586 நாட்களுக்கு பிறகு 1-8ம் வகுப்புகளுக்கு இன்று பள்ளி திறப்பு: பூங்கொத்து கொடுத்து மாணவர்களை வரவேற்க ஏற்பாடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, November 01, 2021

Comments:0

586 நாட்களுக்கு பிறகு 1-8ம் வகுப்புகளுக்கு இன்று பள்ளி திறப்பு: பூங்கொத்து கொடுத்து மாணவர்களை வரவேற்க ஏற்பாடு

தமிழகத்தில், கொரோனா தொற்று காரணமாக 586 நாட்களாக மூடிக்கிடந்த 1 முதல் 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் படிக்கும் 32 ஆயிரம் தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் இன்று திறக்கப்படுகின்றன. அந்தந்த தொகுதி அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பூங்கொத்து, பரிசுப் பொருட்கள் கொடுத்து மாணவ -மாணவியரை வரவேற்க உள்ளனர். தமிழகத்தில் கடந்த 2020ம் கல்வி ஆண்டில், நாடு முழுவதும் பரவிய கொரோனா தொற்றால் 2020 மார்ச் 25ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. இந்த பெருந்தொற்று 2021ம் ஆண்டிலும் பரவத் தொடங்கியதால் இந்த ஆண்டும் பள்ளிகள் திறக்கவில்லை.

பொதுத் தேர்வுகள் ஏதும் நடத்தாமல் 10, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். இந்நிலையில் தமிழக அரசு மேற்கொண்ட தீவிர நடவடிக்கைகள் காரணமாக கொரோனா தொற்றின் தீவிரம் படிப்படியாக குறையத் தொடங்கி உள்ளது. இதையடுத்து, செப்டம்பர் 1ம் தேதி முதல் 9, 10 பிளஸ் 1, மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்காக மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது. இந்நிலையில், 1 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின், கற்றலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு, அவர்களுக்காக பள்ளிகள் திறக்கவும் அரசு முடிவு செய்தது. அதன்பேரில் நவம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்தது.

இதையடுத்து கடந்த இரண்டு வாரங்களாக அனைத்து பள்ளிகளிலும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு பள்ளி வளாகங்கள் அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. சுமார் 32 ஆயிரம் பள்ளிகளில் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், 586 நாட்களுக்கு பிறகு இன்று அனைத்து வகை பள்ளிகளும் திறக்கப்படுகின்றன. ஏற்கெனவே 9 முதல் பிளஸ் 2 வரை படிக்கின்ற மாணவர்கள் பள்ளிக்கு வருவதால், அந்த மாணவர்களுக்கும், தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பள்ளிகளுக்கு வரும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டு அரை மணி நேரம் இடைவெளியில் வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை 9 மணிக்கு பள்ளிக்கு வரும் தொடக்க, நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு வரவேற்பு அளிக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இன்று பள்ளிக்கு வரும் மாணவர்களை வர வேற்க அந்தந்த தொகுதியின் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் பள்ளிக் கல்வித்துறையை சேர்ந்த அதிகாரிகள் அனைத்து பள்ளிகளுக்கும் சென்று மாணவ-மாணவியரை வரவேற்க உள்ளனர். குறிப்பாக பூங்கொத்து கொடுப்பது, பரிசுப் பொருட்கள் கொடுப்பது என பல ஏற்பாடுகளுடன் மாணவ மாணவியர் வரவேற்கப்படுவார்கள். நவம்பர் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவித்துவிட்டதால், கடந்த வாரமே மாணவர்களுக்கான பாடப்புத்தகங்கள் வினியோகம் செய்யும் பணிகள் தொடங்கிவிட்டன. இன்று பள்ளிக்கு வரும் சுமார் 34 லட்சம் மாணவ மாணவியர் அனைவரும் முகக் கவசம் அணிந்து வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளியின் நுழைவாயிலில் அவர்களுக்கு தெர்மல் ஸ்கேன்செய்வது, கைகளுக்கு கிருமிநாசினி தெளித்தல் உள்ளிட்ட அனைத்து பரிசோதனைகளும் செய்யப்பட உள்ளன. மேலும், மருத்துவ குழுக்கள் மூலம் அவர்களுக்கு கொரோனா தொற்று இருக்கிறதா, காய்ச்சல் இருக்கிறதா என்பதும் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் என்ற அளவில் சமூக இடைவெளியுடன் உட்கார வைக்கப்படுவார்கள். மாணவர்கள் பள்ளிக்கு வருவது கட்டாயம் இல்லை என்பதால், பள்ளிக்கு வராத குழந்தைகளுக்கு அந்தந்த பகுதிகளில் பாடம் நடத்த ‘‘இல்லம் தேடி கல்வி திட்டம்’’ செயல்படுத்தப்பட உள்ளது.

இன்று பள்ளிக்கு வரும் மாணவ மாணவியருக்கு பாடங்கள் நடத்தப்படமாட்டாது. அதற்கு பதிலாக காலை நிகழ்ச்சிகள், நாடகங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தி உற்சாகப்படுத்தும் பணிகள் நடக்கும். இது தவிர, மன மகிழ்ச்சி செயல்பாடுகளுக்கான வழிகாட்டுதல்கள், புத்தாக்கப் பயிற்சி கட்டகங்கள், முதன்மைப்படுத்தப்பட்ட பாடத்திட்டங்கள், போன்றவை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளன. இவற்றைக் கொண்டு 15 நாட்களுக்கு கதை, பாடல் விளையாட்டு, ஓவியம் வரைதல், வண்ணம் தீட்டுதல், கலந்துரையாடல் போன்ற மனமகிழ்ச்சி செயல்பாடுகள் நடைமுறைப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அவர்களுக்கு புத்தாக்கப் பயிற்சியும் அளிக்கப்படும்.

இதற்கு பிறகு முதன்மைப்படுத்தப்பட்ட பாடத்திட்டம் நடத்தப்படும். தனியார் பள்ளிகளை பொறுத்தவரையில் 4726 பள்ளிகள் இன்று முழு வீச்சில் தொடங்க உள்ளன. தனியார் பள்ளிகளில் படிக்கின்ற குழந்தைகளுக்கு அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டு பள்ளிக்கல்வித்துறையில் உள்ள இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் தலைமையில் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவார்கள். பள்ளிக்கு வரும் மாணவ-மாணவியரை வரவேற்க வேண்டும் என்று அரசு அறிவித்து விட்டதால், அந்தந்த தொகுதியில் உள்ள பள்ளிகளுக்கு அந்தந்த பகுதியில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் இன்று காலை செல்கின்றனர்.

சென்னையில், வால்டாக்ஸ் சாலையில் உள்ள உயர்நிலைப் பள்ளிக்கு அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, லேடி வெலிங்டன் பள்ளிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு, சைதாப்பேட்டை பெண்கள் மேனிலைப் பள்ளிக்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், வில்லிவாக்கம் சென்னை தொடக்கப்பள்ளிக்கு எம்எல்ஏ வெற்றிஅழகன், எம்ஜிஆர் நகர் அரசு மேனிலைப் பள்ளிக்கு எம்எல்ஏ பிரபாகர் ராஜா, செல்கின்றனர். இது தவிர எம்எல்ஏ எழிலன் சென்னையில் உள்ள 10 பள்ளிகளுக்கு செல்கிறார். இது தவிர சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மார்ஸ் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள கல்வி அதிகாரிகள் குழுவில், 5 மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள், பள்ளி உதவி ஆய்வாளர்கள், ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த குழுவில் உள்ள கல்வி அதிகாரிகள் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க நடுநிலைப் பள்ளிகளுக்கும் நேரில் சென்று ஆய்வு செய்வார்கள்.

* தமிழகத்தில் இன்று 34 லட்சம் மாணவர்கள் பள்ளிக்கு வருவார்கள்.

* 15 நாட்களுக்கு கதை, பாடல் விளையாட்டு, ஓவியம் வரைதல், வண்ணம் தீட்டுதல் நடக்கும்.

* தமிழகத்தில் 4,726 தனியார் பள்ளிகள் உள்ளன.

* ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் என்ற அளவில் சமூக இடைவெளியுடன் உட்கார வைக்கப்படுவார்கள்.

* தனியார் பள்ளிகளை கண்காணிக்க முதன்மை கல்வி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews