திருக்குறளில் இருந்து நெடுநல்வாடை வரை: தமிழ் மனப்பாடப் பாடல்களைக் காணொலியாக்கிக் கற்றுத் தரும் அரசுப் பள்ளித் தமிழாசிரியர் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, November 28, 2020

Comments:0

திருக்குறளில் இருந்து நெடுநல்வாடை வரை: தமிழ் மனப்பாடப் பாடல்களைக் காணொலியாக்கிக் கற்றுத் தரும் அரசுப் பள்ளித் தமிழாசிரியர்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பள்ளிக்கூடப் பாடத்தில் இருக்கும் தமிழ் மனப்பாடப் பாடல் பகுதியில் வரும் பாடல்களுக்குச் சொந்தமாக இசையமைத்து, பாடல் பாடி, வீடியோவாக வெளியிட்டு கற்றலின் மீதான ஆர்வத்தைத் தூண்டி வருகிறார் வேலூரைச் சேர்ந்த ஆசிரியர் சுந்தர்ராஜ். இது மாணவ, மாணவிகள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுவருகிறது.
நடிகர், நடிகைகள் வாய் அசைப்பில் ஏதோ ஒரு திரைப்படப் பாடல் ஓடினால் கூட அது சிலருக்கு விருப்பப் பாடல் ஆகிவிடுகிறது. இப்படியான சூழலில் தமிழ்ப் பாடத்தில் 'மனப்பாடப் பாடல்' பகுதியில் வரும் பாடல்களை மாணவர்கள் மனப்பாடம் செய்வதை எளிமையாக்கும் வகையில் அதற்கு அர்த்தம் சொல்லிக் கொடுத்துவிட்டு பாடல் வடிவில் அதைப்பாடி அசத்துகிறார் சுந்தர்ராஜ். 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை இருக்கும் தமிழ் மனப்பாடப் பகுதியைப் பாடல் வடிவில் வெளியிட்டுள்ள சுந்தர்ராஜ், தொடர்ந்து 8-ம் வகுப்பு மனப்பாடப் பாடலை வீடியோவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். வேலூர், சலவன்பேட்டை மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் எஸ்.சுந்தர்ராஜ் இதுகுறித்து 'இந்து தமிழ்' இணையதளத்திடம் கூறுகையில், ''ஆரம்பத்தில் வேலூர் ஹோலிகிராஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 8 ஆண்டுகள் தமிழ் ஆசிரியராக இருந்தேன். மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் வேலை கிடைத்து 22 ஆண்டுகள் ஆகின்றன. இப்படி மொத்தமாக 30 ஆண்டுகள் ஆசிரியப் பணி அனுபவம் இருக்கிறது. எனது அப்பா சத்தியநாதனும் ஆசிரியராக இருந்து ஓய்வுபெற்றவர். எனது அம்மா நன்றாக பாட்டுப் பாடுவார்கள். இசையிலும் அம்மாவுக்கு ஆழ்ந்த ஞானம் இருந்தது. அம்மாவிடம் இருந்து எனக்கும் சின்ன வயதிலேயே சங்கீத ஞானம் வந்தது. ஐந்தாம் வகுப்புப் படிக்கும்போது இருந்தே பள்ளியின் இலக்கிய மன்றப் போட்டிகள், மாவட்ட அளவில் நடைபெறும் பாட்டு, இசைப் போட்டிகளில் கலந்துகொள்ளத் தொடங்கினேன். நேரு, பாரதியார் பிறந்த நாளுக்கு தேசபக்திப் பாடல் பாடச்சொல்லிப் போட்டி வைப்பார்கள். அதில் பலமுறை பரிசு பெற்று இருக்கிறேன். இதேபோல் தேவாலயத்துக்குப் போகும்போது அங்கும் பாட்டுப் பாடுவேன். இசைக்கருவிகளையும் அங்குதான் வாசிக்கத் தொடங்கினேன். பாண்டிச்சேரி அகில இந்திய வானொலியிலும் பாடியிருக்கிறேன். மேடை நிகழ்ச்சி, ஆர்கெஸ்ட்ரா எனத் தொடர்ந்து பாடிக்கொண்டே இருக்கிறேன். இதனால் ஆசிரியரான எனக்கும், இசைக்கும் ஆழ்ந்த தொடர்பு ஏற்பட்டுவிட்டது. வகுப்பறையில் தமிழ் மனப்பாடப் பாடலைச் சொல்லிக் கொடுக்கும்போதே பாடலாகப் பாடிக் காட்டித்தான் சொல்லிக்கொடுப்பேன். மனப்பாடப் பாடலைச் சாதாரணமாகப் பாடத்திட்டமாகப் படிப்பதைவிடப் பாடல் வடிவில் சொல்லிக் கொடுப்பது அவர்களுக்குக் கூடுதல் உற்சாகத்தைக் கொடுக்கிறது. என்னிடம் கல்வி பயின்ற சில மாணவர்கள் படிப்பு முடிந்து வேலைக்குச் சென்ற பின்னரும்கூட வழியில் எங்காவது என்னைப் பார்த்தால் அந்த மனப்பாடப் பாடலைப் பாடலாகவே பாடிக் காட்டுவார்கள். மனப்பாடப் பகுதியை வெறும் மனனம் செய்யும் பகுதியாக இல்லாமல் மாணவர்கள் உற்சாகமாக எதிர்கொள்ளவே பாடலாகப் பாட ஆரம்பித்தேன். இப்போது அதன் அடுத்தகட்டமாக அதை வீடியோ வடிவிலும் வெளியிட்டு வருகிறேன். இதற்கு நானே மெட்டுப் பிடித்து, இசையமைத்து, பாடலாகவும் பாடுகிறேன். 5டி தரத்தில் இந்தக் காணொலிகளை உருவாக்கி வெளியிட்டு வருகிறேன். திருக்குறளில் இருந்து நெடுநல்வாடை வரை அனைத்தும் ஒவ்வொரு வீடியோவாகப் பாடல் வடிவில் இருக்கிறது. தமிழில் குறுந்தொகையில் 'யாயும் ஞாயும்' என்னும் பாடல் உண்டு. அதன் சில வரிகளை வைத்துக்கொண்டு ‘யாயும் ஞாயும்’ எனத் தொடங்கும் சினிமாப் பாடல் வந்தது. அது குறுந்தொகையின் வரிகள் எனத் தெரியாமலே பலரும் காலர் ட்யூன் வைத்தனர். இங்கே இலக்கியம் செழிக்க இசையும், பாடல் வடிவமும் தேவையிருக்கிறது என்பதைத்தான் இது காட்டுகிறது. அதேபோல இந்தப் பாடல்களும் மாணவர்களுக்கு மனப்பாடம் செய்வதைப் போல் மனதிலும் பதியும் என்னும் சிறு முயற்சியே இது! எனது இந்த முயற்சிகளுக்கு மனைவி நளினி, மகன் ரிச்சர்ட் ராஜ், மகள் ஹேலு மீனா ஆகியோரும் மிகுந்த ஒத்துழைப்பு கொடுக்கின்றனர்'' என்றார் ஆசிரியர் சுந்தர்ராஜ்.
பாடல்களைக் காண:CLICK HERE 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews