Tamil Nadu government orders allocation of Rs. 152 crore for basic facilities in all types of colleges -
அனைத்து வகை கல்லூரிகளில் அடிப்படை வசதிகளுக்கு ரூ.152 கோடி ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு உத்தரவு
நடப்பு 2024-25ம் ஆண்டுக்கு 31 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் 12 அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் 6 அரசு பொறியியல் கல்லூரிகளுக்கு தேவையான ஆய்வகங்கள், வகுப்பறைகள் மற்றும் இதர உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக நிதி ஒப்பளிப்பு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை பெருந்தலைவர் காமராசர் கல்லூரி மேம்பாடு திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் கல்லூரிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.152 கோடியே 96 லட்சத்து 83 ஆயிரம் நிதி ஒப்பளிப்பு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் பெருந்தலைவர் காமராசர் கல்லூரி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 2022ம் ஆண்டு முதல் 5 ஆண்டுகளுக்கு ரூ.1000 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, 2022-23 மற்றும் 2023-24ம் ஆண்டுகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பல்வேறு அரசுக் கல்லூரிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. நடப்பு 2024-25ம் ஆண்டுக்கு 31 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் 12 அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் 6 அரசு பொறியியல் கல்லூரிகளுக்கு தேவையான ஆய்வகங்கள், வகுப்பறைகள் மற்றும் இதர உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக ரூ.152 கோடியே 96 லட்சத்து 83 ஆயிரம் நிதி ஒப்பளிப்பு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சென்னை காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரி, ராணி மேரி கல்லூரி, கோவை, திருப்பூர், தர்மபுரி, நீலகிரி, சேலம், அரியலூர், முசிறி, செங்கல்பட்டு, கடலூர் (பெரியார் கலைக்கல்லூரி, திருகொளஞ்சியப்பர் கலைக்கல்லூரி), விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி, வேலூர் ஆகிய பகுதியிலுள்ள அரசு கலைக் கல்லூரிகளிலும், கோவை தொண்டாமுத்தூர், நீலகிரி, கூடலூர், குமாரபாளையம், வேடசந்தூர், வீரபாண்டி, கடலாடி, நன்னிலம், திருத்துறைப்பூண்டி, நாகர்கோவில், புதுக்கோட்டை, திருச்சி தந்தை பெரியார் கலை அறிவியல் கல்லூரி, வேலூர் மற்றும் விழுப்புரத்தில் உள்ள புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் ஆகிய பகுதிகளிலுள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளிலும், சேலம், கொடைக்கானல், சிவகங்கை, கும்பகோணம், தஞ்சாவூர் ஆகிய பகுதிகளிலுள்ள அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரிகளிலும் என 31 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு தேவையான ஆய்வகங்கள், வகுப்பறைகள், மற்றும் இதர உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள ரூ.100 கோடியே 15 லட்சம் நிதி ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டத்தின் கீழ் 2024-25ம் ஆண்டில் வேலூர், திருச்சி, திருநெல்வேலி, கோயம்புத்தூர், மதுரை மற்றும் சென்னை மண்டலங்களிலுள்ள 12 அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் 6 அரசு பொறியியல் கல்லூரிகளுக்கு தேவையான ஆய்வகங்கள், வகுப்பறைகள் மற்றும் இதர உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.5 ஆயிரத்து 281 கோடியே 83 லட்சம் நிதி தமிழ்நாடு அரசு ஒதுக்கியுள்ளது. இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.