தமிழக அரசுப்பள்ளி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – விண்ணப்ப பதிவு எப்போது? 4 மாதங்களாக தேர்வர்கள் ஏமாற்றம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, June 28, 2021

Comments:0

தமிழக அரசுப்பள்ளி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – விண்ணப்ப பதிவு எப்போது? 4 மாதங்களாக தேர்வர்கள் ஏமாற்றம்!

முதுகலை பட்டதாரி ஆசிரியர், சிறப்பாசிரியர் தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டு 4 மாதங்கள் ஆகியும், ஆன்லைன் விண்ணப்ப பதிவை ஆசிரியர் தேர்வு வாரியம் தொடங்காததால் தேர்வர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,098 முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-1), கணினி ஆசிரியர் (கிரேடு-1) பணியிடங்களை போட்டித் தேர்வு மூலம் நேரடியாக நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த பிப்ரவரி 11-ம் தேதி வெளியிட்டது. இதற்கான இணையவழி போட்டித் தேர்வு ஜூன் 26, 27-ம் தேதிகளில் நடத்தப்படும் என்றும், ஆன்லைன் விண்ணப்ப பதிவு மார்ச் 1 முதல் ஏப்ரல் 25-ம் தேதி வரை நடைபெறும் என்றும் அறிவித்தது. இதைத் தொடர்ந்து, பி.எட். முடித்த முதுகலை பட்டதாரிகள் மார்ச் 1-ம் தேதி ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தை பார்வையிட்டபோது, தொழில்நுட்பக் காரணங்களால் ஆன்லைன் பதிவு தள்ளிவைக்கப்பட்டிருப்பதாக அதில் அறிவிப்பு இடம்பெற்றிருந்தது. இதனால், அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதேபோல, 1,598 சிறப்பாசிரியர் பணியிடங்களை (தையல், ஓவியம்,இசை, உடற்கல்வி) நேரடியாக நிரப்புவதற்கான அறிவிப்பு பிப்ரவரி 26-ம் தேதி வெளியிடப்பட்டது. அதில், ‘எழுத்து தேர்வு ஆகஸ்ட் 27-ம் தேதி நடத்தப்படும். அதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவுமார்ச் 31 முதல் ஏப்ரல் 25 வரைநடைபெறும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், எந்த காரணமும் தெரிவிக்கப்படாமல், ஆன்லைன் விண்ணப்ப பதிவு தள்ளிவைக்கப்பட்டிருப்பதாக மார்ச் 31-ம்தேதி அறிவிப்பை வெளியிட்டது. இதனால் சிறப்பாசிரியர் தேர்வர்கள் ஏமாற்றத்துக்கு ஆளாகினர். அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்காலி பணியிடங்களை நிரப்புவதற்கான பட்டியலை பாடவாரியாக பள்ளிக்கல்வித் துறையும், இதர துறைகளும் ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் கொடுத்து பல மாதங்கள் ஆகின்றன. ஆனாலும், தேர்வு நடத்துவதற்கான பணிகளை மேற்கொள்ளாமல் வாரியம் தாமதம் செய்வது தேர்வர்கள் மனதில் ஏமாற்றத்தையும், மனச்சோர்வையும் ஏற்படுத்தியுள்ளது. இனியும் தாமதம் செய்யாமல் உடனடியாக ஆன்லைன் விண்ணப்ப பதிவை தொடங்க வேண்டும் என்று தேர்வர்கள் எதிர்பார்க்கின்றனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews