துணை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயம்: 2026-27 கல்வி ஆண்டில் அமல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, January 27, 2026

Comments:0

துணை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயம்: 2026-27 கல்வி ஆண்டில் அமல்



துணை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயம்: 2026-27 கல்வி ஆண்டில் அமல்.

இந்தியாவில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் மற்றும் முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு ஏற்கெனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், துணை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய ஆணையம் (NCAHP) ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. அதன்படி, இளங்கலை பிசியோதெரபி (BPT) மற்றும் ஆக்குபேஷனல் தெரபி (BOT) ஆகிய இரண்டு இளங்கலை துணை மருத்துவப் படிப்புகளுக்கும் நீட் தேர்வை கட்டாயமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய நடைமுறை 2026-27 கல்வி ஆண்டிலேயே அமலுக்கு வரும் என்று தேசிய தேர்வு முகமைக்கு (NTA) தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, 2026-27 கல்வி ஆண்டு முதல் BPT மற்றும் BOT படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் இளநிலை நீட் தேர்வை கட்டாயம் எழுத வேண்டும்.

துணை மருத்துவப் படிப்புகள் மற்றும் சேர்க்கை முறை

இந்தியாவில் பிசியோதெரபி, ஆக்குபேஷனல் தெரபி, மருத்துவ ஆய்வக அறிவியல், அனஸ்டீசியா, ஆப்ரேஷன் தியேட்டர் தொழில்நுட்பம், ஊட்டசத்து மற்றும் உணவுமுறை, ஆப்டோமெட்ரி, உளவியல், ரேடியோலாஜி, ரேடியோதெரபி, மருத்துவ உதவியாளர், டாயாலிசிஸ் தொழில்நுட்பம் உட்பட பல துணை மருத்துவப் படிப்புகள் வழங்கப்படுகின்றன. இப்படிப்புகளுக்கான தகுதி மற்றும் பாடத்திட்டங்களை துணை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய ஆணையம் (NCAHP) நிர்ணயிக்கிறது. தமிழ்நாட்டில் தற்போதைய சேர்க்கை முறை

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, இந்த துணை மருத்துவப் படிப்புகளுக்கான சுமார் 50 ஆயிரத்திற்கும் அதிகமான இடங்கள் மாநில அரசின் மூலமே நிரப்பப்படுகின்றன. தற்போதைய நடைமுறையின்படி, 12-ம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் தரவரிசை வெளியிடப்பட்டு, தமிழ்நாடு அரசின் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகத்தின் தேர்வு குழுவின் மூலம் சேர்க்கை நடைபெறுகிறது.

நீட் கட்டாயமாக்கலின் பின்னணி

சமீபத்தில், துணை மருத்துவப் படிப்புகள் அனைத்திற்கும் நீட் தேர்வை தகுதியாக மாற்ற ஆணையம் மூலம் கல்வித்துறைக்குக் கடிதம் எழுதப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, ஜனவரி இரண்டாம் வாரத்தில், பிசியோதெரபி மற்றும் ஆக்குபேஷனல் தெரபி ஆகிய இரண்டு இளங்கலை துணை மருத்துவப் படிப்புகளுக்கு மட்டும் நீட் தேர்வை கட்டாயமாக்கி முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும், 2026-27 கல்வி ஆண்டில் நீட் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையிலேயே இப் படிப்புகளுக்குச் சேர்க்கை நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews