பொதுத் தேர்வில் புதிய சவால்கள்: மாணவர்கள் எதிர்கொள்ள தயாரா? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, June 04, 2018

Comments:0

பொதுத் தேர்வில் புதிய சவால்கள்: மாணவர்கள் எதிர்கொள்ள தயாரா?


"தமிழகத்தில் பள்ளிகளுக்கான பாடத்திட்டம் மாணவர்களின் அறிவுத்திறனை சோதிப்பதாக இல்லை; வெறும் மனப்பாடக் கல்வியாக மட்டுமே இருக்கிறது. பொதுத் தேர்வுகளிலும் "ப்ளு பிரிண்ட்' அடிப்படையிலேயே வினாத்தாள்கள் வடிவமைக்கப்படுகின்றன. இதன் காரணமாக பாடம் சார்ந்து எழுப்பப்படும் சில மறைமுக வினாக்களுக்கு கூட மாணவர்களால் பதிலளிக்க முடிவதில்லை. இத்தகைய செயல்பாடுகளால் மாணவர்களிடையே ஒரு குறிப்பிட்ட விஷயம் குறித்து ஆழமான புரிதல் ஏற்படுவதில்லை. எதைப் படிக்க வேண்டும் என்ற அடிப்படை விஷயத்திலேயே குழப்பம் ஏற்படுவதால் மத்திய அரசு நடத்தும் எந்தவொரு போட்டித் தேர்வுகளிலும் தமிழக மாணவர்கள் அதிகளவில் வெற்றி பெறுவதில்லை. எனவே, பள்ளி பாடத்திட்டத்திலும், வினாத்தாள் வடிவமைப்பிலும், கற்பித்தலிலும் மிகப் பெரிய மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்'' இந்தக் கோரிக்கையை கல்வியாளர்கள், பெற்றோர், ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் என பல தரப்பினரும் தொடர்ந்து பல ஆண்டுகளாக தமிழக பள்ளிக் கல்வித்துறையிடம் முன்வைத்தனர்.  மிகப் பெரிய மாற்றம்: அதற்கேற்றவாறு கல்வித்துறையில் அவ்வப்போது சில மாற்றங்கள் செய்யப்பட்டு வந்தாலும் மாணவர்களின் கற்றல் அடைவுத் திறனிலும், மேற்படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகளிலும் முன்பிருந்த நிலையே தொடர்ந்தது. இதை உற்றுக் கவனித்த பள்ளிக் கல்வித் துறை ஒரு மிகப் பெரிய மாற்றத்தைச் செய்ய தீர்மானித்தது. இனி செய்யப்படும் மாற்றம் அடுத்த பத்தாண்டுகளுக்கு நிலைத்திருக்க வேண்டும் என முடிவெடுத்து புதிய பாடத்திட்ட அறிவிப்பை கடந்த ஆண்டு மே மாதம் அறிவித்ததோடு வினாத்தாள் வடிவமைப்பிலும் கூடுதல் கவனம் செலுத்தியது.


இதன் காரணமாக இந்த ஆண்டு (2018) நடந்து முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் மொழிப்பாடம் உள்பட இயற்பியல், வேதியியல், பொருளியல், கணிதம் என முக்கியப் பாடங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு புதுமையான வினாக்கள் இடம்பெற்றிருந்தன. சிந்தித்துப் பதிலளிக்கக் கூடிய வகையிலும், ஏற்கெனவே கேட்கப்பட்ட கேள்வியே கூட மாறுபட்ட முறையில் கேட்கப்பட்டிருந்தன.  ஆனால், புதிய மாற்றத்துக்கு பெரும்பாலான மாணவர்கள் கொஞ்சம் கூடத் தயாராகவில்லை என்பதை பொதுத்தேர்வு முடிவுகள் அப்பட்டமாக வெளிப்படுத்தின. 

பிளஸ் 2 உள்பட மூன்று பொதுத் தேர்வுகளிலும் 200-க்கு 200, 100-க்கு 100 பெற்ற மாணவர்களின் எண்ணிக்கையும், சராசரி மதிப்பெண் பெற்ற மாணவர்கள் எண்ணிக்கையும் தலைகீழாக மாறியது; அதாவது வெகுவாகக் குறைந்தது. ஆனால், அது குறித்து நாம் கவலைப்படத் தேவையில்லை; மனப்பாட கல்வி முறையைவிட, பாடம் குறித்த புரிதலே அவசியம் என கல்வியாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.  மேலும், பிற துறைகளைப் போன்றே கல்வித் துறையிலும் மாற்றங்கள் தவிர்க்க முடியாது. அதுவும், பெரும் சவால்களை எதிர்கொள்வதற்காக ஏற்படுத்தப்பட்ட மாற்றத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஒரு குறிப்பிட்ட பாடத்தில் புத்தகத்தின் பின்பகுதியில் இடம்பெற்ற கேள்விகள் மட்டுமல்ல; அதன் எந்தப் பகுதியில் இருந்து வினாக்கள் இடம்பெற்றாலும் என்னால் பதிலளிக்க முடியும்; அது மட்டுமல்ல பாடத்தோடு தொடர்புடைய விஷயங்கள் குறித்துக் கேட்டாலும் சரியான விடையை எழுத முடியும் என்ற நம்பிக்கை மாணவர்களிடத்தில் ஏற்பட வேண்டும். அதற்கு மாணவர்களும், ஆசிரியர்களும் தங்களது வழக்கமான செயல்பாடுகளிலிருந்து எப்படி மாறுபட வேண்டும் என ஆசிரியர்கள், கல்வியாளர்கள் சில வழிகாட்டுதலைத் தெரிவித்துள்ளனர்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews