14,019 காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரந்தர ஆசிரியர்களைக் கொண்டு நிரப்ப வேண்டும். - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, May 23, 2024

Comments:0

14,019 காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரந்தர ஆசிரியர்களைக் கொண்டு நிரப்ப வேண்டும்.


ull-width-responsive="true">


14,019 காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரந்தர ஆசிரியர்களைக் கொண்டு நிரப்ப வேண்டும். 14,019 vacant teaching posts should be filled with permanent teachers.

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் 4,989 இடைநிலை ஆசிரியர்கள் 5,154 பட்டதாரி ஆசிரியர்கள் 3,876 முதுகலை ஆசிரியர்கள் என மொத்தம் 14,019 ஆசிரியர்கள் பள்ளி மேலாண்மைக் குழுக்களின் மூலம் தற்காலிகமாக நியமனம் செய்யப்பட்டிருப்பதாகவும், இது தி.மு.க. அரசின் மூன்றாண்டு கால சாதனை என்றும் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை பெருமிதம் தெரிவித்துள்ளது. உண்மையில் தலைகுனிய வேண்டிய ஒரு விஷயத்தை சாதனையாக காட்ட அரசு முயல்வது கண்டிக்கத்தக்கது ஆகும்.

தமிழ்நாட்டில் 2021-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக 4,989 இடைநிலை ஆசிரியர்கள், 5,154 பட்டதாரி ஆசிரியர்கள், 3,188 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் என மொத்தம் 13,331 ஆசிரியர்களை தற்காலிகமாக நியமிக்க ஆணையிடப்பட்டது. பின்னர் தற்காலிக ஆசிரியர் பணியிடங்களின் எண்ணிக்கை 14,019 ஆக அதிகரிக்கப்பட்டது. தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பதால் ஏற்படும் பாதிப்புகளை பட்டியலிட்டு, அவர்களுக்கு மாற்றாக நிரந்தர ஆசிரியர்களை உடனே நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன். அதுகுறித்து அப்போது விளக்கமளித்த தமிழக அரசு, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரந்தர ஆசிரியர்களை தேர்வு செய்ய சில மாதங்கள் ஆகும் என்றும், அதுவரை மட்டுமே தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தது. ஆனால், அதன்பின் இரு ஆண்டுகளுக்கு மேலாகியும் தற்காலிக ஆசிரியர்களே பணிகளில் தொடர்கின்றனர்; நிரந்தர ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. அரசு நினைத்திருந்தால் 6 மாதங்களில் நிரந்தர ஆசிரியர்களை தேர்ந்தெடுத்து பணியில் அமர்த்தியிருக்க முடியும். ஆனால், அரசு பள்ளி மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்குவதில் விருப்பம் இல்லாததால்தான் நிரந்தர ஆசிரியர்களை நியமிப்பதில் தமிழக அரசு காலதாமதம் செய்து வருகிறது.

அரசு பள்ளிகளில் ஆசிரியர்களை தற்காலிக அடிப்படையில் நியமிப்பது அனைத்து வகைகளிலும் கேடானது ஆகும். முதலில் தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்படும் ஆசிரியர்களில் இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.7,500 பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.10,000, முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.12,000 என்ற அளவில் மிகக் குறைந்த ஊதியமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது அவர்களுக்கு எந்த வகையிலும் போதுமானது அல்ல. இது தற்காலிக ஆசிரியர்களின் உழைப்பை சுரண்டும் செயல் ஆகும்.

அடுத்ததாக தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பது சமூகநீதிக்கு பெரும் தீங்கை ஏற்படுத்தும். தற்காலிக ஆசிரியர்கள் பள்ளிகள் அளவில், பள்ளி மேலாண்மை குழுவால் நியமிக்கப்பட்டதால், அதில் இட ஒதுக்கீடு கடைபிடிக்கப்படவில்லை. அவர்களுக்கு மாற்றாக புதிய நிரந்தர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருந்தால், அதில் இட ஒதுக்கீடு கடைபிடிக்கப்பட்டிருக்கும். ஆனால், தற்காலிக ஆசிரியர்களைக் கொண்டே இரு ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளிகளை நடத்தி வருவதால், சமூகநீதிக்கும் அரசு பெருந்துரோகம் செய்கிறது. மூன்றாவதாக தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்கப்படுவோர் மீது எந்தவித பொறுப்புடைமையையும் சுமத்த முடியாது. அதனால் அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்குவதை அரசுகளால் உறுதி செய்ய முடியாது. இந்த மூன்று சிக்கல்களுக்கும் ஒரே தீர்வு அரசு பள்ளிகளுக்கு நிரந்தரமான ஆசிரியர்களை நியமிப்பது மட்டும் தான். ஆனால், அதை செய்ய அரசு தயாராக இல்லை.

தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு இதுவரை 2,207 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். கடந்த 3 ஆண்டுகளில் 15 ஆயிரத்திற்கும் கூடுதலான ஆசிரியர்கள் பணி ஓய்வு பெற்றுள்ள நிலையில், அவர்களால் காலியான இடங்களுக்கும் புதிய ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படவில்லை. இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் ஆகியோரை தேர்ந்தெடுக்க அறிவிக்கைகள் வெளியிடப்பட்டிருக்கும் போதிலும், தேர்ந்தெடுக்கப்படவுள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கை காலியிடங்களின் எண்ணிக்கையை விட மிகக்குறைவாகவே இருக்கிறது என்பது தான் உண்மை. தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்தால் தற்காலிக ஆசிரியர்களுக்கும், தற்காலிக பணியாளர்களுக்கும் பணி நிலைப்பு வழங்குவோம் என்று வாக்குறுதி அளித்திருந்த தி.மு.க., இப்போது அதை செய்யவில்லை என்பது மட்டுமின்றி, காலியிடங்களையும் தற்காலிக ஆசிரியர்களக் கொண்டு நிரப்புவது நியாயமல்ல. தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பது மிகவும் ஆபத்தானது என்று சென்னை ஐகோர்ட்டு கருத்து கூறியுள்ள நிலையில், அதை மனதில் கொண்டு நிரந்தர ஆசிரியர்களை அரசு நியமிக்க வேண்டும்.

அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர் ஏழைக் குடும்பங்களில் இருந்து வருபவர்கள். அரசு பள்ளிகளில் போதிய எண்ணிக்கையில் ஆசிரியர்கள் இருந்தால்தான் அவர்களுக்கு தரமான கல்வி கிடைக்கும். இதை கருத்தில் கொண்டு அனைத்து பள்ளிகளிலும் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரந்தர ஆசிரியர்களைக் கொண்டு நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews