பணி நிரந்தரக் கோரிக்கை பரிசீலனை.. பகுதி நேர ஆசிரியர்கள் மகிழ்ச்சி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, November 19, 2024

Comments:0

பணி நிரந்தரக் கோரிக்கை பரிசீலனை.. பகுதி நேர ஆசிரியர்கள் மகிழ்ச்சி



பணி நிரந்தரக் கோரிக்கை பரிசீலனை.. பகுதி நேர ஆசிரியர்கள் மகிழ்ச்சி!

தமிழக அரசுப் பள்ளிகளில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய பரிசீலிக்க நடவடிக்கையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வருக்கு பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கோரிக்கை வைத்தார். இந்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு, பரிசீலிக்க நடவடிக்கையில் உள்ளது என ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநர் தெரிவித்துள்ளார். நீண்ட காலமாக பணி நிரந்தரம் வலியுறுத்தி வருகின்ற பகுதி நேர ஆசிரியர்களுக்கு இந்த செய்தி மகிழ்ச்சியாக உள்ளது. தமிழக முதல்வர் திமுக தேர்தல் வாக்குறுதி 181 ஐ நிறைவேற்றி பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வார் என 12 ஆயிரம் குடும்பங்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

தற்போதைய தொகுப்பூதியம் 12,500 ரூபாய் சம்பளத்தை கால முறை சம்பளமாக்க வேண்டும் என்பதே பகுதி நேர ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும். 13 ஆண்டுகளாக தற்காலிகமாக பகுதி நேர ஆசிரியர்களாக உடற்கல்வி பாடத்தில் 3700 பேர், ஓவியம் பாடத்தில் 3700 பேர், கணினி அறிவியல் பாடத்தில் 2 ஆயிரம் பேர், தையல் பாடத்தில் 1700 பேர், இசை பாடத்தில் 300 பேர், தோட்டக்கலை பாடத்தில் 20 பேர், கட்டிடக்கலை பாடத்தில் 60 பேர், வாழ்வியல் திறன் பாடத்தில் 200 பேர் என மொத்தம் பன்னிரண்டாயிரம் பேர் பணிபுரிந்து வருகின்றனர். 10 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் பணிபுரிந்த பகுதிநேர ஆசிரியர்களுக்கு 2021ஆம் ஆண்டு சட்டமன்ற பொதுத் தேர்தலில் திமுக தேர்தல் அறிக்கையில் பணிநிரந்தரம் செய்வதாக வாக்குறுதி அளிக்கப்பட்டது. திமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்ததுமுதல் பணி நிரந்தரம் கேட்டு பகுதி நேர ஆசிரியர்கள் கோரிக்கை வைத்து போராடி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் 4ஆம் தேதி அன்று 2,500 ரூபாய் சம்பள உயர்வு மற்றும் 10 லட்சம் மருத்துவ காப்பீடு என இரண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதில் சம்பள உயர்வு இந்த 2024ஆம் ஆண்டு ஜனவரியில் வழங்கப்பட்டது. இதனால் 12,500 ரூபாய் சம்பளம் பெறுகின்றனர். மருத்துவ காப்பீடு அறிவிப்போடு உள்ளது. பல ஆண்டாக பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என அவர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதுபோன்ற சூழலில்தான் அவர்களுக்கு ஆறுதல் தரும் வகையில் இந்த செய்தி வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews