜி.ராமசாமி பெரிதும் ஊக்குவித்தார்.
என்னுடைய இந்த நிலைக்கு காரணம் சி.ஏ. என்ற இரண்டு எழுத்துதான். இதை படித்திருக்காவிட்டால், திருப்பூரில் பனியன் தொழி லாளியாக இருந்திருப்பேன். என்னைப்போல, ஏழை மாணவர்கள், அரசுப் பள்ளி மாணவர்கள் சி.ஏ. படித்து, வாழ்வில் நல்ல நிலையை அடைய வேண்டும் என்பதுதான் என்னுடைய ஒரே நோக்கம்.
சி.ஏ. படிப்பது எப்படி?
பிளஸ் 2 முடித்தவர்கள் அடிப்படை தேர்வெழுதியும் (ஃபவுண்டேசன்), வணிகவியல் கல்வி படித்து, 55 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் நேரடியாக இன்டர்மீடியேட் தேர்வும் எழுதலாம்.
இரு பிரிவுகள் கொண்ட இன்டர்மீடியேட் தேர்வில், ஒரு தேர்வில் வென்றால்கூட ஆடிட்டரிடம் சேர்ந்து, இறுதித் தேர்வுக்கு தயாராகலாம் (ஆர்ட்டிகள்ஷிப்). மூன்று ஆண்டு பயிற்சிக்குப் பிறகு சி.ஏ. இறுதித் தேர்வு எழுதி, தேர்ச்சி பெற்று, ஆடிட்டராகலாம்.
இவ்வாறு சி.ஏ. முடித்தவர்கள் ஐ.சி.ஏ.ஐ. எனப்படும் இந்திய பட்டயக் கணக்காளர் அமைப்பில் பதிவு செய்து, ஆடிட்டங் தொழிலை மேற்கொள்ளலாம் அல்லது தொழில் நிறுவனங்களின் ஆடிட்டராகப் பணியாற்றலாம்.
தற்போது நாடு முழுவதும் 19 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்களில் ஆடிட்டர்களுக்கு வேலைவாய்ப்பு உள்ளது.
சுமார் 10 லட்சம் பேர் சி.ஏ. படித்து வருகின்றனர். எனினும், ஆண்டுக்கு சுமார் 10 ஆயிரம் பேர் மட்டுமே சி.ஏ. தேர்ச்சிபெற்று, ஆடிட்டர்களாகின்றனர். ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு, ஆடிட்டர்களின் தேவை வெகுவாக அதிகரித்துள்ளது.
அதேபோல, விர்ச்சுவல் சி.எஃப்.ஓ., வரி ஆலோசகர்கள் என சி.ஏ. படித்தவர்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
எனவே, மாணவர்களிடையே சி.ஏ. படிப்பின் முக்கியத்துவத்தை விளக்கி, உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த தென்னிந்திய பட்டய கணக்காளர் அமைப்பு முடிவு செய்தது.
இதற்காக உருவாக்கப்பட்ட கல்வி ஆலோசனைக் குழுவின் தலைவராக நான் பொறுப்பு வகிக்கிறேன்.
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளி மற்றும் அரசு நிதியுதவி பெறும் மாணவர்களிடையே சி.ஏ. படிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது, சி.ஏ. பயில உதவுவது ஆகியவையே இக்குழுவின் முதன்மை நோக்கங்களாகும். 2018-ல் இது தொடர்பாக தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனை சந்தித்தோம்.
முழு ஒத்துழைப்பு அளிப்பதாக அவர் உறுதியளித்தார். தொடர்ந்து, பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களிடையே சி.ஏ. படிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தத் தொடங்கினோம்.
தமிழகத்தைச் சேர்ந்த 500 ஆடிட்டர்கள் மூலம், இதுவரை 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சி.ஏ. படிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அதேபோல, 350-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கும், சி.ஏ. படிப்பு குறித்த விழிப்புணர்வுப் பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. அனைத்து ஆசிரியர்கள், சுமார் 10 லட்சம் மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகளைத் தொடர்கிறோம்.
அரசுப் பள்ளிகளில் சி.ஏ. படிக்க விருப்பமுள்ள மாணவர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு சிறப்பு பயிற்சி முகாம்கள் நடத்தவும், சி.ஏ. பயில உதவவும் முயற்சித்து வருகிறோம். இதற்காக, மாநிலம் முழுவதும் 12 இடங்களில், சி.ஏ. கல்வி ஆலோசனைக் குழு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
சி.ஏ. படிப்பு என்பது எட்டாக் கனி அல்ல. எங்கள் குடும்பத்தில் யாரும் 5-ம் வகுப்புகூட தாண்டியதில்லை.
வறுமையில் வாடிய, அரசுப் பள்ளியில் படித்த என்னாலேயே சி.ஏ. முடிக்க முடியும் என்றால், வசதி, வாய்ப்புகள் மிகுந்த, ஊக்குவிக்க ஆட்கள் உள்ள தற்போதைய சூழலில், அரசுப் பள்ளி மாணவர்கள் சி.ஏ. படிப்பது சாத்தியம்தான். ஆரம்ப சம்பளமே ரூ.50 ஆயிரம் கிடைக்க வாய்ப்புள்ள சி.ஏ. தேர்ச்சி பெற, கடின உழைப்பும், விடாமுயற்சியும் போதும்.
தமிழகத்திலிருந்து அதிக அளவில் ஆடிட்டர்கள் உருவாக வேண்டுமென்பதே எனது லட்சியம். தற்போது நானும், ஆடிட்டர் எஸ்.அன்பரசுவும் இணைந்து தொழில்செய்கிறோம். எங்களிடம் 50 பேர் பணியாற்றுகின்றனர்.
என் மனைவி ஜே.கல்பனா, மகன் ஜே.கே.ஹரின் ஆகியோர், எனது பொதுவாழ்க்கைப் பணிகளை ஊக்குவிக்கின்றனர்' என்றார் ஆடிட்டர் ஜலபதி.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U