கோ - வின்இணையதளத்தில் புதிய வசதி அறிமுகம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, September 11, 2021

Comments:0

கோ - வின்இணையதளத்தில் புதிய வசதி அறிமுகம்

ஒருவர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளாரா, இல்லையா என்ற தகவலை மட்டும் அறிந்து கொள்ளும் விதமாக, கே.ஒய்.சி.வி.எஸ்., எனப்படும் உங்கள் வாடிக்கையாளரின் தடுப்பூசி நிலை அறியும் வசதி, 'கோ - வின்'இணையதளத்தில் இணைக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி போடும் பணி ஜனவரியில் துவங்கியது. தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களின் தகவல்களை பதிவு செய்து வைக்க, 'கோ - வின்' இணையதளம் உருவாக்கப்பட்டது. ஒருவர் 'கோ - வின்' வாயிலாக பதிவு செய்துவிட்டு தடுப்பூசி போட்டுக் கொண்டாலும் சரி, பதிவு செய்யாமல் போட்டுக் கொண்டாலும் சரி, அவரது பெயர் உள்ளிட்ட அனைத்து விபரங்களும் 'கோ - வின்' தளத்தில் பதிவாகி விடும்.


72 கோடி டோஸ் தடுப்பூசி

தற்போது நாடு முழுதும் 72 கோடிக்கும் அதிகமான டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். இந்நிலையில் தடுப்பூசி நிலை அறியும் ஒரு புதிய வசதி, கோ - வின் இணையதளத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை:ஒருவர் தடுப்பூசி போட்டுக் கொண்டாரா, இல்லையா என்பதை அறிய, 'டிஜிட்டல்' முறையிலான சான்றிதழ் அளிக்கப்படுகிறது. இது, கோ - வின் இணையதளத்தில் கிடைக்கிறது.


இதை தரவிறக்கம் செய்து, காகித வடிவிலும் ஒருவர் பாதுகாத்துக் கொள்ள முடியும். ஷாப்பிங் மால்கள், அலுவலகங்கள், பொது நிகழ்ச்சிகளில் சான்றிதழ் கேட்கும் இடங்களில் டிஜிட்டல் அல்லது காகித வடிவ சான்றை அளிக்கும் நடைமுறை தற்போது உள்ளது.அதே நேரம் ஒருவருடைய தடுப்பூசி சான்றிதழை முழுமையாக பார்க்க விரும்பாமல், அவர் தடுப்பூசி செலுத்திக் கொண்டாரா, இல்லையா என்ற தகவலை மட்டும் அறிய சில நிறுவனங்கள் விரும்புகின்றன.

உதாரணத்திற்கு ஒருவர் பணியாற்றும் நிறுவனத்திலோ, ரயில் அல்லது விமான பயண சீட்டு முன்பதிவின் போதோ, விமான நிலையத்திற்குள் நுழையும்போதோ, ஒருவரின் தடுப்பூசி சான்றிதழை முழுமையாக பார்க்காமல், அவரது தடுப்பூசி நிலை என்ன என்பதை மட்டும் அறிய, சம்பந்தப்பட்டவர்கள் விரும்பலாம்.

அல்லது ஓட்டல்கள், விடுதிகளில் அறைகள் முன்பதிவு செய்யும்போது, விருந்தினரின் தடுப்பூசி நிலையை ஓட்டல் நிர்வாகம் அறிய முயற்சிக்கலாம். இதுபோன்ற நேரங்களில் அவர்களுக்கு அந்த குறிப்பிட்ட தகவலை மட்டும் அளிக்கும் வசதி, கோ - வின் இணையதளத்தில் நடைமுறைக்கு வந்துள்ளது.இது, கே.ஒய்.சி.வி.எஸ்., எனப்படும் உங்கள் வாடிக்கையாளரின் தடுப்பூசி நிலையை அறியும் வசதி என அழைக்கப்படுகிறது.வங்கி, 'மொபைல் போன்' சேவை நிறுவனங்கள், தங்கள் வாடிக்கையாளர்களின் தகவல் மாற்றங்களை அவ்வப்போது அறிந்து கொள்ள, கே.ஒய்.சி., எனப்படும் உங்கள் வாடிக்கையாளரை அறியும் வசதியை பயன்படுத்துகின்றன. அதைப் போன்றது தான் இந்த சேவையும். மொபைல் போன் எண் இந்த வசதியை பயன்படுத்தும் இடங்களில் கோ - வின் இணையதளம் அல்லது மொபைல் செயலிக்குள் சென்று, பெயர் மற்றும் மொபைல் போன் எண்ணை பதிவிட வேண்டும். அதை பதிவு செய்தவுடன், உங்கள் எண்ணிற்கு, ஒ.டி.பி., எனப்படும் ஒருமுறை பயன்படுத்தக் கூடிய கடவு சொல் ஒன்று வரும். அதை பதிவு செய்ததும் உங்கள் தடுப்பூசி நிலையை கோ - வின் இணையதளம், சம்பந்தப்பட்டவருக்கு தெரிவித்துவிடும்.இந்த நபர் தடுப்பூசி போடவில்லை; ஒரு டோஸ் மட்டும் போட்டுக் கொண்டவர்; முழுவதுமாக போட்டுக் கொண்டவர் என்று மூன்று விதமாக மட்டுமே தகவல் பரிமாறப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


பிரதமர் தலைமையில்உயர்நிலை குழு கூட்டம்!

நாடு முழுதும் கடந்த 24 மணி நேரத்தில் 67 லட்சத்து 58 ஆயிரத்து 491 டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதுவரை, 72.37 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கொரோனா மூன்றாவது அலை குறித்த அச்சம் பரவலாக காணப்படுவதை அடுத்து, தடுப்பூசி பணிகளை மத்திய அரசு விரைவுபடுத்தி உள்ளது.

இந்நிலையில், டில்லியில் உள்ள பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்தில் உயர்நிலைக்குழு கூட்டம் நேற்று நடந்தது. இதில், மத்திய அமைச்சர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், நாட்டின் கொரோனா நிலவரம் மற்றும் தடுப்பூசி போடும் பணி குறித்து பிரதமர் விரிவாக விவாதித்ததாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews