`மயங்கிக் கிடந்த மகளை 3 மணி நேரமாக பள்ளியில கிடத்தி வெச்சுருக்காங்க!'- மாணவியை இழந்த தாய் கதறல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, June 13, 2019

`மயங்கிக் கிடந்த மகளை 3 மணி நேரமாக பள்ளியில கிடத்தி வெச்சுருக்காங்க!'- மாணவியை இழந்த தாய் கதறல்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
திருச்சி, உறையூர், குழுமணி சாலையில் உள்ள டாக்டர் பங்களா பகுதியைச் சேர்ந்தவர் ராம்குமார். பெயின்டரான இவருக்கு, சங்கீதா என்கிற மனைவியும், கௌதம் என்கிற 9 வயது மகனும் இருக்கின்றனர். மகள் இலக்கியா (13) திருச்சி உறையூரில் உள்ள மெதடிஸ் மேல்நிலைப் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 7-ம் தேதி வழக்கம்போல், காலையில் பள்ளிக்குச் சென்ற இலக்கியா, மதிய உணவு இடைவேளைக்குப்பிறகு விளையாட்டு வகுப்புக்காக, மாடியில் இருக்கும் வகுப்பறையிலிருந்து மைதானத்துக்குத் துள்ளி ஓடியவர், மாடிப்படி கைப்பிடி சுவரில் வலுங்கியவாறு இறங்கியதாகக் கூறப்படுகிறது. அப்போது தவறி விழுந்த இலக்கியாவுக்கு, தலையில் காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்துப் பதறிய மாணவிகள், ஆசிரியர்களிடம் கூறினர். அதையடுத்து ஓடிவந்த ஆசிரியர்கள், மயங்கிக் கிடந்த மாணவியை மீட்டபோது, தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்ததைப் பார்த்தார்கள் என்றும், ஆனால் அவர்கள், மாணவி இலக்கியாவை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லாமல் பள்ளியில் படுக்க வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. அந்த தாமதம்தான் மாணவியின் உயிரைப் பறிக்கக் காரணமானது.
இதுகுறித்து மாணவியின் தாய் சங்கீதா, ``சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக மயங்கிக் கிடந்த இலக்கியாவை அப்படியே போட்டு வைத்திருந்த ஆசிரியர்கள், அதன்பிறகும், சுயநினைவு திரும்பாததால் தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார்கள். அங்கு நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் இலக்கியாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் உறைந்திருப்பதாக மருத்துவர்கள் சொன்னபிறகுதான், எங்களுக்குத் தகவல் கூறினர். தகவலறிந்த நாங்கள் பதறியடித்துக்கொண்டு ஓடிவந்து நடந்ததை விசாரித்தால், முறையான பதில் இல்லை. ஆனால், மருத்துவர்கள் இலக்கியாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருப்பதால், கோமா நிலைக்குச் சென்றிருப்பதாகக் கூறினார்கள். அதன்பிறகு, இலக்கியாவுக்கான மருத்துவச் செலவு செய்ய வசதி இல்லாத நாங்கள், அவரைத் தனியார் மருத்துவமனையிலிருந்து, திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தோம். இடையில் என் மகளின் நிலைமைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு கொடுத்தோம். மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த இலக்கியா, இன்று காலை சிகிச்சை பலனின்றி எங்களை விட்டுச் சென்றுவிட்டார். பள்ளி முற்றுகை இலக்கியா துறுதுறுன்னு இருப்பாள். ஓடி விளையாடிக் கொண்டிருந்த பிள்ளை கீழே விழுந்து அடிபட்டதும், கூடப் படிக்கும் மாணவிகள், ஓடிப்போய் ஆசிரியர்களிடம் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அவர்களோ, இலக்கியாவும் மற்றவர்களும் நடிப்பதாகக் கூறி அலட்சியப்படுத்தியிருக்கிறார்கள். மூன்று மணி நேரம் கழித்து எங்களுக்குத் தகவல் சொன்னதால் என் மகள் கோமா நிலைக்குச் செல்லும் சூழல் ஏற்பட்டது. எப்படியும் அவரைக் காப்பாற்றிவிடலாம் என மருத்துவர்கள் போராடினார்கள். ஆனாலும் என் மகளைப் பறிகொடுத்து நிர்கதியாக நிற்கிறேன்” எனக் கதறினார்.
மாணவி இலக்கியா மரணச் செய்தி தகவல் அறிந்தது அவரின் உறவினர்கள் அங்கு வந்தபோதும், பள்ளி நிர்வாகமும் ஆசிரியர்களும் யாரும் வரவில்லை என்று கூறி, அவர் படித்த பள்ளியை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். போராட்டம் குறித்து தகவலறிந்த உறையூர் காவல் ஆய்வாளர் சிவசுப்பிரமணியன் தலைமையிலான போலீஸார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் போராட்டக்காரர்கள் கலைந்து செல்ல மறுத்து, பள்ளி நிர்வாகத்தின் அலட்சியத்தாலேயே மாணவி இலக்கியா உயிரிழந்ததாகவும், அவர் கீழே விழுந்தவுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருந்தால் மாணவி காப்பாற்றப்பட்டிருக்கலாம். பலமணி நேரம் தாமதமாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாலேயே மாணவிக்கு இந்த நிலைமை எனக் குற்றம்சாட்டியதுடன், மாணவியின் மரணத்துக்குக் காரணமான பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, பள்ளியின் அருகே உள்ள உறையூர் சாலையில் அமர்ந்து சாலை மறியல் செய்தனர். அதையடுத்து போலீஸார் நடத்திய பேச்சுவார்த்தையடுத்து மாணவி இலக்கியாவின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews