அஞ்சல் வாக்கு செலுத்துவதில் அவசரம் காட்ட வேண்டாம் - ஆசிரியர் கூட்டணி அறிவுறுத்தல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, April 02, 2021

Comments:0

அஞ்சல் வாக்கு செலுத்துவதில் அவசரம் காட்ட வேண்டாம் - ஆசிரியர் கூட்டணி அறிவுறுத்தல்

தபால் வாக்குகள் செலுத்துவதில் அவசரம் காட்டுவதால் குளறுபடிகள் ஏற்பட்டு வாக்குகள் செல்லாதவையாக வாய்ப்புகள் உள்ளது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட நிர்வாகிகள் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: சிவகங்கை மாவட்டத்தில் நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குப்பதிவு மையங்களில் வாக்குப்பதிவு அலுவலர்களாக 7 ஆயிரத்து 312 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவர்கள் வாக்களிக்க வசதியாக தபால் வாக்குகள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது தேர்தல் பயிற்சி நடைபெறும் மையங்களிலேயே தபால் வாக்குகள் செலுத்துவதில் ஆசிரியர்கள் அவசரம் காட்டி வருகின்றனர். கடந்த 26ம் தேதி நடந்த தேர்தல் பயிற்சி வகுப்பில் அளிக்கப்பட்ட தபால் வாக்குகளை உடனடியாக செலுத்துவதில் ஆர்வம் காட்டியதால் பல்வேறு குளறுபடிகளும், குழப்பங்களும் ஏற்பட்டது. தேர்தல் பணியாற்ற உள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் அனைவரும் தங்கள் தபால் வாக்குகளை வாக்களிக்கும் தினத்திற்கு முன்னதாகவே விண்ணப்பித்து பெற வேண்டும். அதன் பின்னால் விண்ணப்பிக்க இயலாது. ஆனால் வாக்களிக்க மே 2ம் தேதி காலை 8 மணி வரை கால அவகாசம் உள்ளது. தேர்தல் பணியாற்ற உள்ள ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அஞ்சல் வாக்குச்சீட்டு உறையில் 13ஏ உறுதிமொழி படிவம், ‘ஏ’ குறியிட்ட 13பி உறை, ‘பி’ குறியிட்ட 13சி உறை, வழிகாட்டி குறிப்புகள் அடங்கிய 13டி படிவம், தொடர் எண் அச்சடிக்கப்பட்ட சம்பந்தப்பட்ட சட்டமன்ற தொகுதியின் வாக்குச்சீட்டு ஆகியவை வழங்கப்பட்டிருக்கும். வழிகாட்டி குறிப்பு அறிந்துகொள்ள மட்டுமே. அதை திருப்பி அனுப்ப தேவையில்லை. இதில் உறுதிமொழி படிவத்தில் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாக்குச்சீட்டின் தொடர் எண், பெயர் மற்றும் முகவரியை எழுதி கையொப்பம் இட வேண்டும். அதன்பின் அந்த படிவத்தில் உரிய அலுவலரிடம் சான்றொப்பம் பெற வேண்டும். அதன்பின் வாக்குச்சீட்டின் தொடர் எண்ணை ‘ஏ’ உறையின் மேல் எழுத வேண்டும். வாக்களித்த வாக்குச்சீட்டை ‘ஏ’ குறியிட்ட உறையினுள் வைத்து ஒட்டிவிட வேண்டும். அதன்பின் வாக்குச்சீட்டு உள்ள ‘ஏ’ குறியிட்ட உறையையும், உறுதிமொழி படிவத்தையும் ‘பி’ குறியிட்ட உறையினுள் வைத்து ஒட்டிவிட வேண்டும். ‘பி’ உறையின் மீது கண்டிப்பாக கையொப்பம் இட வேண்டும். மேற்கண்ட பணிகளை நிறைவு செய்தவுடன் தங்களது வாக்கினை வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி மையங்களில் வைக்கப்பட்டுள்ள சம்பந்தப்பட்ட தொகுதியின் வாக்குப்பெட்டியிலோ, சம்பந்தப்பட்ட தொகுதியின் தாலுகா அலுவலகங்களிலோ அல்லது அஞ்சலகம் வழியாகவோ செலுத்தலாம். மேற்கண்ட வழிமுறைகளை பின்பற்றாமல் அவசரமாக வாக்களிப்பதால் வாக்குகள் செல்லாதவையாக போவதற்கு வாய்ப்புகள் உள்ளன. இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews