பாடப்புத்தகத்தில் ஜாதி பெயர் நீக்கம்: தி.மு.க., ஆட்சியில் நடந்ததாக சொல்வதா? ஆசிரியர் சங்கம் வருத்தம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, August 07, 2021

Comments:0

பாடப்புத்தகத்தில் ஜாதி பெயர் நீக்கம்: தி.மு.க., ஆட்சியில் நடந்ததாக சொல்வதா? ஆசிரியர் சங்கம் வருத்தம்!

பாடப் புத்தகத்தில், தமிழ் அறிஞர்களின் பெயரில் இருந்த ஜாதி பெயர்களை, அ.தி.மு.க., ஆட்சியில் நீக்கி விட்ட நிலையில், தி.மு.க., ஆட்சியில் எடுத்த நடவடிக்கை போல தகவல்கள் கசிய விடப்பட்டுள்ளன. தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், பள்ளி பாடப் புத்தகங்களில் உள்ள, தமிழ் அறிஞர்களின் ஜாதி பெயர்களை நீக்கி, சமூக சீர்திருத்தம் செய்துள்ளதாக, செய்திகள் வெளியாகி உள்ளன. ஜாதி, மதம் கடந்த நல்லிணக்கத்துக்கு அடையாளமாக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக, தி.மு.க., ஆதரவாளர்கள் பலர், சமூக வலைதளங்களில் தகவல் பரப்புகின்றனர்.

அ.தி.மு.க.,வின் சீர்திருத்தம்

இதன் உண்மை நிலையோ வேறு என, பள்ளி கல்வி அதிகாரிகளும், ஆசிரியர்களும் கூறுகின்றனர். தற்போதைய தி.மு.க., அரசில், முதல்வர் ஸ்டாலினின் முதன்மை செயலராக உள்ள உதயசந்திரன், அ.தி.மு.க., ஆட்சியில் பள்ளி கல்வித்துறை முதன்மை செயலராக இருந்தார். அப்போது, பள்ளி கல்வி முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவின்படி, மறைந்த அண்ணா பல்கலை துணை வேந்தர் அனந்தகிருஷ்ணன் தலைமையில், பாடத்திட்ட மாற்றத்துக்கான கமிட்டி அமைக்கப்பட்டது.

முதன்மை செயலராகவும், பாடத்திட்ட செயலராகவும் பணியாற்றிய உதயசந்திரனின் நேரடி பார்வையில், பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டது. மத்திய அரசின், சி.பி.எஸ்.இ., பாடங்களை மிஞ்சும் வகையில், தமிழகத்தின் புதிய பாடத்திட்டம், 2018ல் மாற்றப்பட்டு, 19ல் அமலுக்கு வந்தது.அப்போது, உதயசந்திரன் மற்றும் அனந்தகிருஷ்ணன் ஆகியோரின், நேரடி சீர்திருத்த நடவடிக்கையாக, புத்தகங்களில் இருந்த தமிழ் அறிஞர்களின் பெயர்களில், ஜாதி பெயர்கள் நீக்கப்பட்டன.

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை, ராமலிங்கமாகவும்; உ.வே.சாமிநாத அய்யர், உ.வே.சாமிநாதன் மற்றும் உ.வே.சா.,வாகவும்; மாயவரம் வேதநாயகம் பிள்ளை, வேதநாயகமாகவும் மாற்றப்பட்டு, புத்தகங்கள் அச்சிடப்பட்டு வெளியாகின. மேலும், கி.மு., என்ற கிறிஸ்து பிறப்புக்கு முன் மற்றும் கி.பி., கிறிஸ்து பிறப்புக்கு பின் என்ற ஆண்டு பெயர் குறிப்பும், பொது ஆண்டுக்கு முன், பொது ஆண்டுக்கு பின் என்று, பாடத்திட்டத்தில் மாற்றப்பட்டது. அதிகாரம் இல்லா கழகம்

இந்த சமூக சீர்திருத்தத்தை, தி.மு.க., ஆட்சியில் செய்ததாக, உண்மைக்கு மாறான தகவல்கள் பரவுவதாக, ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதிலும், இந்த மாற்றத்தை, பாடநுால் கழகம் செய்துள்ளதாக தகவல் பரப்புகின்றனர். பாடநுால் கழகம் என்பது, புத்தகத்தை அச்சிட்டு கொடுக்கும் அச்சு நிறுவனம் மட்டுமே; அந்த நிறுவனத்துக்கு, பாடப்புத்தகம் அல்லது வேறு வெளியீட்டு புத்தகங்களில் உள்ள பாட சாராம்சங்களில் ஒரு எழுத்தை கூட மாற்ற, அதிகாரம் கிடையாது; அந்த நிறுவனம், அப்பணியை செய்வதுமில்லை என்பது தான் உண்மை.
அதேபோல், நடப்பு கல்வி ஆண்டுக்கான பாடப் புத்தகங்கள் அனைத்தையும் அச்சிடும் பணிகள், அ.தி.மு.க., ஆட்சி நடக்கும் போதே துவங்கி விட்டன. தேர்தல் முடிந்த போது, பாடப்புத்தகங்கள் அச்சிடும் பணியும் பெரும்பாலும் முடிந்து விட்டது. இந்நிலையில், தி.மு.க., அரசு பதவியேற்ற பின், நடப்பு கல்வி ஆண்டுக்கான, முதல் பருவம் மற்றும் மேல்நிலை வகுப்புகளுக்கான, முதல் பாக புத்தகங்களில், எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்பதே உண்மை என, ஆசிரியர்களும், பள்ளி கல்வி அலுவலர்களும் தெரிவித்துள்ளனர். ஆசிரியர் சங்கம் வருத்தம்!
தமிழ்நாடு ஆசிரியர் சங்கத் தலைவர் இளமாறன் அறிக்கை:பதினான்கு ஆண்டுகள் மாற்றப்படாத பாடத்திட்டம், அ.தி.மு.க., ஆட்சியின் போது மாற்றப்பட்டு, 2019ல் அமல்படுத்தப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முந்தைய பாடத்திட்டம் அடிப்படையில், அச்சிடப்பட்ட பாடப் புத்தகங்களே, தற்போதும் நடைமுறையில் உள்ளன.அப்போதே, தமிழ் அறிஞர்களின் ஜாதி பெயர்கள் நீக்கப்பட்டன. பாடத்திட்டத்தில் தற்போது, எந்த மாற்றமும் கொண்டு வரவில்லை. ஆனால், தி.மு.க., அரசு மாற்றம் செய்தது போல், சமூக வலைதளங்களில் குறிப்பிடுவது வருத்தத்துக்குரியது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

குழப்பமில்லா பாடம்!

பாடநுால் கழக தலைவர் லியோனி அளித்த பேட்டி:ஜாதி பெயர் நீக்கமானது, 2019ல், அ.தி.மு.க., ஆட்சியில் எடுத்த முடிவாகும். மீண்டும், ஜாதி பெயர்கள் சேர்க்கப்படுமா என்பதை, முதல்வர் தலைமையில் ஆலோசித்து முடிவு செய்யப்படும். வருங்காலத்தில் குழப்பமில்லாத பாடத்திட்டத்தை அமைக்க, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்துக்கு பரிந்துரைக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews