கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் கடந்த கல்வியாண்டு முழுமையாக நிறைவு பெறாமல் பள்ளிகள் இழுத்து மூடப்பட்டன. பொதுத்தேர்வுகளை கூட முழுமையாக நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. புதிய கல்வி ஆண்டிற்காக ஜூன் ஒன்றாம் தேதி பள்ளிகள் திறக்க வேண்டும். ஆனால் இன்னும் இரண்டு மாதங்களுக்கு பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகும் நிலையே தற்போது உருவாகியுள்ளது. 10ஆம் வகுப்பு மாணவர்கள் வரை ஆல் பாஸ் என அரசு அறிவித்துவிட்டது. இதேபோல் 11 ஆம் வகுப்பிற்கு நடத்தப்படாத 3 தேர்வுக்கு மட்டும் ஆல் பாஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 தேர்வு மட்டும் நடத்தி முடிக்கப்பட்டு விடைத்தாள் திருத்தும் பணியும் நிறைவு பெற்றுள்ளது.
இந்நிலையில் அதிகாரப்பூர்வமாக 1 முதல் 11ம் வகுப்பு வரை மாணவர்கள் அடுத்தநிலை வகுப்பிற்கு செல்வது உறுதியாகி உள்ளதால் தமிழகத்தில் பல்வேறு தனியார் பள்ளிகள் தங்கள் மாணவர்களுக்கு நவீன தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி பாடங்களை நடத்துவதற்கான களத்தில் இறங்கி விட்டன. பல தனியார் பள்ளிகளில் ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கு வாட்ஸ்அப் குரூப் ஏற்படுத்தி அடுத்த நிலை வகுப்பிற்குரிய பாடங்களை பகலில் குறிப்பிட்ட நேரங்களில் கற்றுத் தருகின்றனர். மேலும் பல பள்ளிகள் செயலிகளை உருவாக்கி மாணவர்களுக்கு நேரலையாக பாடங்களை கற்றுத் தருகின்றன.
ஆன்லைன் மூலம் நடத்தப்படும் இந்த முயற்சிக்கு ஓரளவு பலன் கிடைப்பதாக தெரியவந்துள்ளது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் நீர்த்து போயுள்ளன. இதனால் 2 மாதமாக வீடுகளில் முடங்கி இருந்த தனியார் பள்ளிகளின் மாணவர்கள் தற்போது ஆசிரியர்கள் கற்றுத்தரும் பாடங்களை நவீன தொழில்நுட்பங்கள் மூலம் நேரடியாக கற்கத் துவங்கியுள்ளனர். ஆனால் இவை அனைத்தும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே சாத்தியமாகியுள்ளது. தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளியில் பயிலும் லட்சக்கணக்கான மாணவர்களுக்கு இதுபோன்ற எந்த கல்விச்சேவையும் கிடைக்கவில்லை. அரசு தற்போதைக்கு தனது ஒரே சேவையாக கல்வி தொலைக்காட்சி மூலம் பாடங்களை நடத்துகிறது.
இது மாணவர்களை ஒருமுகப்படுத்தி பார்க்க வைக்கும் அளவிற்கு அமையவில்லை. சில அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் கற்றுத் தருவது போல் அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் வரை இணையதள சேவை மூலம் வகுப்பறை உருவாக்கி பாடங்களை நடத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு கல்வியாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. ஆசிரியர்கள் தரப்பில்: தமிழகத்தில் தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகளில்தான் அதிக ஏழை மாணவர்கள் பயில்கின்றனர். கிராமப்புற மாணவர்கள் அரசுப் பள்ளிகளை மட்டுமே நம்பி பயில்கின்றனர்.
தற்காலிக தீர்வாக ஆன்லைன் கல்வியை தனியார் பள்ளிகள் வழங்குவது போல் அரசு பள்ளி மாணவர்களுக்கும் வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை கண்டறிய அரசு உடனடியாக தனி குழு அமைக்க வேண்டும். உரிய ஆய்வு செய்து விரைவில் அதை அமல்படுத்துவது அரசுப்பள்ளி ஏழை மாணவர்களின் எதிர்காலத்திற்கு நல்லதாக இருக்கும். 1ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் நவீன தொழில்நுட்ப கல்வி வசதிகளை அரசு செய்து கொடுக்க வேண்டும். கொரோனா சூழல் காரணமாக மாணவர்கள் வீட்டிலிருந்தே கல்வி கற்க அரசு அனைத்து மாணவர்களுக்கும் இலவச கல்வி திட்டங்களை வழங்குவது போல் ‘டேப்லட் பிசி’ வழங்கும் வாய்ப்பை உருவாக்கினால் மாணவர்கள் வீட்டிலிருந்து ஆசிரியர்களை தொடர்பு கொண்டு கல்வி கற்க முடியும். சில கிராமப்புறங்களில் நெட்வொர்க் சேவை சரியாக கிடைப்பதில்லை.
எனவே அதற்கான வசதிகளையும் முன்னதாக ஏற்படுத்துவது அவசியம். ‘டேப்லெட் பிசி’ கொடுக்கும்போது மாணவர்கள் கல்வி கற்பதற்கு மட்டும் பயன்படும் வகையில் அதற்கான வசதிகளை தொழில்நுட்ப முறையில் ஏற்படுத்திக் கொடுக்கலாம். இதனால் அதை மாணவர்கள் தவறாக பயன்படுத்தும் வாய்ப்பு ஏற்படாது பெற்றோர் தரப்பில்: நாங்கள் காலையிலேயே விவசாய பணிக்கு சென்று விடுவோம். மாலையில்தான் வீடு திரும்புவோம். மாணவர்களின் எதிர்காலம் கருதி படிப்புக்காக கஷ்டப்பட்டு பணம் சேர்த்து ஸ்மார்ட் போன் வாங்கி கொடுத்தாலும், நகர்ப்புற மாணவர்களுக்கு கிடைக்கும் தொழில்நுட்ப கல்வி வசதி எங்களைப் போன்ற சிறு கிராம மக்களுக்கும் கிடைக்காது.
அரசுதான் இதற்கு நல்ல தீர்வு காண வேண்டும். பள்ளிக்கு மாணவர்கள் செல்ல மேலும் சில மாதம் ஆகும் என்ற நிலை ஏற்பட்டால் கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாடங்களை பயிற்றுவிக்க ஏதாவது திட்டத்தை அரசு அறிவிக்க வேண்டும். மாணவர்கள் தரப்பில்: ஆன்லைன் வகுப்பில் பாடம் பயின்ற முன் அனுபவம் எங்களைப் போன்ற கிராமப்புற மாணவர்கள் மத்தியில் வகுப்பே தொடங்காத நிலையில் பத்தாம் வகுப்பிற்கு உரிய பாடங்களை பயில வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது. ஸ்மார்ட்போன் வசதி உள்ள பெற்றோர் வேலைக்கு செல்கையில் அதை கையில் எடுத்துச் சென்றால் வீட்டிலிருக்கும் மாணவர்கள் பகல் நேரத்தில் ஆன்லைன் வகுப்பில் பயில முடியாது. எனவே பள்ளி திறக்கும் வரை தனியார் பள்ளி மாணவர்கள் போல் நாங்களும் வீட்டிலிருந்தே பாடம் கற்க அரசு ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தால் ஆர்வமுடன் படிக்க தயாராக இருக்கிறோம்.
தமிழகத்தில் தற்போது பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் பல்வேறு தனியார் பள்ளிகள் சமூக ஊடகங்கள், இணைய தளம் மூலம் தங்கள் மாணவர்களுக்கு கல்வி சேவையை தொடங்கியுள்ளன. அதே நேரத்தில் பல லட்சம் அரசுப்பள்ளி மாணவர்கள் இந்த கல்வி சேவை கிடைக்காமல் தவிக்கின்றனர். இதற்கான வாய்ப்பை அரசு உருவாக்க வேண்டும் என கல்வியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
மாணவ மாணவிகள் ஸ்மார்ட்போன் உள்ளிட்டவைகளை பயன்படுத்தி பாடம் கற்கும் போது இடையிடையே 18 வயதுக்கு உட்பட்டவர் பார்க்கக்கூடாது சில விளம்பரங்களும் வரலாம். எனவே முன்னெச்சரிக்கையாக ஸ்மார்ட்போனில் Play store சென்று Settingsல் ‘Parent control’ option ஐ ‘on’ செய்யவேண் டும்.அதன் கீழே உள்ள ‘Apps and Games’ ஐ கிளிக் செய்து ‘12+’ல் டிக் செய்ய வேண்டும். அடுத்ததாக Movies ஐ கிளிக் செய்து ‘U’ என்பதை டிக் செய்யவும். அதேபோல் ‘YOU TUBE’ settings ல் ‘Restriction mode’ ஐ On செய்யவும். இதனால், நம் குழந்தைகளின் smartphoneல், தேவையற்ற விளம்பரம் மற்றும் Video குறுக்கிடாமல் பயன்படுத்துவதற்கு பாதுகாப்பானதாக இருக்கும் என கணினி தொழில்நுட்ப பொறியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.