8-ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான பொதுத்தேர்வுக்கு அக்டோபர் 11 முதல் விண்ணப்பிப்பது எப்படி? தேர்வுத்துறை விளக்கம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, October 06, 2021

Comments:0

8-ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான பொதுத்தேர்வுக்கு அக்டோபர் 11 முதல் விண்ணப்பிப்பது எப்படி? தேர்வுத்துறை விளக்கம்!

தனித்தேர்வர்கள் 8-ம் வகுப்புப் பொதுத்தேர்வுக்கு அக்.11 முதல் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிப்பது எப்படி என்ற வழிகாட்டுதல்களை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

1. ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை வரவேற்றல்

நவம்பர் 2021இல் நடைபெறவுள்ள தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்விற்கு 01.10.2021 அன்று 12 1/2 வயது பூர்த்தி அடைந்த தனித்தேர்வர்கள் 11.10.2021 முதல் 18.10.2021 வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.45 வரை (14.10.2021 முதல் 17.10.2021 வரையிலான விடுமுறை நாட்கள் நீங்கலாக) http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள சேவை மையங்களுக்கு நேரில் சென்று ஆன்லைன் மூலம் பதிவு செய்துகொள்ளலாம். மேற்குறிப்பிட்ட நாட்களில் விண்ணப்பிக்கத் தவறியவர்கள் 20.10.2021 அன்று தட்கல் திட்டத்தில் ரூ.500/- கூடுதலாகச் செலுத்தி விண்ணப்பிக்கலாம்.

2. தேர்வுக் கட்டண விவரம்

விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணம் ரூ.125/- மற்றும் ஆன்லைன் பதிவுக் கட்டணம் ரூ.50/-மொத்தம் ரூ.175/-ஐ பணமாக சேவை மையங்களில் நேரடியாகச் செலுத்தலாம். தட்கலில் விண்ணப்பித்த தேர்வர்கள், தட்கல் விண்ணப்பக் கட்டணத் தொகை ரூ.675/- செலுத்தவேண்டும். (125 + 50 + 500 )

3. விண்ணப்பத்துடன் இணைக்கப்படவேண்டியவை

முதன்முறையாகத் தேர்வெழுத விண்ணப்பிப்பவர்கள்

(அ) விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் விண்ணப்பத்துடன் சான்றிடப்பட்ட தங்களது பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகல் / பதிவுத்தாள் நகல் / பிறப்புச் சான்றிதழ் நகல் இவற்றில் ஏதேனும் ஒன்றை மட்டுமே இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். ஏற்கெனவே எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வெழுதி தோல்வியடைந்த பாடத்தைத் தேர்வெழுத விண்ணப்பிப்பவர்கள்

ஏற்கெனவே தேர்வெழுதிப் பெற்ற மதிப்பெண் சான்றிதழின் / சான்றிதழ்களின் நகல்களைக் கண்டிப்பாக இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

தனித்தேர்வர்கள் ரூ.42-க்கான அஞ்சல் வில்லை ஒட்டப்பட்ட, பின்கோடுடன் கூடிய சுய முகவரியிட்ட உறை ஒன்று விண்ணப்பத்துடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

4. ஆன்லைன் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். தபால் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

5. இத்தேர்விற்கான விரிவான தகவல்களை http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் காணலாம்.

இவ்வாறு அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews