அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான புதிய செயலி அறிமுகம்: அமைச்சர் தொடங்கி வைத்தார் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, June 04, 2018

Comments:0

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான புதிய செயலி அறிமுகம்: அமைச்சர் தொடங்கி வைத்தார்



தமிழகத்தில் முதல்முறையாக ஆரணி அரசுப் பள்ளியில் ஆசிரியர்களுக்காக வடிவமைக்கப்பட்ட புதிய ஆண்ட்ராய்டு செயலியை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார்.
இந்தச் செயலி குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பொ.ஜெயக்குமார் கூறியதாவது: தமிழகத்தில் முதல் முறையாக பள்ளிக் கல்வித் துறை சார்பில், அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்காக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட ஆண்ட்ராய்டு செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் செயலியின் அனைத்து பதிவுகள், தரவுகள் www.ceoportal.in என்ற இணையதளத்தின் மூலமாகச் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் திருவண்ணாமலை மாவட்டத்தின் முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள், பள்ளித் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களுடன் தொடர்பு கொள்ள ஏதுவாக இருக்கும். இந்தச் செயலியின் முதல் கட்டப் பணிகள் முடிக்கப்பட்டு, அனைத்து அரசுப் பள்ளி ஆசிரியர்களும் பதிவிறக்கம் செய்யும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது. இதை https://play.google.com/store/apps/details?id=com.lifotechnologies.TNTeachers

என்ற இணையதள முகவரியைப் பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

இந்தச் செயலியின் வழியாக அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான வருகைப் பதிவை அவர்களே மிக எளிமையாக கையாளலாம். இதன் ஒரு பகுதியாக ஆசிரியர்கள் தங்களது வேலை நேர அளவைக் கணக்கிடும் வகையில் அமைந்துள்ளது. இதன் மூலம், ஆசிரியர்கள் தங்களது சந்தேகங்கள், புகார்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் தெரிவிக்கலாம். ஆசிரியர்கள் தங்களது கடவுச் சொல்லை தங்கள் விருப்பத்துக்கேற்ப மாற்றியமைக்கலாம். ஆசிரியர்கள் தங்களது வகுப்புக் கால அட்டவணையைச் செம்மையாகப் பயன்படுத்தவும், ஆசிரியர்கள்- மாணவர்கள் பள்ளி, பாடங்கள் தொடர்பான கருத்துகள், சந்தேகங்களைப் பறிமாறிக் கொள்ளவும், ஆசிரியர்கள் - பெற்றோர்கள் மாணவர்கள் தொடர்பான கருத்துகளைப் பறிமாறிக் கொள்ளவும், மாணவர்கள் தங்களது பாடப் புத்தகங்களைத் தரவிறக்கம் செய்யும் வகையிலும், வகுப்புக் கால அட்டவணை, தேர்வு, விளையாட்டு, தனித்திறன் போன்ற விவரங்களை அறியும் வகையிலும் இந்தச் செயலி மேம்படுத்தப்படவுள்ளது என்றார் அவர். தொடர்ந்து புதிய செயலியை தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் அறிமுகம் செய்து தொடக்கிவைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி, பள்ளித் தலைமை ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews