வரிசைகட்டும் வேலை வாய்ப்புகள்... புதிய பட்டப்படிப்பான ‘B.Plan’ பற்றி தெரியுமா? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, November 28, 2023

Comments:0

வரிசைகட்டும் வேலை வாய்ப்புகள்... புதிய பட்டப்படிப்பான ‘B.Plan’ பற்றி தெரியுமா?



வரிசைகட்டும் வேலை வாய்ப்புகள்... புதிய பட்டப்படிப்பான ‘B.Plan’ பற்றி தெரியுமா?

பொறியியல் பட்டதாரிகள் தங்கள் பெயருடன் பி.இ., பி.டெக்., பி.ஆர்க்., என்றெல்லாம் போட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். அவற்றில் புதிதாக பி.பிளான் (B.Plan) என்பதும் சேர இருக்கிறது. புதிதாக அறிமுகமான பி.பிளான் படிப்பு குறித்து பலர் அறியாது இருக்கிறார்கள். வரும் ஆண்டுகளில் இந்த படிப்பு இன்னும் பிரபலமாக இருப்பதால், தற்போதைய பள்ளி மாணவர்கள் அது குறித்து அறிந்து கொள்வது நல்லது. புதிய படிப்பு: நாட்டின் வளர்ச்சிக்கான திட்டங்களை வகிப்பதிலும் அரசுக்கு வழிகாட்டுவதில் முக்கிய பங்காற்றும் ‘நிதி ஆயோக்’ அமைப்பு, உயர் கல்வி துறைக்கு முக்கியமான வழிகாட்டுதல் வழங்கியது. அதில் நாட்டின் நகர்ப்புற திட்டமிடல் திறன் தொடர்பான ஒரு பரிந்துரையும் அடங்கும். வருங்காலத்தில் திறன் வாய்ந்த பிளானர்கள் (திட்ட அமைப்பாளர்கள்) நாட்டில் அதிகளவில் தேவைப்படுகிறார்கள் என்றும், ஆண்டுக்கு சராசரியாக 6,000 பி.பிளான் பட்டதாரிகள், 2,000 எம்.பிளான் பட்டதாரிகள் தேவைப்படுவதாகவும் நிதி ஆயோக் தெரிவித்தது.

இதன் அடிப்படையில் தமிழக அரசும் தம் பங்குக்கு அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ‘பி.பிளான்’ பட்டப்படிப்பை கடந்த கல்வியாண்டு முதல் தொடங்கியுள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கட்டிடக்கலை (பி.ஆர்க்) பொறியியலை கற்பிக்கும் ‘ஸ்கூல் ஆப் ஆர்க்கிடெக்சர் அண்ட் பிளானிங்’ மூலமாக பி.பிளான் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்கான 40 சீட்டுகளில் பொறியியல் கலந்தாய்வின் முதல் சுற்றிலேயே 38 இருக்கைகள் நிரம்பி விட்டன. வரவேற்புக்குரிய பி.பிளான் படிப்பை இதர கல்லூரிகளிலும் விரைவில் எதிர்பார்க்கலாம். பி.பிளான் என்பதில் கட்டிடங்கள் மற்றும் நகரியங்களுக்கான திட்ட வடிவமைப்பு தயாரிப்பது முக்கிய இடம் பிடித்திருக்கும். இந்தியாவில் நகர்மயமாதலும், ஸ்மார்ட் சிட்டிகள் உருவாக்கமும் அதிகரித்திருப்பதால் பி.பிளான் பட்டதாரிகளின் தேவையும் அதிகரிக்கும். அவை சார்ந்த அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. கட்டிடம் கட்டுதல், கட்டிடக்கலை ஆகியவை மட்டுமன்றி இன்டீரியர் டிசைனிங் துறையில் எதிர்காலத்தை திட்டமிடுவோருக்கும் பி.பிளான் பட்டப்படிப்பு உதவும்.

நுழைவுத்தேர்வு இல்லை: பி.ஆர்க்., படிப்பில் சேர நாட்டா (NATA) நுழைவுத் தேர்வு எழுதுவது கட்டாயம். ஆனால், பி.பிளான் படிப்பில் சேர தமிழ்நாட்டின் வழக்கமான ஒற்றைச் சாளர கலந்தாய்வில் பங்கேற்றால் போதும். பி.இ. சிவில், பி.ஆர்க்., டிசைனிங் படிப்புகளில் ஆர்வம் கொண்டோர் அவற்றுக்கு மாற்றாகவும் பி.பிளான் படிப்பை தேர்ந்தெடுக்கலாம். பிளஸ் 2 மதிப்பெண்களின் அடிப்படையில் பி.பிளான் சேர்க்கை சாத்தியமாகும் என்பதால் நன்றாக படித்து நல்ல மதிப்பெண்கள் பெறுவது நம் கையில் இருக்கிறது.

கணிதம் உள்ளிட்ட அறிவியல் பாடங்களை ஊன்றி படிப்பதுடன், படங்களை வரைவதில் ஆர்வம் கொண்டோரும் அதற்கான திறன்களை வளர்த்துக் கொள்வதன் மூலமும் இப்போதிருந்தே பி.பிளான் படிப்புக்கு தயாராகலாம். எனவே, பி.பிளான் படிப்பில் ஆர்வமுள்ளவர்கள் இப்போதிருந்தே ‘பிளான் பண்ணி’ படிக்க ஆரம்பிக்கலாம்?

- எஸ்.எஸ்.லெனின் | தொடர்புக்கு: leninsuman4k@gmail.com

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews