Officials plan to secretly close 80 government primary schools?! - What's going on? - 80 அரசு தொடக்கப்பள்ளிகளை ரகசியமாக மூடும் திட்டத்தில் அதிகாரிகள்?! - நடப்பது என்ன?
மலை மாவட்டமான நீலகிரி, பழங்குடிகள், பட்டியலின மக்கள், தோட்ட தொழிலாளர்கள், மலை காய்கறி விவசாய கூலிகள் என விளிம்பு நிலை மக்கள் நிறைந்த மாவட்டமாக இருக்கிறது. முதல் தலைமுறையாக கல்வி கற்கும் இந்த மக்களின் கல்வித் தேவையைப் பூர்த்தி செய்யும் ஒரே நம்பிக்கையாக அரசு பள்ளிகள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன.
போக்குவரத்து வசதிகளற்ற மலை கிராமங்களிலும், வனங்கள் அடர்ந்த பகுதிகளிலும் அரசு பள்ளிகள் மட்டுமே தொடர்ந்து கல்வி சேவையாற்றி வருகின்றன. அதிகரிக்கும் தனியார் பள்ளிகள், குறைந்த மக்கள் அடர்த்தி போன்ற காரணங்களால் கிராம பகுதிகளில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்நிலையில், 15 மாணவர்களுக்கும் குறைவாக இருக்கும் பள்ளிகளை மூடும் விதமாக அந்த மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் கொடுத்து அருகில் உள்ள பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்குமாறு கல்வித்துறை தொடர்பான ஆய்வு கூட்டத்தில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் லக்ஷ்மி பவ்யா தன்னீரு உத்தரவிட்டுள்ளார் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதன் அடிப்படையில் 15 மாணவர்களுக்கும் குறைவாக இருக்கும் பள்ளிகளின் விவரங்கள் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் தலைமையில் சேகரிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 80 பள்ளிகளை மார்ச் மாதத்திற்குள் மூடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் விளிம்பு நிலை மக்களின் கல்வி தடைபடும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. அரசு தொடக்கப் பள்ளிகளை மூடும் நடவடிக்கைகளை மிகவும் ரகசியமாக மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இதன் பின்னணி குறித்து நம்மிடம் தெரிவித்த ஆசிரியர் சங்க நிர்வாகி ஒருவர் , " 15 மாணவர்களுக்கும் குறைவாக இருப்பதாக குன்னூர் வட்டாரத்தில் 19 அரசு தொடக்கப் பள்ளிகள், கூடலூர் வட்டாரத்தில் 18 தொடக்கப் பள்ளிகள், கோத்தகிரி வட்டாரத்தில் 11 தொடக்கப் பள்ளிகள், ஊட்டி வட்டாரத்தில் 37 தொடக்கப் பள்ளிகள் என மொத்தம் 85 அரசு தொடக்கப் பள்ளிகளை மூடுவதற்கான பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், பெற்றோரை தனித்தனியாக அழைத்து குழந்தைகளை வேறு பள்ளியில் சேர்க்குமாறு தொிவிக்க வேண்டும்.
இது குறித்து பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட யாருக்கும் தெரிவிக்க கூடாது. எந்தவித பிரச்சனையும் எழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த பணிகளை முறையாக முடிக்கும் தலைமையாசிரியர்களுக்கு அவர்கள் கேட்கும் பள்ளிக்கு பணியிட மாறுதல் தரப்படும். உாிய நடவடிக்கை எடுக்காத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தொிவிக்கப்பட்டுள்ளது" என்றார்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.