வீடு தேடி சென்று மாணவர்களுக்கு பாடம் நடத்தும் தொடக்கப் பள்ளி ஆசிரியைகள்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, August 05, 2021

Comments:0

வீடு தேடி சென்று மாணவர்களுக்கு பாடம் நடத்தும் தொடக்கப் பள்ளி ஆசிரியைகள்!

கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் பொதுமுடக்கத்தால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில் மாணவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று பாடங்களை நடத்தி அசத்தி வருகின்றனர்.

கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திரிபுரசுந்தரி கடந்த 2007ஆம் ஆண்டு முதல் இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வரும் நிலையில், இந்த பள்ளியை தனியார் பள்ளிக்கு நிகராக அவர் தரத்தினை உயர்த்தியுள்ளார்.

இந்நிலையில் இந்த பள்ளியில் தற்போது எல்கேஜி முதல் 5 ஆம் வகுப்பு வரை 339 மாணவர்கள் படித்து வருகின்றனர். பொதுமுடக்க காலத்திலும் இந்த கல்வியாண்டில் இந்த பள்ளியில் தற்போது எல்கேஜி முதல் ஒன்றாம் வகுப்பு வரை 186 மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளனர்.

இந்நிலையில், கரோனா பொது முடக்க காலத்தில் பள்ளி திறக்கப்படாத நிலையில் தற்போது கடந்த 2 ஆம் தேதி முதல் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகின்றனர். பள்ளியின் தலைமை ஆசிரியர் திரிபுரசுந்தரி, சென்னையில் வசிக்கும் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் 3 பேரை தினமும் சென்னையில் இருந்து பள்ளிக்கு அழைத்து வந்து பின் அவர்களது வீட்டிற்கு அழைத்து செல்கிறார். இந்நிலையில் கடந்த 1 வருட காலமாக இந்த பள்ளியில் படிக்கும் 1-5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செல்போனில் தினமும் இணைய வழி பாடம் எடுப்பது வீட்டுப்பாடங்கள் நடத்துவது நடைபெற்று வருகிறது.

இந்த சூழலில் கடந்த இரு வருடங்களாக கரோனா தொற்றால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு தலைமை ஆசிரியர் திரிபுரசுந்தரி மாணர்களின் வீடுகளுக்கே சென்று பாடம் நடத்த முடிவு செய்தார். தொடர்ந்து வட்டார கல்வி அலுவலர்கள் பூவராகவமூர்த்தி, முனிராஜசேகர் ஆலோசனையில் பேரில், கீழ்முதலம்பேடு ஊராட்சி தலைவர் கே.ஜி.நமச்சிவாயம், ஒன்றிய கவுன்சிலர் இந்திரா திருமலை, பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் ஒத்துழைப்போடு கடந்த சில நாட்களாக தலைமை ஆசிரியர் திரிபுரசுந்தரி,பள்ளி ஆசிரியர்கள் குணஷீலா, தீபா, கோட்டீஸ்வரி, ரேவதி, ஜெகருன்னீஷா ஆகியோர் மாணவர்களின் வீடுகளுக்கு சென்று மாணவர்களுக்கு பாடங்கள் நடத்த தொடங்கினர். அதன்படி, தலைமை ஆசிரியர் திரிபுரசுந்தரி தலைமையில் ஆசிரியர்கள் கவரப்பேட்டையில் உத்திரக்குளம், பழவேற்காடு சாலை, தெலுங்கு காலனி, சத்தியவேடு சாலை, ராஜா தெரு, தியாகராஜா தெரு ஆகிய பகுதிகளில் ஒவ்வொரு நாளும் ஒரு பகுதிக்கு சென்று காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரை பாடம் எடுத்து வருகின்றனர். நிகழ்வின் போது மாணவர்களுக்கு பள்ளி சார்பில் முகக்கவசம், கிருமிநாசினி வழங்கப்படுவதோடு சமூக இடைவெளியோடு பாடங்கள் நடத்தப்படுகிறது.

கவரப்பேட்டை அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியர்களின் இந்த பணியை வெகுவாக பாராட்டி வருகின்றனர் கவரப்பேட்டை மக்கள்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews