கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 5 லட்சம் நிதி உதவி: பட்டப்படிப்பு வரை இலவச கல்வி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, May 30, 2021

Comments:0

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 5 லட்சம் நிதி உதவி: பட்டப்படிப்பு வரை இலவச கல்வி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டு பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகளின் பெயரில் தலா ரூ.5 லட்சம் டெபாசிட் செய்யப்படும். அக்குழந்தைகளின் பட்டப்படிப்பு வரையாகும் கல்வி செலவு மற்றும் விடுதி கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் அரசே ஏற்றுக்கொள்ளும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா என்ற கொடிய நோய் ஏழை, பணக்காரர், சிறியவர், பெரியவர் என்ற பாகுபாடு இல்லாமல் தாக்கி வருகிறது. பலர் உயிரிழந்து வருகின்றனர். இந்த நோயில் இருந்து பொதுமக்களை காப்பாற்ற, அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால் நோய் தொற்று குறைந்து வருகிறது. ஆனாலும், கொரோனா நோய்க்கு ஒரு வீட்டில் கணவன், மனைவி இருவரும் உயிரிழந்து வருகின்றனர். இதனால் குழந்தைகள் அனாதையாகிவிடுகின்றனர். மேலும், நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டு பெற்றோர்களை இழந்து, ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளின் நலன்களை பாதுகாத்திட, அரசு சார்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைமை செயலகத்தில் உயர் அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றினால் உயிரிழந்த பெற்றோர்களின் குழந்தைகளை கண்டறிந்து, அவர்களுக்கு தேவைப்படும் உதவிகளை வழங்கிட ஏதுவாக, மாவட்ட அளவில், மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் சிறப்பு பணிப் பிரிவு அரசால் ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், மேற்படி ஆதரவற்ற குழந்தைகளை பாதுகாக்கும் வகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் கீழ்க்காணும் நிவாரண உதவிகளை வழங்கிட அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்படி, * கொரோனா நோய் தொற்றினால் பெற்றோர்களை இழந்து, ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளுக்கு, அவர்களது பெயரில் தலா ₹5 லட்சம் வைப்பீடு (டெபாசிட்) செய்யவும், அந்த குழந்தை 18 வயது நிறைவடையும்போது, அந்த தொகை குழந்தைக்கு வட்டியோடு வழங்கப்படும்.
* பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு அரசு இல்லங்கள் மற்றும் விடுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் தங்குவதற்கு இடம் வழங்கப்படும்.

* இந்த குழந்தைகளுக்கு பட்டப்படிப்பு
வரையிலான கல்வி கட்டணம் மற்றும் விடுதி கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலவினங்களையும் அரசே ஏற்கும்.
* கொரோனா நோய் தொற்றினால் தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளோடு இருக்கும் தந்தை அல்லது தாய்க்கு உடனடி நிவாரண தொகையாக 3 லட்சம் வழங்கப்படும்.
* அரசு காப்பகம் அல்லது விடுதிகளில் இல்லாது, உறவினர், பாதுகாவலரின் ஆதரவில் வளரும் குழந்தைகளின் பராமரிப்பு செலவாக, மாதந்தோறும் தலா 3 ஆயிரம் உதவித்தொகை, அவர்கள் 18 வயது நிறைவடையும் வரையில் வழங்கப்படும். * ஏற்கெனவே தாய் அல்லது தந்தையை இழந்து, தற்போது கொரோனா நோய் தொற்றினால் மற்றொரு பெற்றோரையும் இழந்த குழந்தைகளுக்கும் 5 லட்சம் அவர்களது பெயரில் வைப்பீடு செய்யப்படும்.
* ஒவ்வொரு குழந்தைக்கும் வழங்கப்படும் உதவித்தொகை, அவர்களது கல்வி மற்றும் வளர்ச்சியும், ஒரு சிறப்பு குழுவால் மாவட்டந்தோறும் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படும்.
* அனைத்து அரசு நலத் திட்டங்களும் முன்னுரிமை அடிப்படையில் இக்குழந்தைகளுக்கும், நோய் தொற்றினால் கணவன் அல்லது மனைவியை இழந்து, குழந்தையுடன் இருக்கும் பெற்றோருக்கும் வழங்கப்படும். * மேற்படி நிவாரண உதவிகள் ஒவ்வொரு குழந்தைக்கும் ஏற்றவாறு வழங்குவது குறித்த வழிகாட்டி நெறிமுறைகள் வகுத்து வெளியிட, நிதித்துறை செயலாளர் தலைமையில் வழிகாட்டுதல் குழு ஒன்று சமூக நலத்துறை செயலாளர் உள்ளிட்ட அலுவலர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அமைப்புகளை சார்ந்தவர்களை கொண்டு அமைக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழக முதல்வரின் இந்த அதிரடி அறிவிப்புக்கு பாமக நிறுவனர் ராமதாஸ், நடிகர் கமல் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களும், கூட்டணிக் கட்சியின் தலைவர்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews