இந்திய வசதியுரிமைகள் சட்டம் 1882 (Indian Easements Act-1882) குறித்த ஒரு தெளிவான பதிவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, December 10, 2023

Comments:0

இந்திய வசதியுரிமைகள் சட்டம் 1882 (Indian Easements Act-1882) குறித்த ஒரு தெளிவான பதிவு



*இந்திய வசதியுரிமைகள் சட்டம் 1882 (Indian Easements Act-1882) குறித்த ஒரு தெளிவான பதிவு காண்போமா?*

*வசதியுரிமைக்கு ஏற்படும் தொல்லைகள்*

ஒரு நிலத்தின் உரிமையாளர், தன்னுடைய நிலத்தை நல்லமுறையில் அனுபவிப்பதற்காக, அருகில் உள்ள நிலத்தில் சில வசதிகளை ஏற்படுத்திக் கொள்வதற்கு அல்லது அந்நிலத்தின் மீது சில கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு உள்ள உரிமையே வசதியுரிமை எனப்படும். வசதியுரிமை என்பதை "இந்திய வசதியுரிமைகள் சட்டம்" (Indian Easements Act 1882) பிரிவு 4 வரையறை செய்கிறது. மற்றொருவருடைய நிலத்தில் இருந்து வசதியுரிமை பெறும் சொத்து ஓங்கு சொத்து (Dominent heritage) என்றும் ஓங்கு சொத்துக்கு வசதி உரிமைகளை வழங்கும் சொத்துக்கு ஓடுங்கு சொத்து (Servient heritage) என்றும் அழைக்கப்படும். காற்று அல்லது வெளிச்சம் பெறும் உரிமை, பாதை உரிமை, மழைநீர் அல்லது கழிவுநீர் கடத்தும் உரிமை, ஒரு சொத்து சேதமடையாமல் இருக்க அருகிலுள்ள சொத்தை தாங்கி பிடித்துக் கொள்ளும் உரிமை ஆகியன வசதியுரிமைக்கு சில எடுத்துக்காட்டுகளாகும். வசதி உரிமைகளுக்கு ஏற்படும் தொல்லைகளால் ஏற்பட்ட இழப்பை வாதி நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை. அவர் தனக்குரிய வசதியுரிமையை நிரூபித்தாலே போதுமானதாகும்.

1. தாங்கு வசதியுரிமை (Right to support)

ஒரு நிலம் சரிந்து விழாமல் இருப்பதற்கு அந்நிலம் அதன் அருகில் உள்ள நிலத்தை தாங்கிப் பிடித்துக் கொள்ளலாம். இவ்வாறு ஒரு நிலம் சரிந்து விழாமல் இருக்க அருகில் உள்ள நிலத்தை தாங்கிப் பிடித்துக் கொள்வதற்கு இருக்கும் உரிமையே தாங்கு வசதியுரிமை எனப்படும். இது எல்லா நிலங்களுக்கும் உரிய இயற்கை உரிமையாகும். எனவே ஒரு நிலம் சரிந்து விழுகின்ற வகையில் அல்லது சேதமடையும் வகையில், அருகில் உள்ள நிலத்தில் பள்ளம் தோண்டுவதோ மண்பிடிப்பை அகற்றுவதோ கூடாது. தாங்கு வசதியுரிமைக்கு தீங்கிழைக்கும் வகையில், அருகில் உள்ள நிலத்தை தோண்டுவது அல்லது சுரங்கம் வெட்டுவது ஆகியன தொல்லை தீங்காக கருதப்படும். இத்தகைய இயற்கையான தாங்கு வசதியுரிமை, கட்டிடங்கள் இல்லாத காலி நிலங்களுக்கு மட்டுமே உண்டு. கட்டிடங்கள் கீழே விழாமல் இருப்பதற்குரிய தாங்கு வசதியுரிமை இயற்கை உரிமை அல்ல. ஆனால் கட்டிடங்களுக்குரிய தாங்கு வசதியுரிமை இயற்கை உரிமையாக கிடைக்காவிட்டாலும், அது பக்கத்து நிலத்தின் உரிமையாளரின் அனுமதி மற்றும் நீடாணுபோக உரிமையின் மூலம் பெறப்படலாம்.

