ஒரே நேரத்தில் பல கல்லூரிகளில் பயிலும் புதிய நடைமுறை - பல்கலை.களில் ஒரே பாடத் திட்டம் - UGC உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, August 07, 2021

Comments:0

ஒரே நேரத்தில் பல கல்லூரிகளில் பயிலும் புதிய நடைமுறை - பல்கலை.களில் ஒரே பாடத் திட்டம் - UGC உத்தரவு

கடந்த ஆண்டு மத்திய அரசால் ‘தேசிய கல்விக் கொள்கை 2020’அமல்படுத்தப்பட்டது. கரோனாபரவல் சூழலால் கல்விக் கொள்கையின் அம்சங்கள் படிப்படியாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, உயர்கல்வி மாணவர் சேர்க்கை விகிதத்தை 2035-ம்ஆண்டுக்குள் 50 சதவீதமாக (26.5)உயர்த்த பல்வேறு புதிய செயல்பாடுகள் கல்விக் கொள்கையில் முன்மொழியப்பட்டுள்ளன. அதன்படி, ஒரே நேரத்தில் பல்வேறு கல்லூரிகளில் படிக்கும் திட்டத்தை நடப்பு கல்வியாண்டு முதல்அமல்படுத்துவதற்கான வழிமுறைகளை பல்கலைக்கழக மானியக் குழு(யுஜிசி) வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து யுஜிசி உயர் அதிகாரிகள் கூறியதாவது: நாட்டில் 1,004 பல்கலைக்கழகங்கள் மற்றும்39,931 கல்லூரிகள் செயல்படுகின்றன. இவற்றில் ஆண்டுக்கு சராசரியாக 3.8 கோடி மாணவர்கள் பல்வேறு உயர்கல்வி படிப்புகளில் சேர்ந்து வருகின்றனர்.

தற்போது மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதுடன், இடைநிற்றல் விகிதத்தை குறைக்கும் நோக்கில், ஒரே நேரத்தில் பல்வேறு கல்லூரிகளில் படிக்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக தரமதிப்பீட்டுக் கல்விவங்கி (ABC-academic bank ofcredits) என்ற திட்டம் நடைமுறையில் உள்ளது.

அதன்படி, ஏபிசி வங்கியில் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு தனி கணக்குகள் தொடங்கி,பருவத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் உட்பட கல்வி விவரங்கள் அனைத்தும் சேகரிக்கப்படும். இதுதவிர, என்எஸ்எஸ், விளையாட்டு, பிறமொழிக் கற்றல் உட்பட இதர தனித்திறன் வடிவங்கள் மற்றும் சான்றிதழ் படிப்புகள் ஆகியவற்றில் மாணவர்கள் பெறும் மதிப்பீடுகளும் வங்கியில் பதிவு செய்யப்படும்.

இதன்மூலம் ஒரு மாணவர் ஒரே நேரத்தில் தங்களுக்குப் பிடித்தமான பாடங்களை வெவ்வேறு கல்லூரிகளில் படித்து, சான்றிதழ் பெறமுடியும். உதாரணமாக, சென்னை பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி. இயற்பியல் படிக்கும் மாணவர்கள், குறிப்பிட்ட சில பாடங்களை தாங்கள் விரும்பிய வேறொரு கல்லூரியில் பயிலலாம். அதற்குரிய வருகைப் பதிவு, தேர்ச்சி விவரங்கள் ஏபிசி வங்கியில் பதிவு செய்யப்பட்டு, பிரத்யேக சான்றிதழ் வழங்கப்படும்.

ஏபிசி வங்கியில் கற்றல் மதிப்பீடுகள் தொடர்ந்து பதிவு செய்யப்படுவதால், மாணவர்கள் பட்டப் படிப்புகளில் இருந்து எப்போது வேண்டுமானாலும் வெளியேறலாம். மேலும், ஓரிரு ஆண்டுகள் இடைவெளிவிட்டு மீண்டும் படிப்பைத் தொடரலாம். முதலாம் ஆண்டில் வெளியேறுபவருக்கு அடிப்படை சான்றிதழும், 2-ம் ஆண்டு டிப்ளமோ, 3-ம் ஆண்டு பட்டப் படிப்பு சான்றிதழ்களும் வழங்கப்படும். மேலும், ஒரு கல்வி நிறுவனத்தில் முதல் அல்லது 2-ம் ஆண்டு பயில்பவர்கள் அதிலிருந்து விலகி, வேறொரு கல்லூரியில் அடுத்தநிலை படிப்பைத் தொடரலாம். அதேபோல, இடைநின்ற மாணவர்களும் மீண்டும் விரும்பிய கல்லூரிகளில் சென்று படிக்க முடியும். மேலும், தங்களுக்கு விருப்பமான வேலைவாய்ப்பு, தொழில்சார்ந்த பாடங்களையும் மாணவர்களே தேர்வு செய்யலாம். இந்த நடைமுறை இளநிலை, முதுநிலை ஆகிய 2 பட்டப் படிப்புகளுக்கு பொருந்தும்.

அதனுடன் மாணவர்கள் ஸ்வயம்உட்பட கல்வித் தளங்கள் வழியாகபல்வேறு இணைய படிப்புகளை படித்து, திறன்களை வளர்த்துக்கொள்ள முடியும். இந்த திட்டத்தில் பல்வேறு தளர்வுகள் இருப்பதால், மாணவர்கள் தங்கள் எதிர்காலத் திட்டங்களை சிறந்த முறையில் வடிவமைத்துக் கொள்ளலாம். அதேநேரம், ஒரே பாடத் திட்ட கல்வி முறை இருந்தால் மட்டுமே,இந்த திட்டம் முழுமை பெறக்கூடும்.

எனவே, அனைத்து பல்கலை.களிலும் ஒரே விதமான பாடத் திட்டங்களை பின்பற்றுவது குறித்தும் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர். பாடத் திட்டம் மாற்றம்

இதற்கிடையே தமிழகத்தில் அனைத்து பல்கலை.களிலும் ஒரேபாடத் திட்டத்தை அமல்படுத்த உயர்கல்வித் துறை திட்டமிட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இது தொடர்பாக தமிழக உயர்கல்வி மன்ற அதிகாரிகள் சிலர் கூறும்போது, ‘‘தமிழகத்தில் பல்கலைக்கழகங்கள், தன்னாட்சிக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைக் கல்வி நிறுவனங்கள் இடையேயான பாடத் திட்டங்களில் இருக்கும் வேறுபாடுகளைக் களைய வேண்டும் என்று யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.

நமது மாநில பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான பாடத் திட்டங்களில் 60 சதவீதம் வரை வேறுபாடுகள் உள்ளன. யுஜிசி அறிவுறுத்தலின்படி அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் ஒருங்கிணைந்த பாடத் திட்டத்தை கொண்டு வருவதற்கான பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, அனைத்து இளநிலை பட்டப் படிப்புகளுக்கும் ஆங்கில மொழித் தொடர்பு என்ற ஒரே பாடம் கடந்த செப்டம்பரில் அறிமுகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, பல்கலை.களின் கருத்துகளைப் பெற்று, இதர படிப்புகளுக்கான பாடத் திட்டத்தை மாற்றும் பணிகளும் நடைபெற்று வருகின்றன’’ என்றனர்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews