போலி ஆவணங்களை சமர்ப்பித்து ஆயிரம் அரசு ஊழியர்கள் வருமான வரி ஏய்ப்பு - வழக்கு பதிவு செய்ய முடிவு - A thousand government employees evaded income tax by submitting fake documents - decision to register a case
மத்திய, மாநில அரசு பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களில் சிலர் வருமான வரி கணக்கில் மோசடி செய்து, வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது.
அந்தவகையில் போலியான ஆவணங்களை சமர்ப்பித்து அரசு, தனியார் துறையை சேர்ந்த ஆயிரம் ஊழியர்கள் வரி ஏய்ப்பில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் சிக்கியவர்கள் கலக்கத்தில் இருக்கிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை பாயப்போகிறது. இதுதொடர்பாக தமிழ்நாடு வருமான வரித்துறை கூடுதல் கமிஷனர் ஜனார்த்தனன் விளக்கம் அளித்துள்ளார். வருமான வரியை பொறுத்தவரை கடந்த ஆண்டு வரை புதிய வருமான வரி முறைப்படி ஆண்டுக்கு 7.25 லட்சம் சம்பளம் வாங்குவோருக்கு வரியாக ஒரு ரூபாய் கூட கட்ட வேண்டியது இல்லை.. அதேபோல் பழைய வருமான வரிமுறைப்படி ஆண்டுக்கு ஐந்து லட்சம் வரை சம்பளம் வாங்குவோர் வருமான வரி கட்ட தேவையில்லை..(இப்போது மாறிவிட்டது). இதில் பழைய முறைப்படி 10 லட்சம் வரை வருமான வரி விலக்கு பெற முடியும்.அதேபோல் வரியும் குறைவாவே கட்ட வேண்டியதிருக்கும்.. இதில் பல்வேறு சேமிப்பு, காப்பீடு மற்றும் லோன் போன்றவற்றை கணக்கு காட்ட வேண்டும்.
இந்நிலையில் மத்திய, மாநில அரசு பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பல்வேறு தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களில் சிலர் வருமான வரி கணக்கில் மோசடி செய்து, வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக புகார் எழுந்திருக்கிறது.. அதன் அடிப்படையில் வருமான வரித்துறையினர் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அமலாக்க நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
சென்னை அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் வருமான வரி புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சமீபத்தில் ஆய்வும் நடத்தி இருந்தார்கள், இதே போன்று பல்வேறு அலுவலகங்களிலும் ஆய்வு செய்தார்கள். இந்த ஆய்வில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் மூலம் பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக வருமான வரித்துறைக்கு தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு வருமான வரித்துறை கூடுதல் கமிஷனர் ஜனார்த்தனன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறுகையில், "தமிழகத்தில் உள்ள கழகங்கள் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வருமான வரி செலுத்துவதில் முறைகேடு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அவர்கள் போலியான ஆவணங்கள் சமர்ப்பித்து அதிக தொகையை திரும்ப பெற்று வரி ஏய்ப்பில் ஈடுபட்டு உள்ளனர். இதில் வருமான வரித்துறை செயல்பட்டாளர்கள், பட்டய கணக்காளர்கள் மற்றும் சில இடைத்தரகர்களுடன் இணைந்து போலியான நன்கொடை ரசீதுகள், போலியான மருத்துவ செலவு ரசீது, ஜோடிக்கப்பட்ட வாடகை ஒப்பந்தம் போன்றவற்றை காட்டி வருமான வரி செலுத்துவதில் இருந்து விலக்கு பெற்றுள்ளனர்.
சிலர் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளித்ததாக கூறி போலியாக விலக்கு பெற்றுள்ளனர். போலி ரசீதுகள் பல பான் எண்களுக்கு பயன்படுத்தப்பட்டு உள்ளது. பல ஊழியர்கள் கல்வி கடன், தனிநபர் கடன் வாங்கியதாக கூறி அதற்கு வட்டி செலுத்துவதாக கூறி பல லட்சம் ரூபாயை விலக்காக கோரி உள்ளனர். இதுபோன்ற போலியான கோரிக்கைகளும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.
வீட்டு உரிமையாளரின் பெயரில் போலியான வாடகை ரசீதுகளை ஊழியர்களுக்கு வருமான வரி ஆலோசகர்கள் வாங்கி கொடுத்துள்ளனர். இந்த விசாரணையில் பல்வேறு டாக்டர்களின் பெயரில் போலி மருத்துவ சான்றிதழ்கள், ரசீதுகளை தயார் செய்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
அதுபோல் மின்சார வாகனத்தை கடன் மூலம் வாங்கியதாகவும் அதற்கு வட்டி கட்டுவதாக கூறி சில ஊழியர்கள் வரி விலக்கிற்கு தவறாக கோரி உள்ளனர். வரி செலுத்துவதற்கு போலியான காரணங்களை தெரிவித்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
பொதுத்துறை நிறுவனங்களில் திருச்சி பி.எச்.இ.எல்., படைக்கலன் தொழிற்சாலை நிறுவனம், தமிழ்நாடு மின்சார வாரியம், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், நெல்லை மாவட்ட கோர்ட்டு ஊழியர்களும், பெருநிறுவனங்களின் ஊழியர்களும் பல்வேறு தனியார் நிறுவனங்களும் இந்த வரி மோசடியில் ஈடுபட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது" இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.