Dalton -Vs- Angus (1881) 6 A.C.740 என்ற வழக்கில் வாதியின் வீடும் பிரதிவாதியின் வீடும் அருகருகே உள்ள நிலங்களில் அமைந்திருந்தது. வாதி தன்னுடைய வீட்டை இடித்துவிட்டு தொழிற் சாலையாக மாற்றி விட்டார். இப்போது வாதியின் தொழிற்சாலை கட்டிடத்திற்கு பிரதிவாதியின் நிலத்திலிருந்து முன்பைக் காட்டிலும் கூடுதலான தாங்கும் வசதியுரிமை தேவைப்பட்டது. அதன் பிறகு 20 ஆண்டுகள் கழித்து, பிரதிவாதி தன்னுடைய வீட்டை இடித்துவிட்டு தன்னுடைய நிலத்தில் சில பள்ளங்கள் தோண்டினார். இதனால் வாதியின் கட்டிடம் தாங்கும் வசதியுரிமையை இழந்து கீழே விழுந்து விட்டது. வாதியின் தொழிற்சாலை கட்டிடத்திற்கு இயற்கையாக தாங்கும் வசதியுரிமை இல்லாவிட்டாலும், அது கட்டப்பட்டு 20 ஆண்டுகளுக்கு மேலாக அவ்வசதியுரிமையை அனுபவித்து வந்துள்ளது. எனவே, அக்கட்டிடம் நீடாணுபோக உரிமை (Presscription) யின் மூலம் தாங்கு வசதியுரிமையைப் பெற்றுள்ளது. எனவே பிரதிவாதி, வாதிக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

2. வெளிச்சம் மற்றும் காற்றுக்கான வசதியுரிமை (Right to light and air)

வெளிச்சம் மற்றும் காற்றுக்கான வசதியுரிமைகள் நிலங்களின் தாங்குவசதியுரிமையைப் போல் இயற்கை உரிமை அல்ல. எனவே, அவ்வசதி உரிமைகளை அனுமதி மற்றும் நீடாணுபோகத்தின் மூலம் மட்டுமே அடைய முடியும். அவ்விதம் நீடாணுபோகத்தின் மூலம் அடைந்த வெளிச்சம் அல்லது காற்றுக்கான வசதியுரிமைக்கு ஊறுவிளைவிப்பது தொல்லை தீங்காகும். நீண்ட காலமாக அனுபவித்து வந்த வெளிச்சத்தை தடை செய்யும் தொல்லை தீங்கிற்காக வழக்கிடும் வாதி, பிரதிவாதியின் செயலால், தான் இதுவரை அனுபவித்து வந்த வெளிச்சத்தின் அளவு போதுமான அளவைக் காட்டிலும் பெருமளவு குறைந்து விட்டது என்பதை நிரூபிக்க வேண்டும். Colls -Vs- Home and Colonial stores Ltd., (1904) A.C. 179 என்ற வழக்கில் பிரதிவாதி எழுப்பிய 42 அடி உயர கட்டிடத்தால் வாதி இதுவரை அனுபவித்து வந்த வெளிச்சம் பாதிக்கப்பட்டதாகக் கூறி அக்கட்டிடம் கட்டப்படுவதை தடைசெய்யக் கோரி வழக்கிடப்பட்டது. ஆனால் கட்டிடம் கட்டப்பட்ட பின்னர் வாதியின் கட்டிடத்திற்கு வரும் வெளிச்சம் முன்பு இருந்த அளவிற்கு வராவிட்டாலும் போதுமான அளவு வெளிச்சம் வந்து கொண்டிருந்தது. வெளிச்சம் தடை செய்யப்படுவதை தொல்லையாக கருதுவதற்கு, ஏற்கனவே அனுபவித்து வந்த வெளிச்சத்தின் அளவு குறைந்துள்ளதா ? என்பதைக் கணக்கில் கொள்ளக் கூடாது போதுமான அளவு வெளிச்சம் வருகின்றதா என்பதையே கணக்கில் கொள்ள வேண்டும்.

போதுமான அளவு வெளிச்சத்திற்கும் குறை வருமாறு வெளிச்சம் தடை செய்யப்பட்டால் மட்டுமே அது தொல்லையாக கருதப்பட வேண்டும். எனவே, இவ்வழக்கில் வாதியின் கட்டிடத்திற்கு போதுமான அளவு வெளிச்சம் வருவதால் பிரதிவாதியின் செயல் தொல்லை ஆகாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அனுமதி அல்லது நீடாணுபோகத்தின் மூலம் அடைந்த காற்றுக்கான வசதியுரிமையை பொதுவாக அண்டை நிலத்தின் எல்லையற்ற மேற்பரப்பு முழுவதிலும் இருந்து கோர முடியாது என்று Webb-Vs- Bird, (1861) 10 C.B. (N.S.) 268- என்ற வழக்கில் பிரதிவாதி கட்டும் கட்டிடம் தன்னுடைய காற்றாலைக்கு வரும் காற்றின் வழியை தடுப்பதாகக் கூறி லாதி வழக்கு தொடர்ந்தார். ஆனால் வாதி அக்காற்றுக் கான வசதியுரிமையை நீடாணுபோகத்தின் மூலம் அடையவில்லை (அதாவது 20 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவித்திருக்கவில்லை) என்பதால் பிரதிவாதியின் செயல் தொல்லை ஆகாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

( தீங்கியல் சட்டம் The Law of Tort) என்ற சட்ட நூலில் இருந்து எடுக்கப்பட்ட செய்தியாகும். இதன் நூல் ஆசிரியர் த.சிவகுமார், B. A. B. L

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews