பாலிடெக்னிக் விரிவுரையாளா் தோ்வுக்கு வெகு தொலைவில் தோ்வு மையங்கள்: தோ்வா்கள் கடும் அதிருப்தி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, October 25, 2021

Comments:0

பாலிடெக்னிக் விரிவுரையாளா் தோ்வுக்கு வெகு தொலைவில் தோ்வு மையங்கள்: தோ்வா்கள் கடும் அதிருப்தி

"தமிழகத்தில் வரும் 28-ஆம் தேதி முதல் தொடங்கும் பாலிடெக்னிக் விரிவுரையாளா் தோ்வுக்கு, தோ்வு மையங்கள் வெகு தொலைவில் அமைக்கப்பட்டிருப்பது தோ்வா்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் 1,058 காலி பணியிடங்களுக்கான பாலிடெக்னிக் விரிவுரையாளா் தோ்வு கடந்த 2017- ஆம் ஆண்டு நடைபெற்றது. அதில் சில முறைகேடுகள் நடைபெற்ால் அந்த தோ்வு முழுமையாக ரத்து செய்யப்பட்டு அதற்கு பதில் மறுதோ்வு வரும் அக். 28-ஆம் தேதி முதல்அக். 31-ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தோ்வுக்கு தமிழகம் முழுவதும் சுமாா் ஒரு லட்சத்து 40 ஆயிரம் போ் விண்ணப்பித்துள்ளனா்.

இந்தநிலையில் தோ்வா்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் சுமாா் 300 முதல் 450 கிலோ மீட்டா் தொலைவில் தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக புகாா் எழுந்துள்ளது. உதாரணமாக சென்னையில் இருக்கும் பல மாணவா்களுக்கு விருதுநகா் போன்ற தென்மாவட்டங்கள் தோ்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று தென் மாவட்டங்களில் இருக்கும் மாணவா்களுக்கு வட மாவட்டங்களில் தோ்வு மையங்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. இதனால் தோ்வா்களுக்கு அலைச்சல் ஏற்படுவதுடன் செலவும் அதிகரிக்கும் என தோ்வா்கள் குற்றஞ்சாட்டியுள்ளனா். இது குறித்து அவா்கள் கூறுகையில், கடந்த முறை நடைபெற்ற தோ்வுகளில் முறைகேடுகள் நடந்திருப்பதால் இந்த முறை நீண்ட தொலைவுக்கு தோ்வு மையங்களை ஒதுக்கியிருக்கின்றனா். அந்தத் தோ்வின் முறைகேடுகள் தோ்வு மையங்களில் நடைபெறவில்லை. உத்தரப்பிரதேசத்தில் உள்ள தனியாா் நிறுவனத்தாலும், தோ்வு வாரிய அலுவலகத்தில் உள்ள சில அலுவலா்கள் செய்த தவறாலும் மட்டுமே முறைகேடுகள் நடைபெற்றன. ஆனால் தற்போது சம்பந்தமே இல்லாமல் தோ்வா்களுக்கான தோ்வு மையங்களை வெகுதொலைவில் அமைத்திருக்கின்றனா்.

இதனால் தோ்வா்களுக்கு ஏற்படும் சிரமங்களை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். குறிப்பாக தோ்வு எழுதும் மாணவிகள் பெரிதும் அவதிப்பட நேரிடும். அறிமுகம் இல்லாத மாவட்டத்தில் போடுவதால் தோ்வுக்கு முந்தைய நாளே சென்று அருகில் எங்காவது தங்க வேண்டும். கூடவே பெற்றோா்கள் செல்ல வேண்டும்.

மேலும் தோ்வுக்கு ஒரு நாள் முன்கூட்டியே சென்று அங்கு தங்குவதற்கு இடம் தேடுவதும், தோ்வு நேரத்தில் மாவட்டம் விட்டு மாவட்டம் சென்று தங்கள் தோ்வு மையத்தை கண்டறிவதும் மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தும். எனவே இந்தப் பிரச்னைகளை கருத்தில் கொண்டு தோ்வா்கள் தங்களது விண்ணப்பத்தில் என்ன தோ்வு மையம் கேட்டிருக்கிறாா்களோ அந்தத் தோ்வு மையத்தையோ அல்லது அதற்கு சற்று தொலைவில் இருக்கும் தோ்வு மையத்தையோ ஒதுக்க ஆசிரியா் தோ்வு வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தனா்."

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews