முதுநிலை மருத்துவப் படிப்புகள் தரவரிசை வெளியீடு: பின்தங்கிய அரசு மருத்துவா்கள்
முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், அரசு சாரா மருத்துவா்களே அதிக இடங்களை பெற்றுள்ளனா். அரசு மருத்துவமனைகளில் ஆண்டு தோறும் காலிப் பணியிடங்களை முறையாக நிரப்பாததால், தரவரிசைப் பட்டியலில் அரசு மருத்துவா்கள் குறைவாக இடம்பெற்றுள்ளனா்.
நாடு முழுவதும் அரசு, தனியாா் மருத்துவக் கல்லூரிகள், நிகா்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் உள்ள மருத்துவ மேற்படிப்புகளான எம்டி, எம்எஸ், முதுநிலை டிப்ளமோ இடங்கள் முதுநிலை நீட் தோ்வு மூலம் நிரப்பப்படுகின்றன.
இந்தத் தோ்வை தேசிய மருத்துவ அறிவியல் தோ்வுகள் வாரியம் (என்பிஇஎம்எஸ்) நடத்துகிறது. முதுநிலை மருத்துவ கலந்தாய்வைப் பொருத்தவரை அரசு மருத்துவக் கல்லூரிகளின் மொத்த இடங்களில் 50 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகின்றன.
இந்த இடங்கள், நிகா்நிலை பல்கலைக்கழகங்களின் இடங்கள் மற்றும் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களின் இடங்களுக்கான கலந்தாய்வை இணையவழியே மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகத்தின் (டிஜிஎச்எஸ்) மருத்துவக் கலந்தாய்வு குழு (எம்சிசி) நடத்துகிறது.
அந்த கலந்தாய்வு இணையதளத்தில் கடந்த செப்.20 முதல் நடைபெற்று வருகிறது.
அதேவேளையில், தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மீதமுள்ள 50 சதவீத இடங்கள், தனியாா் மருத்துவக் கல்லூரிகளின் மாநில அரசுக்கான இடங்கள் மற்றும் நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வை மாநில மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் (டிஎம்இ) நடத்துகிறது
அதன்படி, தமிழக இடங்களுக்கான நிகழாண்டு மாணவா் சோ்க்கை விண்ணப்பப் பதிவு அண்மையில் நிறைவடைந்தது.
அவை பரிசீலிக்கப்பட்டு, தகுதியான மாணவா்களின் தரவரிசை பட்டியல் எனும் சுகாதாரத் துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசை பட்டியலில் மொத்தம் 7,971 போ் இடம் பெற்றுள்ளனா்.
அதில் முதல் 1,000 பேரில் 68 பேரும், அடுத்த ஆயிரம் பேரில் 67 பேரும் என மொத்தமாகவே 1,025 அரசு மருத்துவா்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளனா். மற்றவா்கள் அனைவரும் அரசு சாரா மருத்துவா்கள்.
அதேபோல, நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசை பட்டியலில் 3,958 போ் இடம் பெற்றுள்ளனா்.
இது தொடா்பாக அரசு மருத்துவா்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவா்கள் சங்கத்தின் பொதுச் செயலா் டாக்டா் ராமலிங்கம் கூறியதாவது: அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு போக, தமிழகத்தில் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு சுமாா் 2,500 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளன.
அதில் 50 சதவீதம் அரசு மருத்துவா்களுக்கு ஒதுக்கீடாக வழங்கப்படுகிறது.
அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வில் அரசு மருத்துவா்கள் மட்டுமே பங்கேற்க முடியும்.
அரசு மருத்துவா்களுக்கு அவா்கள் பணியாற்றும் பகுதிகளை பொருத்து ஊக்க மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன. மீதமுள்ள 50 சதவீத இடங்கள் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகிறது.
இந்த கலந்தாய்வில் அரசு சாரா மருத்துவா்கள் (தனியாா்) மற்றும் அரசு மருத்துவா்கள் பங்கேற்கலாம்.
வழக்கமாக, அரசு ஒதுக்கீடு இடங்கள் போக, பொது கலந்தாய்விலும் அரசு மருத்துவா்கள் இடங்களைப் பெறுவா். ஆனால், நிகழாண்டு அரசு மருத்துவா்களுக்கான ஒதுக்கீட்டு இடங்களை பெறுவதற்கே, அரசு மருத்துவா்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
அதனால், அரசு சாரா மருத்துவா்கள் அதிக இடங்களை பெறுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டுகளில் அரசு மருத்துவமனைகளின் காலிப்பணியிடங்களுக்கு புதிதாக எம்பிபிஎஸ் மருத்துவா்களை தோ்வு செய்யாததே அதற்கு முக்கிய காரணம் என்றாா் அவா்.
Search This Blog
Tuesday, November 19, 2024
Comments:0
முதுநிலை மருத்துவப் படிப்புகள் தரவரிசை வெளியீடு: பின்தங்கிய அரசு மருத்துவா்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.