அதிகரிக்கும் ‘ஆல் பாஸ்’ - அசத்தும் மிரட்டுநிலை அரசு உயர்நிலைப் பள்ளி! Increasing 'All Passes' - Government High School in a state of terror!
அரிமளம் அருகே மிரட்டுநிலை அரசு உயர்நிலைப் பள்ளியில் நடத்தப்படும் தேர்வுகளில் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெறும் மாணவ, மாணவிகளுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்படுவதால், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்து வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே மிரட்டுநிலை அரசு உயர்நிலைப் பள்ளியில் சுமார் 300 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் பயிலும் அனைத்து மாணவ, மாணவிகளும் கல்வியில் சிறந்து விளங்குவதற்காக நிகழாண்டில் காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகளில் அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெறும் மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.500 வீதம் வழங்கப்பட்டுள்ளது. இது மாணவர்களிடையே கற்றல் ஆர்வத்தை தூண்டியிருப்பதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர். இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் ஏ.எல்.முத்துக்குமார் கூறியதாவது: ஒவ்வொரு வகுப்பிலும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மாணவ, மாணவிகள் படிப்பில் நாட்டமின்றி இருக்கின்றனர். இவர்களிடையே கல்வியின் அவசியத்தை புரிய வைப்பதுடன், மற்ற மாணவர்களுடன் போட்டியிட்டு படிக்க வைக்கும் விதமாக ஆஸ்திரேலியாவில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் மீ.மாதவன் மூலம் காலாண்டுத் தேர்வில் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்ற 104 பேருக்கு தலா ரூ.500 வீதம் கொடுக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற அரையாண்டுத் தேர்வில் முழுத் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 130 ஆக உயர்ந்தது. இவர்களுக்கும் தலா ரூ.500 வீதம் மொத்தம் ரூ.1.17 லட்சம் வழங்கப்பட்டது. இதனால், ஒவ்வொரு ஆண்டும் காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகளில் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெறும் அனைவருக்கும் ரொக்கப் பரிசு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
தவிர, நலிவுற்ற குடும்பங்களைச் சேர்ந்த 36 மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள் வாங்கிக் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், எழுத்து, வாசிப்புக்கு ஆசிரியர்கள் மூலம் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது என்றார். ஆசிரியர்களின் இந்த புதிய முயற்சிக்கு அப்பகுதி மக்கள் வரவேற்பும், பாராட்டும் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.