👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Share This News To Ur Groups& Add 9123576459
நீட் தேர்வை எதிர்க்கும் மாநிலங்களில் ரத்து என காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ளது மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இது நடுத்தர மற்றும் கிராமப்புற மாணவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற திட்டம் என கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் திடீரென மத்திய அரசு நீட் எனும் நுழைவுத்தேர்வை அறிமுகப்படுத்தியது. இது மாநிலங்களின் கல்வி உரிமையைப் பறிக்கும் செயல், இதன்மூலம் வசதி படைத்தோர் மட்டுமே மருத்துவம் பயில முடியும் என்கிற நிலை உருவாகும், மாணவர்கள் பயிலாத ஒரு பாடத்திட்டத்தை உருவாக்கி அதன்மூலம் தேர்வு செய்வது கல்வி முறைக்கே வைக்கப்படும் வேட்டு என அரசியல் தலைவர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என அனைவரும் எதிர்த்தனர்.
98 சதவீத மதிப்பெண் பெற்ற அனிதா போன்ற மாணவிகள் தேர்வு பெறமுடியாமல் தற்கொலை செய்துகொண்ட மிகப்பெரும் அவலம் நடந்தது. இன்றும் கிராமப்புற மற்றும் நடுத்தர மாணவர்களுக்கு நீட் தேர்வுப் பயிற்சி எட்டாக்கனி. காரணம் அந்தப் பயிற்சிக்காகவே பல லட்சம் செலவு செய்யவேண்டிய நிலை. இதனால் திறமையுள்ளவர்கள் ஓரங்கட்டப்பட்டனர். பஞ்சு போர்த்திய ஒரு பெரும் கங்கு இன்றும் நீட்டுக்கு எதிராக கனன்றுகொண்டு இருக்கிறது.
இதுகுறித்து கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபுவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:
இது முற்றிலும் வரவேற்கத்தகுந்த அறிவிப்பு. இந்திய அரசமைப்புச் சட்டத்தினுடைய அட்டவணை 7 மத்திய மாநில அரசுகளின் அதிகாரப் பகிர்வு குறித்துப் பேசுகிறது. அதில் பல்கலைக்கழகங்களின் ஒழுங்குபடுத்துதல் என்பது மாநிலங்களின் உரிமை என தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது.
மாணவர் சேர்க்கை, கட்டணம் தீர்மானித்தல் எல்லாம் ஒழுங்குபடுத்துதல் கீழ்வரும் என உச்ச நீதிமன்றமும் தெளிவுபடுத்தியுள்ளது. பல்கலைக்கழகம், அதன்கீழ் இயங்கும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை அந்த மாநில அரசுதான் தீர்மானிக்க முடியும். இதுதான் அரசியலமைப்பு. அதை மீறித்தான் நீட் திணிக்கப்பட்டது. அதை ரத்து செய்யும் அறிக்கை நிச்சயம் வரவேற்கபடவேண்டிய ஒன்று.
நீட், மாநிலத் தேர்வு என்ன வித்தியாசம்?:
பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பள்ளிக்கூடத்தில் முழுமையாக கொடுக்கக்கூடிய பாடத்தைப் பயின்றுதான் தேர்வு எழுதுகிறார்கள். நியாயமாகப் பயின்று தேர்வு எழுதுபவர்கள் எந்த அளவுக்குப் பயின்றார்கள் என்பதை கணக்கிட்டுதான் மதிப்பெண் வழங்கப்படுகிறது.
16-லிருந்து 18 வயதுக்குட்பட்ட குழந்தை எந்த அளவிற்கு பாடத்தை உள்வாங்க முடியுமோ அந்த அளவுக்குத்தான் பாடத்திட்டத்தைக் கொடுக்க முடியும். 18 வயதிற்கு அப்பாற்பட்டு கல்லூரியில் பயிலும்போது உள்ள புரிதல், அதற்குள்ள தகுதியை வைத்துப் பாடத்திட்டத்தை திணிப்பதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது.
மாணவர்கள் மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய வன்முறையாகத்தான் நீட் தேர்வைப் பார்க்கிறோம். அது வடிகட்டி வெளியேற்றும் தேர்வு. எனவே அதை ரத்து செய்து மாநில அரசின் அதிகாரத்தில் கொடுப்போம் என்கிற அறிவிப்பு வரவேற்கக்கூடிய ஒன்று.
ஒரு அரசமைப்புச் சட்டத்தை சரியாகப் புரிந்துகொண்டு, அதை உரிய முறையில் நீதிமன்றங்களுக்கு விளக்கியிருந்தால் நீட் தேர்வே வந்திருக்காது.
அரசியலமைப்புச் சட்டமும் இந்த அதிகாரத்தை மாநில அரசிற்கு தருகிறது, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை நாடாளுமன்ற நிலைக்குழுவின் 92வது அறிக்கையிலும் விரும்பாத மாநிலங்களை விலக்கி வைக்க பரிந்துரைத்திருந்தது. எந்தெந்த மாநிலங்கள் விரும்பவில்லையோ அந்த மாநிலங்களை நீட் வளையத்துக்குள் கொண்டுவரவேண்டிய அவசியமில்லை என்று சொல்லியிருக்கிறது. அதை மத்திய அரசு பரிசீலிக்கவே இல்லை.
சட்டப்பேரவையிலிருந்து சென்றதால் இன்னும் அதற்கு உயிர் உள்ளது. ஏனென்றால் சட்டப்பேரவை இன்னும் உள்ளது. ஆகவே அதை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி நிறைவேற்றலாம். மக்கள் சார்ந்த கோரிக்கைகளை யார் வாக்குறுதிகளாக கொடுக்கிறார்களோ அவர்களை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள்.
இவ்வாறு பிரின்ஸ் கஜேந்திரபாபு தெரிவித்தார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்