அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மார்ச் 25 முதல் நீட் பயிற்சி - பள்ளி கல்வித்துறை அறிவிப்பு.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு வரும் 25-ஆம் தேதி முதல் நீட் பயிற்சி தொடங்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிளஸ் டூ பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் மருத்துவ படிப்பை தேர்வு செய்ய நீட் தேர்வு எழுதுவது கட்டாயம். அந்த வகையில் தற்போது பிளஸ் டு மாணவர்களுக்காக பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், வரும் மார்ச் 25-ந் தேதி முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான நீட் தேர்வு பயிற்சி தொடங்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளி கல்வித்துறை இயக்குனர் அறிவொளி மாவட்ட பள்ளி கல்வித்துறைக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்,
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான நீட் தேர்வு பயிற்சிகள், மார்ச் 25-ம் தேதி முதல் மே 2-ம் தேதி வரை, கல்வி மாவட்ட அளவில் வழங்கப்படும். பயிற்சி வகுப்பின்போது மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி, மதிய உணவு, மாலை தேநீர் வழங்கப்படும், பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ள பள்ளிகளுக்கு வந்து செல்வதற்கான பேருந்து கட்டணங்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவொளி, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில், நீட் பயிற்சி வகுப்புக்காக, இணையதள வசதி மற்றும் ஸ்மார்ட் கிளாஸ் வசதி உடைய பள்ளிகளை பயிற்சி மையங்களாக தேர்வு செய்ய வேண்டும், பயிற்சி மையங்களில் தமிழ் மற்றும் ஆங்கில வழியில் பயிற்சிகள் மற்றும் தேர்வுகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 1-ந் தேதி தொடங்கிய பிளஸ் டூ தேர்வு, வரும் மார்ச் 22-ந் தேதி வரை நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து 2 நாட்கள் இடைவெளியில் மார்ச் 25-ந் தேதி வரை நீட் பயிற்சி வகுப்புகள் தொடங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.